அமெரிக்காவை கலக்கும் மிளகாய் "ஸ்ப்ரே!'

"என்னது, மிளகாய் ஸ்ப்ரேயா...?' என்று தானே ஆச்சரியப்படுகிறீர்கள்! உண்மை தான்! அமெரிக்காவில், இது சமீபத்தில் விற்பனைக்கு வந்துள்ளது, சைனஸ், மூக்கடைப்பு போக்க வந்துள்ள வல்லமை பெற்ற மருந்துதான் மிளகாய் ஸ்ப்ரே. ஒரு சொட்டு, மூக்கில் அடித்துக் கொண்டால், மூக்கடைப்பு எல்லாம் போயே போச்...!

இருமல், சளியை போக்க டாக்டர்கள் தரும் மருந்து, மாத்திரையில் உள்ள ரசாயனம், "காய் பென்சின்' என்பது. அந்த ரசாயனம், தொட்டாலே காரமெடுக்கும் பச்சை மிளகாயில் உள்ளது. அலர்ஜியை போக்க விற்பனையாகும் ஸ்ப்ரே, லோஷன், சிரப் எல்லாவற்றிலும், இந்த ரசாயனம் உள்ளது.

அமெரிக்காவில், வேறு எந்த கோளாறையும் முந்திவிட்டது சுவாசக் கோளாறு. அதிலும், அலர்ஜி காரணமாக பாதிக்கப்படுவோர் கோடி கணக்கில்! அவர்களுக்கு, "ஹாச்...உச்...' என்றால், உடனே மூக்கடைப்பு வந்துவிடும். சிலருக்கு எப்போதும் சைனஸ் தொல்லை உண்டு. இவர்கள் எப்போதும், மருந்து, மாத்திரையை நம்பித்தான் இருக்கின்றனர். அதனால், இருமல், சளி சிரப், மருந்து, மாத்திரைகள் அமோக விற்பனை. மருத்துவ பேராசிரியர் இர்வின் சிமந்த் கூறுகையில், "செயற்கையாக ரசாயனங்களிலிருந்து தயாரிக்கப்படும் இருமல் சிரப், மாத்திரை, மருந்திலாவது, பக்க விளைவுகள் இருக்கும்; ஆனால், மிளகாயில் தயாரிக்கப்படும் ஸ்ப்ரேயில், எந்த பக்க விளைவும் இல்லை. நுரையீரலில் சளி சேருவதற்கு காரணம் அலர்ஜி; அப்படி சளி சேருவதை தடுக்க உதவும் ரசாயனம், மிளகாயில் இயற்கையாகவே இருப்பதால் நல்ல பலன் தருகிறது!' என்றார்.

அமெரிக்க சூப்பர் மார்க்கெட்களிலும், மருந்துக்கடைகளிலும் பிரபலமாக விற்கப்படுவது சினோல் நாசல் ஸ்ப்ரே, சைனஸ் பஸ்டர் ஆகிய இரு மிளகாய் மருந்துகளை மூக்கடைப்பு உள்ளவர்கள், இரண்டு சொட்டு விட்டுக் கொண்டால் போதும்... மாயமாக போய்விடும் அடைப்பு. இந்த மருந்துகளை தயாரித்த வெய்ன் பெர்ரி கூறுகையில், "பச்சை மிளகாய் மிகவும் காரமாக இருக்கும். மூக்கில் விட்டால் எரியத் தானே செய்யும். ஆனால், அதில் மகத்தான மருத்துவ குணம் உள்ளது. எனக்கு அடிக்கடி தலைவலி, சளி, இருமல் தொல்லை, மூக்கடைப்பு உண்டு. ஆனால், நான் மிளகாயை பயன்படுத்தியதை அடுத்து, பாதிப்பு வரவே இல்லை. அதனால் தான், மிளகாய் ஸ்ப்ரேயை உருவாக்கினேன். இப்போது பல லட்சம் பேருக்கு பலன் தருகிறது; பணமும் கொட்டுகிறது!' என்றார்.

"இயற்கையான சத்து என்பதால், மிளகாய் ஸ்ப்ரே, மூக்கடைப்பு போன்ற அலர்ஜி கோளாறுகளுக்கு உடனடி தீர்வாக உள்ளது. எல்லா அலர்ஜி பாதிப்புகளுக்கும் இதை பயன்படுத்தலாம்!' என்று நியூயார்க் மருத்துவ ஆராய்ச்சி மைய பேராசிரியர் டாக்டர் ஆலென் பிரஸ்மன் கூறினார்.


தினமலர்-வாரமலர் 19-08-2007

வரலாற்று சம்பவங்களை விளக்க புது யுக்தி : தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் அறிமுகம்

சென்னை : வரலாற்றுச் சம்பவங்களால் நேரில் பாதிக்கப்பட்டவர்கள் மூலமாக அச்சம்பவங்களை விளக்கி வரலாற்றை எடுத்துரைக்கும் முறையை தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் (என்.சி.இ.ஆர்.டி.,) கையாண்டுள்ளது.

தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் வரலாற்றை எடுத்துரைக்க புதுமையான முயற்சியை கையாண்டுள்ளது. வாய்மொழி கதைகள், வரலாற்று குறிப்புகள், டைரிகள், நேரடி கையெழுத்து ஆவணங்கள் மூலமாக வரலாற்றை கற்பிக்க தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் முயற்சித்துள்ளது. இந்த ஆண்டு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு "இந்திய வரலாற்று கட்டுரைகள்பகுதி மூன்று' என்ற புத்தகத்தை என்.சி.இ.ஆர்.டி., அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், 1947ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் பிரிவினையால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகத்தில் "பிரிவினையை புரிந்து கொள்ளுவது' என்ற தலைப்பில் ஒரு பாடம் இடம் பெற்றுள்ளது. இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்களின் நேரடி அனுபவங்கள் இடம் பெற்றுள்ளன. பிரிவினையின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் நேரடியாக பாதிக்கப்பட்ட மூன்று பாகிஸ்தானியர்களின் அனுபவங்கள் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. லாகூர் பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் நூலகராக பணியாற்றிய அப்துல் லத்தீப் என்பவரை 1993ம் ஆண்டு என்.சி.இ.ஆர்.டி., ஆய்வாளர் சந்தித்து அவரது அனுபவத்தை பெற்றுள்ளார். அப்துல் லத்தீப், 1947ம் ஆண்டு ஜம்முவில் நடந்த கலவரத்தின் போது தனது தந்தைக்கு இந்து மூதாட்டி தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்து காப்பாற்றியதாக குறிப்பிட்டுள்ளார். லாகூர் இளைஞர் விடுதியின் மேலாளரான இக்பால் அகமதுவின் அனுபவமும் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் 1950ம் ஆண்டுகளில் கிளார்க்காக பணியாற்றி இக்பால் அகமது, தான் பாகிஸ்தானில் இருந்து வந்திருப்பதை அறிந்து, தனக்கு அறிமுகமில்லாத சீக்கியர் தன்னை கட்டித் தழுவி நட்புணர்வை வெளிப்படுத்தியதை விவரித்துள்ளார்.


தினமலர், 20-08-2007

முக்கியத்துவம் பெறும் அகல ரயில் பாதை: நூற்றாண்டை நோக்கி பாம்பன் பாலம்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம்இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து மற்றும் புதிய துறை முகங்களால் அகல ரயில் போக்குவரத்து இன்னும் முக்கியத்துவம் பெற வாய்ப்பு உள்ளது.

ஆங்கிலேயர்களால் 1914 ல் மண்டபம் ராமேஸ்வரம் இடையே துவக்கப்பட்ட மீட்டர் கேஜ் ரயில் போக்குவரத்தில் சென்னை போட் மெயில், கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ், சேது எக்ஸ்பிரஸ், மதுரை பாசஞ்சர், திருப்பதி எக்ஸ்பிரஸ், மண்டபம் வாட்டர் டேங்க் என பல ரயில்கள் ஓடியது.

வியாபார நிமித்தமாகவும், இலங்கைக்கு இணைப்பு ஏற்படுத்துவதற்காகவும் துவக்கப்பட்ட ரயில் போக்குவரத்துக்கு, இடையூறாக இருந்த பாம்பன் கடல் மீது 1913 ல் கட்டப்பட்ட ஸ்ஜெட்ஜர் பாலம் நூற்றாண்டை கடக்க உள்ள வேளையில் ராமேஸ்வரம் கோயில் முக்கியத்துவம் கருதியும், சேது சமுத்திர கப்பல் கால்வாய், நாட்டின் பாதுகாப்பு போன்ற முக்கிய அம்சத்துக்காகவும் மத்திய அரசு மதுரை ராமேஸ்வரம் அகல ரயில் திட்டத்தை ரூ 240 கோடியில் நிறைவேற்றியுள்ளது. பாம்பன் கடலில் அமைந்துள்ள ரயில் பாலம், இந்திய தொழில் நுட்பத்தால் அகல ரயில் பாலமாக மாற்றப்பட்டது. இதற்காக மட்டும் ரூ. 24 கோடி செலவிடப்பட்டது.தென் இந்திய ரயில்வே பாலங்கள் முதன்மை இன்ஜினியர் சின்ஹா தலைமையில் 10 மாத காலத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டது. அதன்படி 92 ஆண்டுகளுக்கு பின் கடந்த 12.8.2007 ல் ராமேஸ்வரம் மானாமதுரை அகல ரயில் பாதை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ராமேஸ்வரத்திலிருந்து இப்பாலத்தின் வழியாக சென்னைக்கு முதல் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. மதுரை மற்றும் சென்னைக்கு முதல் கட்டமாக தற்போது 3 ரயில்கள் இயக்கப்படுகிறது. ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் பணிகள் முடிந்ததும் காசி, புவனேஸ்வர், மும்பை, டில்லி,கோல்கட்டா போன்ற நகரங்களுக்கு ரயில்களை இயக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வடமாநிலங்களிலிருந்து யாத்திரை வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் சிரமமின்றி நீண்ட தூரம் ரயிலில் பயணம் செய்ய முடியும். சேது சமுத்திரம் திட்டம், ராமேஸ்வரம்இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து, தனுஷ்கோடிக்கு மீண்டும் ரயில் போக்குவரத்து, புதிய துறைமுகங்கள் போன்ற திட்டங்களும் செயல்வடிவம் பெறும் போது அகல ரயில் போக்குவரத்து இன்னும் முக்கியத்துவம் பெறும். ராமேஸ்வரம் கடல் பகுதி பாதுகாப்பு அம்சத்திலும் கூடுதல் முக்கியத்துவம் பெறும்.


தினமலர், 19-08-2007

சேதுக்கால்வாய் தோண்டும் பணியால் கடல் பகுதி சுற்றுச்சூழல் பாதிக்காது - சென்னை பல்கலை துணை வேந்தர் தகவல்

ராமேஸ்வரம் : சேதுக்கால்வாய் தோண்டும் பணி நடைபெறுவதால் தனுஷ்கோடி கடல் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. 2008 நவம்பரில் கால்வாய் தோண்டும் பணி முடிவடையும் என சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

சேதுசமுத்திர கால்வாய் தோண்டும் பணியினால் கடலில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் குறித்த கண்காணிப்பு குழு உறுப்பினர்களின் கூட்டம் நேற்று ராமேஸ்வரத்தில் நடந்தது. சேதுசமுத்திர கப்பல் கால்வாய் திட்டத்தின் இயக்குனர் சுரேஷ் (பொறுப்பு), சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு தலைவர் ராமச்சந்திரன் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த 15 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தற்போது மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடலில் நடந்து வரும் கால்வாய் தோண்டும் பணிகள் குறித்தும், சுற்றுச்சூழல் மாற்றங்கள் குறித்தும் பேசப்பட்டது. சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு தலைவரும், சென்னை பல்கலைக்கழக துணை வேந்தருமான ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது. தனுஷ்கோடி கடலில் மணல் தூர் வாரும் பணியில் ரஷ்ய நாட்டை சேர்ந்த கப்பல் வொர்ஜினா உட்பட 3 கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. கடலில் தோண்டவேண்டிய 89 பில்லியன் கியூபிக் மீட்டரில் இதுவரை 24 பில்லியன் கியூபிக் மீட்டர் மணல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. கால்வாய் தோண்டப்படும் பகுதியில் கடல்நீர் மற்றும் மண்ணின் தன்மை குறித்து தினமும் 12 மணி நேரம் கண்காணிக்கப்படுகிறது.தோண்டும் பகுதியையொட்டிய கடற்கரைபகுதியில் கடல் நீரோட்டம் மற்றும் ஏற்ற தாழ்வுகளும் வாரத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படுகிறது. கடலில் வாழும் நுண்ணுயிரிகளுக்கு எந்தபாதிப்பும் இல்லை. கடல் சுற்றுச்சூழல் என்பது கடலில் உருவாவதை விட நிலப்பகுதியில் இருந்து செல்லும் கழிவுகளால்தான் அதிகளவில் கடல் சுற்றுச்சூழல் பாதிக்படுகிறது. ராமேஸ்வரம், மண்டபம், தொண்டி, தேவிபட்டினம், பாம்பன் உட்பட 11 இடங்களில் ஆய்வு மையம் ஏற்படுத்தப்பட்டு கடல் வளம், கடல் உயிரின பெருக்கம் குறித்து சர்வே செய்யப்பட்டதில் மீன்வளம் கடந்த காலத்தை விட அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இத்திட்டம் குறிப்பிட்ட காலவரையறைக்குள் பணிகள் முடிந்து 2008 நவம்பர் மாதத்திற்குள் நிறைவடையும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கண்காணிப்பு இன்ஜினியர் மாணிக்கம், ராமேஸ்வரம் அலுவலக பொறுப்பு இன்ஜினியர் முத்துஉடையார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தினமலர், 19-08-2007

கல்வித் துறை அமைச்சர்கள், அதிகாரிகள் கல்வியாளர்களிடம் பாடம் படிக்க வேண்டும் : ராமதாஸ் யோசனை

சென்னை : "தரமான கல்வியை கொடுப்பது எப்படி, அமல்படுத்துவது எப்படி என்பது குறித்து, கல்வித் துறை அமைச்சர்களும், அதிகாரிகளும் வாரத்திற்கு நான்கு மணி நேரம் கல்வியாளர்களிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்,'' என்று பா.ம.க., தலைவர் ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.

பசுமைத் தாயகம் மற்றும் சமூக கல்விக்கான அறக்கட்டளை ஆகியவை இணைந்து, "பொதுப்பள்ளி முறை மற்றும் அருகாமைப் பள்ளி முறை' குறித்து சென்னையில் நேற்று கருத்தரங்கு நடத்தியது. இதில், பா.ம.க., தலைவர் ராமதாஸ் பேசியதாவது:கல்வி, பாடத் திட்டங்கள் எல்லாமே தலை கீழாக உள்ளது. இதற்கு ஒரு யோசனை சொல்லலாம் என்றால் பயமாக இருக்கிறது. இருந்தாலும் சொல்கிறேன். மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுப்பது எப்படி, அந்த திட்டத்தை அமல்படுத்துவது எப்படி என்பது குறித்து, கல்வித்துறை அமைச்சர்களும், அதிகாரிகளும் வாரத்திற்கு நான்கு மணி நேரம் கல்வி அறிஞர்கள் குழுவிடம் பாடம் கற்க வேண்டும். மாணவர்கள் சிறந்து விளங்குவதற்கு தமிழ் வழிக் கல்வி தான் சிறந்தது. நாங்கள் எல்லாம் தமிழ் வழியில் தான் படித்தோம். வெள்ளைக்காரன் காலத்தில் தமிழ் வழி கல்வி தான் உயர்ந்த நிலையில் இருந்தது. அவன் போனபிறகு ஆங்கிலம் உயர்ந்த நிலைக்கு வந்து விட்டது.வீட்டில் தேவைப்பட்டால் தமிழ் பேசுகிற நிலை இருக்கிறது. இப்படி பேசினால் ஆங்கில விரோதி, தமிழ் வெறியன் என்றெல்லாம் பேசுகின்றனர். ஆங்கிலம் வேண்டாம் என்று கூறவில்லை. அனைத்துப் பள்ளிகளிலும் குறிப்பிட்ட வகுப்புகள் வரை தமிழை பயிற்று மொழியாக அறிவிக்கலாம். தற்போதுள்ள கல்வி முறையால் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு தமிழும் முழுமையாக தெரியவில்லை; ஆங்கிலமும் முழுமையாக தெரியவில்லை. இது தான் உண்மை. ஒருமொழிக் கொள்கை உன்னதக் கொள்கை. ஒரு மொழியை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே இருமொழிக் கொள்கை கொண்டு வரப்பட்டது. இருமொழிக் கொள்கை, தமிழை விரட்டி விட்டது.தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான ஆரம்பப் பள்ளிகளையும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளாக மாற்ற வேண்டும். ஏதாவது ஒரு வகையில் அவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும். அப்போது தான் அவர்களை கட்டுப்படுத்த முடியும். பொதுப்பள்ளி முறை மற்றும் அருகாமை பள்ளி முறையை கொண்டு வர வேண்டும். மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பொதுப்பள்ளி முறை தான் அமலில் இருக்கிறது. பிரதமர் வீட்டு குழந்தைகளும், சாதாரண ஏழை வீட்டு குழந்தைகளும் ஒரே பள்ளியில் படிக்கின்றனர். அந்த நிலை இங்கு வர வேண்டும். கட்டாயக் கல்வி, கட்டணமில்லாத கல்வி, தரமான கல்வி, அனைவருக்கும் கல்வி ஆகியவை தேவை.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.முன்னாள் துணைவேந்தர்கள் முத்துக்குமரன், வசந்திதேவி மற்றும் கல்வியாளர் ராஜகோபால் ஆகியோரும், பொதுப்பள்ளி மற்றும் அருகாமை பள்ளி முறைகளின் அவசிய தேவை குறித்து விரிவாக பேசினர்.


தினமலர், 19-08-2007

பழநி அருகே பாண்டியர் கால குடவறை கண்டுபிடிப்பு

பழநி : பழநி அருகே பாண்டியர் கால குடவறை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்திய பண்பாட்டு துறையின் முன்னாள் மாணவர் நாட்டுத்துரை, மாணவர்கள் தங்கதுரை, ரங்கநாயகன், பழனியாண்டவர் கல்லூரியின் முதல்வர் ஜெயபாலன், பேராசிரியர் வைரவேல் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.பழநியில் இருந்து வட கிழக்கில் 22 கி.மீ., துõரத்தில் கூத்தம்பூண்டியான் வலசில் உள்ள மாயவன் மலை பாறையின் அடிப்பகுதியில் ஒரு முற்றுப்பெறா குடவறை காணப்பட்டது.

இது திண்டுக்கல் மாவட்டத்தில் முதன் முறையாக கண்டறியப்பட்ட குடவறை என்பது சிறப்பு அம்சமாகும். இக்குடவறையானது தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது 10.5 மீட்டர் நீளத்திலும், 4 மீட்டர் உயரத்திலும் குடையப்பட்டுள்ளது. பாறையினை 60 செ.மீ., வரை உள்நோக்கி குடைந்து அதில் 4 தூண்களையும் அமைத்து ஏதோ ஒரு காரணத்தினால் முற்றுப்பெறாமல் உள்ளது. இதன் காலத்தை கணக்கிட கல்வெட்டுகளோ , வேறு ஆதாரங்களோ கிடைக்கவில்லை. ஆனாலும் இது பாண்டியர் கால குடவறை மரபினை சேர்ந்ததாக காணப்படுகிறது. முதலில் குடவறை அமைப்பதற்கான "மாதிரி செதுக்கு படிவ முறை' கையாளப்பட்டதற்கான அமைப்பு முறையானது 7.80 மீட்டர் நீளத்திலும், 2.75 மீட்டர் உயரத்திலும் குடவறையின் வலது பக்கத்தில் காணப்படுகிறது.


தினமலர், 19-08-2007

பெரியாறு அணை அருகே புதிய அணை - அமைதி காக்கும் தமிழக அரசு

கூடலூர் : பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட கேரள அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், தமிழக அரசு எவ்வித எதிர் நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருப்பது விவசாயிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீர்மட்டத்தை உயர்த்துவது என்பது கேள்விக்குறியாகியுள்ள நிலையில் அணையில் இருந்து மேலும் கூடுதல் நீர் எடுக்க புதிய திட்டங்களை தீட்டி உடனடியாக செயல்படுத்த தமிழக அரசு முன் வர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.1895ல் கட்டப்பட்ட பெரியாறு அணை தமிழ்நாட்டில் உள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. 152 அடி உயரம் கொண்ட இந்த அணை 15.5 டி.எம்.சி., நீர் கொள்ளளவு கொண்டது. இதில் 104 அடிக்கு மேல் உள்ள நீரை மட்டுமே தமிழ்நாடு பயன்படுத்த முடியும். கிட்டத்தட்ட 9 டி.எம்.சி., நீரை பயன்படுத்துவதில்லை. பெரியாறு அணையில் 104 அடிக்கு மேல் உள்ள நீரை விவசாயம் தவிர மின் உற்பத்திக்கும் குடிநீருக்கும் பயன்படுத்தப்படுகிறது. பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியான 9 ஆயிரத்து 777 சதுர கி.மீ.,க்கும், நீர் தேங்கியுள்ள 8 ஆயிரம் ஏக்கருக்கும் குத்தகைத் தொகையாக ரூ.40 ஆயிரத்தை கேரள அரசிற்கு ஆண்டுதோறும் தமிழக அரசு செலுத்தி வந்தது. 1960க்குப் பின்பு குத்தகை தொகை உயர்த்தி ரூ.2 லட்சத்து 57 ஆயிரத்து 789 ஐ ஆண்டுதோறும் செலுத்தி வருகிறது.

பாசனப்பரப்பு: பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீர் லோயர்கேம்பில் பெரியாறு நீர் மின்நிலையத்தில் மின் உற்பத்தி செய்யப்பட்ட பின்னர் பெரியாறு வழியாக வைகை அணையை சென்றடையும். வைகை அணையில் இருந்து பேரணை வழியாக மேலூர், சோழவந்தான், நிலக் கோட்டை, செக்கானூரணி, திருமங்கலம், திருப்பத்தூர், கள்ளந்திரி, திருப்புவனம், சிவகங்கை, இடையமேலூர், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்கிறது. இதன் மொத்த பாசனப்பரப்பு 2 லட்சத்து 8 ஆயிரத்து 144 ஏக்கராகும். இந்த நீரின் மூலம் 65 லட்சம் மக்கள் நேரடியாகவும், ஒரு கோடி மக்கள் மறைமுகமாகவும் பயன்பெற்றனர்.


தமிழக அரசின் கவனக்குறைவு: பெரியாறு அணை நீர்மூலம் தமிழ்நாட்டின் தென்பகுதியில் இரு போக விவசாயம், குடிநீர், மின்சார உற்பத்தி என திருப்திகரமாக இருந்த நிலையில் 1979ல் பெரியாறு அணை பலமிழந்து விட்டதாக கேரள அரசு புகார் கூறத் துவங்கியது. இந்த புகாரைத் தொடர்ந்து ரூ.பல கோடி மதிப்பீட்டில் அணையை தமிழக அரசு பலப்படுத்தியது. பலப்படுத்தும் பணி முடிவடையும் வரை அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக நிலைநிறுத்துவது எனவும், பணி முடிவடைந்தவுடன் மீண்டும் 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என கூறப்பட்டது. பலப்படுத்தும் பணி முடிவடைந்தபின்பும் பல்வேறு புகார்களைக் கூறி நீர் மட்டம் உயர்த்துவதை கேரள அரசு தடுத்தது. இதனால் பெரியாறு அணை நீரை நம்பி இருந்த தென் தமிழகத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒரு போக சாகுபடியாகவும், தரிசு நிலங்களாகவும் மாறின. தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கிய பின்னரும் நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசு மேலும் பல புதிய புகார்களைக் கூறி தடுத்து வருகிறது. பெரியாறு அணை பலவீனம் அடைந்து விட்டது என கேரள அரசு முதன்முதலில் புகார் கூறத் துவங்கியதில் இருந்து தற்போது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையும் கேரள அரசு ஏற்றுக் கொள்ளாத நிலை வரை தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை எதுவும் இல்லாததால் நீர்மட்டத்தை உயர்த்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.

136க்கு மேல் உயர்த்த முடியுமா?: பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு என அனைத்து அம்சங்களும் தமிழ்நாட்டிற்கு சாதகமாக இருந்து வந்த நிலையில் கேரள அரசின் இடைஞ்சல்களால் நீர்மட்டத்தை உயர்த்த முடியாத நிலையில் தமிழக அரசு உள்ளது. இனிமேலும், நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்து விட முடியுமா என்பதில் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் 136 அடிக்கு மேல் நீர்மட்டம் உயராமல் இருக்கும் வகையில் தமிழகப்பகுதிக்கு மேலும் கூடுதல் நீர் எடுக்க புதிய திட்டத்தை வழிவகுக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

தமிழகப்பகுதிக்கு நீர் எடுக்கும் வழிகள்: பெரியாறு அணையில் இருந்து தமிழகப்பகுதிக்கு 4 ராட்சத பைப் மூலம் மின் நிலையம் வழியாகவும், இறைச்சல் பாலம் வழியாகவும் நீர் எடுக்க முடியும். ராட்சத பைப்புகளில் தலா 400 கன அடி வீதம் 4 பைப்புகளில் ஆயிரத்து 600 கன அடி நீர் எடுக்கலாம். இவ்வாறு முழு அளவில் நீர் எடுக்க வேண்டுமெனில் 4 ஜெனரேட்டர்களும் பழுது ஏற்படா வண்ணம் எப்போது மின் உற்பத்தி செய்யும் வகையில் இருக்க வேண்டும். ஜெனரேட்டர் பழுது ஏற்பட்டால் நீர் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டு விடும்.


பாலைவனவாக மாற உள்ள தென்தமிழகம்: பெரியாறு அணைப் பிரச்னையில் 136 அடிக்கு மேல் உயர்த்தக்கூடாது என்பது கேரளாவின் கோரிக்கை. 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியும் அதை செயல்படுத்த முடியாத நிலையில் உள்ள தமிழக அரசு. தமிழக கேரள அரசுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள இந்த பிரச்னையால் பெரியாறு அணை நீரை நம்பியுள்ள தென் தமிழகம் பாலைவனமாக மாறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. பல்வேறு கட்சியினரும், அமைப்புகளும், பொதுமக்களும் அவ்வப்போது போராட்டம் நடத்துவதோடு சரி. அதன்பின்பு அந்த விஷயத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படுவதில்லை. இதை அரசும் கருத்தில் கொள்வதில்லை. இதனால், பெரியாறு அணை நீரை எவ்வளவு அதிகமாக தமிழகப்பகுதிக்கு எடுக்க முடியுமோ அதற்கான புதிய திட்டத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்.

நீரை சேமிக்க அணைகள் இல்லை: பெரியாறு அணையில் இருந்து கூடுதல் நீர் எடுக்க நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். அதே வேளையில் தென் தமிழகத்தில் நீரை சேமிக்க போதிய அளவு அணைகள் இல்லாதது. வேதனையான விஷயம். 1958ல் தேனி மாவட்டத்தில் வைகை அணை கட்டப்பட்டது. நீரை சேமிப்பதற்காக கட்டப்பட்ட இந்த ஒரு அணையிலும் தற்போது 25 அடி வரை வண்டல் மண் தேங்கியுள்ளதால் கூடுதல் தேக்கப்படும் நீரின் கொள்ளளவும் குறைந்துள்ளது. பெரியாறு அணையில் இருந்து திறந்து விடும் நீரை சேமிக்கும் அளவிற்கு கடந்த 50 ஆண்டுகளில் வைகை அணையைத் தவிர எந்த அணையும் தென்தமிழகத்தில் கட்டப்படவில்லை. மதுரை அருகில் உள்ள விரகனூர் அணையும், பார்த்திபனூர் அணையும் வரும் நீரை தடுக்க மட்டுமே முடியும் வகையில் உள்ள தடுப்பணையாகத்தான் உள்ளதே தவிர வைகை அணை போல் நீரைத் தேக்கி வைக்கும் அளவுக்கு இல்லை. கர்நாடகா காவேரியில் இருந்து வரும் நீர் தேக்கி வைக்க கபிணி, ஹேலங்கி உட்பட 7 அணைகள் கட்டியுள்ளது. ஆனால், தமிழகத்தில் பிரச்னைக்குரிய பெரியாறுஅணை நீரை சேமிக்க எந்த அணையும் கட்ட தமிழக அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது. இந்த நிலை இப்படியே போனால் தென் தமிழகம் விரைவில் பாலைவனமாக மாற உள்ளதை தடுக்க முடியாது.

அரசியல்வாதிகள் என்ன செய்கிறார்கள்: பெரியாறு அணை நீரை நம்பியுள்ள பாசனப்பகுதிகளான கம்பம், தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, மதுரை கிழக்கு, மேற்கு, மத்திய தொகுதி, மேலூர், நத்தம், சோழவந்தான், திருமங்கலம், சமயநல்லூர், திருப்பரங்குன்றம், திருப்பத்தூர், சிவகங்கை, ராமநாதபுரம், நிலக்கோட்டை, மானாமதுரை, திண்டுக்கல், பரமக்குடி, சேடப்பட்டி ஆகிய சட்டசபை தொகுதியில் உள்ள 21 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். பெரியகுளம், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 லோக்சபா தொகுதி எம்.பி.,க்கள் உள்ளனர்.

இவர்களில் ஒரு சில எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் அவ்வப்போது போராட்டம் நடத்தி விட்டு கப்சிப் என இருந்து விடுகின்றனர். இவர்கள் தவிர எண்ணிலடங்கா அரசியல்பிரமுகர்கள் தொடர் நடவடிக்கை எதிலும் இறங்காமல் எனக்கென்ன என்று மவுனமாக இருக்கின்றனர். கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளைப் பொறுத்தவரை ஏலம், மிளகு, காப்பி, ரப்பர் ஆகிய விவசாயங்களை கேரளாவில் அதிக அளவில் செய்து வருகின்றனர். பெரியாறு அணைப் பிரச்னையை கையில் எடுத்து போராடினால் கேரளாவில் உள்ள தங்களது விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடும் என ஒதுங்கியே உள்ளனர்.பிரச்னைக்கு தீர்வு: ஒரு சில எம்.எல்.ஏ.,க்கள், ஒரு சில அரசியல்வாதிகள், ஒரு சில கட்சியினர், ஒரு சில விவசாயிகள் என போராட்டம் நடத்திக் கொண்டிருந்தால் இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படாது.

புதிய அணை கட்ட நடவடிக்கை: பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டியே தீருவோம் என கங்கணம் கட்டிக் கொண்டு கேரள அரசு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. கேரள சட்டசபையில் இதற்கான தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது. புதிய அணை கட்டுவதற்கு ரூ.260 கோடி ஒதுக்கீடு செய்து அதற்கான ஆய்வுப் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது. ஆனால் தமிழக அரசு சார்பில் எவ்வித சலனமும் இல்லாமல் அமைதியாகவே உள்ளது. தமிழக அரசின் இந்த அமைதி நடவடிக்கை தமிழக விவசாயிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 136 அடிக்கு மேல் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு காலதாமதம் ஆகும் பட்சத்தில் அணையில் இருந்து மேலும் கூடுதல் நீர் எடுக்க என்ன வழி உள்ளது என்பதை தமிழக அரசு ஆராய்ந்து அதற்கான உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


கேரள அரசு என்ன சொல்கிறது?: 1976ம் ஆண்டு கேரள அரசு இடுக்கி அணையைக் கட்டியது. 555 அடி உயரம் கொண்ட இடுக்கி அணை, பெரியாறு அணையை விட 4 மடங்கு பெரியது. இடுக்கி அணையில் 800 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட நீர்மின் நிலையத்தையும் கட்டியது. இடுக்கி அணை கட்டுவதற்கு முன்பு வரை பெரியாறு அணை பிரச்னையின்றி இருந்தது. இடுக்கி அணையில் மின் உற்பத்திக்கு நீர்பற்றாக்குறை ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த 1979ல் பெரியாறு அணை பலவீனம் அடைந்து விட்டது என கேரள அரசு புகார் கூறத் துவங்கியது. பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் உள்ள நீரை இடுக்கி அணைக்கு கொண்டு சென்று விடலாம் என்ற திட்டத்தில் புகார்களை கேரள அரசு அடுக்கிக் கொண்டே வருகிறது.பெரியாறு அணை பலவீனம் அடைந்து விட்டது என தொடர்ந்து புகார் கூறி வரும் கேரள அரசு, 136 அடிக்கு கீழ் உள்ள நீரை தமிழகம் எடுக்க எவ்வித கட்டுப்பாடும் விதிக்கவில்லை. எவ்வளவு நீர் வேண்டுமென்றாலும் தமிழகம் எடுத்துக் கொள்ளட்டும் என ஒவ்வொரு முறையும் பெரியாறு அணையைப் பார்வையிட வரும் கேரள அமைச்சர்கள், அதிகாரிகள் கூறிக் கொண்டுதான் உள்ளனர். பெரியாறு அணையில் இருந்து 136 அடிக்கு கீழ் உள்ள நீரை மேலும் ஒரு சுரங்கம் அமைத்து கூடுதல் நீரை எடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டால் இப்பிரச்னைக்கு முடிவு வந்து விடும் என இடுக்கி மாவட்ட ஐ.என்.டி.யு.சி., யின் தலைவராக இருந்த பி.ஏ.ஜோசப் சில ஆண்டுகளுக்கு முன்பு கேரள அமைச்சர்கள் மற்றும் கேரள அதிகாரிகளின் முன்னிலையில் பகிரங்கமாக கூறினார். அவரின் கருத்தை கேரள தரப்பில் இதுவரை எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. அதனால் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை ஒரு பக்கம் இருந்தாலும், தமிழகப்பகுதிக்கு மேலும் கூடுதல் நீர் எடுக்க என்ன செய்ய வேண்டும் என ஆராய்ந்து அதை மேற்கொள்ளவேண்டியது தமிழக அரசின் அவசியமாகும்.

தினமலர், 19-08-2007

எலும்பு மஜ்ஜை செல்களை பயன்படுத்தி புற்றுநோயை குணப்படுத்த நவீன சிகிச்சை : ஆய்வு நடத்த ஜப்பான் மருத்துவ மாணவிகள் வருகை

சென்னை : எலும்பு மஜ்ஜை உள்ளிட்ட உடலின் சில பாகங்களில் இருந்து எடுக்கப்படும் செல் களை பயன்படுத்தி நோய் களுக்கு சிகிச்சை அளிக்கும் ‘ரீ ஜெனரேட்டிவ் மெடிசின்’ குறித்து ஆய்வு நடத்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவிகள் சென்னை வந்துள்ளனர்.

புற்றுநோய், நீரிழிவு உள்ளிட்ட உடலில் ஏற்படும் நோய்களுக்கு ‘ரீ ஜெனரேட்டிவ் மெடிசின்’ (மறு உற்பத்தி மருத்துவம்) முறையில் சிகிச்சை அளிக்கும் ஒரு புதிய தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நோய் காரணமாக பாதிக்கப் பட்ட செல்களை அகற்றிவிட்டு, புதிய செல்கள் மூலம் நோயை தீர்ப்பதற்கு இம்முறை பெரிதும் உதவும்.

இதன்படி, நோயினால் பாதிக்கப்பட்ட நபரின் எலும்பு மஜ்ஜையில் இருந்து குறிப்பிட்ட செல்லை பிரித் தெடுத்து, அது ஆய்வகத்தில் வளர்க்கப்படும். பின்னர், செல்கள் நோயாளியின் பாதிக்கப்பட்ட உடல் உறுப்பில் பொருத்தப்படும். அங்கு செல்கள் பெருகி, பாதிப்பை குணப் படுத்தும். இம்முறையின் கீழ் புற்றுநோய், நீரிழிவு, முதுகு தண்டுவட பாதிப்பு உள்ளிட்ட பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.சென்னையில் உள்ள என்.சி.ஆர்.எம்., நிறுவனம், ஜப்பான் நாட்டின் யமனாஷி பல்கலைக்கழத்துடன் இணைந்து ‘ரீ ஜெனரேட்டிவ் மெடிசின்’ குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த புதிய மருத்துவ முறை குறித்த விஷயத்தில் இணைந்து செயல்படும் வகையில் யமனாஷி பல் கலைக்கழகமும், என்.சி. ஆர்.எம்., நிறுவனமும் கடந்த 2007ம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டன. இதன் படி, ‘ரீ ஜெனரேட்டிங் மெடிசின்’ குறித்த தொழில் நுட்ப விஷயங்களை யமனாஷி பல்கலைக் கழகம் வழங்கும். மருத்துவ சிகிச்சையில் என்.சி.ஆர்.எம்., நிறுவனம் கவனம் செலுத்தும்.

இப்புதிய முறை குறித்து என்.சி.ஆர். எம்., நிறுவனத்தின் இயக்குனர் சாமுவேல் ஆப்ரகாம் கூறுகையில், “கடந்த ஆண்டு யமனாஷி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பிரிவு நிபுணர்கள் சென்னை வந்து, ‘ரீ ஜெனரேட்டிவ் மெடிசன்’ குறித்து ஆய்வுகள் நடத்தினர். தற்போது, அப்பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஏழு மாணவிகள் சென்னை வந்துள்ளனர். இவர்கள் இங்குள்ள மருத்துவமனைகளுக்கு சென்று, அங்கு தரப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் அறிந்து கொள்கின்றனர்” என்றார். பிரபல இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சுப்ரமணியம் கூறுகையில், “புற்றுநோய், நீரிழிவு, முதுகு தண்டுவடம் உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ‘ரீ ஜெனரேட்டிவ் மெடிசின்’ தொழில் நுட்பம் பெரிதும் உதவும். இம்முறையில் எக்காரணம் கொண்டும் பிற ‘புரோட்டீன்’கள் பயன் படுத்தப்படுவதில்லை. பிராணிகள் மற்றும் அடுத்தவர்களின் செல்கள் பயன்படுத்தப்பட மாட்டாது. நோயாளிகளின் பெற்றோர், உறவினர்களின் செல்கள் கூட பயன் படுத்துவதில்லை. நோயினால் பாதிக்கப் பட்டவரின் செல்களை பயன்படுத்தி மட்டுமே சிகிச்சை அளிக்கப் படுகிறது' என்றார்.


தினமலர், 19-08-2007

மோப்ப நாய்களின் நிலை படுமோசம்

புதுச்சேரி: வழக்குகளில் குற்றவாளிகள் குறித்து துப்பு துலக்குவதற்கு போலீசாருக்கு மோப்ப நாய்கள் பெரும் உதவி புரிகின்றன. பல முக்கிய வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிவதில் மோப்ப நாய்களின் பங்கு பெரிய அளவில் இருந்துள்ளது.

புதுச்சேரி போலீஸ் துறையில் பராமரிக்கப்பட்டு வந்த உஷா என்ற மோப்ப நாய் உள்ளிட்ட மூன்று நாய்கள் வயது முதிர்வு காரணமாக சமீபத்தில் ஏலம் விடப் பட்டன. உஷாவை ஏலத்தில் எடுத்த நபர், அதை தனது சாராய கடை பாதுகாப்பில் ஈடுபடுத்தினார்.

இங்கு சரிவர உணவு வழங்காததாலும், உரிய பராமரிப்பு இல்லாததாலும் நலம் குன்றிய மோப்ப நாய் உஷா, உணவுக்காக தட்டாஞ்சாவடி, சண்முகாபுரம் மார்க்கெட் பகுதியில் சுற்றி திரிந்த போது, 10க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து அதை கடித்து குதறின. பரிதாபப்பட்ட ஒருவர், உஷாவை மீட்டு தன் வீட்டில் வைத்து பராமரித்து வருகிறார். மக்களுக்காக உழைத்து, ஓடாகிப் போன மோப்ப நாய்களை ஏலம் விடாமல், அரசே இறுதி வரை பராமரித்தால் இந்த அவல நிலை ஏற்படாது.

செய்திக்கட்டுரை, தினமலர், 18-08-2007

மூளையில் பொருத்தப்படும் எலக்ட்ரோடுகள்

கோமா நிலையில் உள்ளோர், மூளையின் பாதிப்பால் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு மூளையில் எலக்ட்ரோடுகளைத் தூண்டினால் நல்ல மாற்றங்கள் ஏற்படுவதாக "நேச்சர்' என்ற அறிவியல் பத்திரிகையில் வந்த ஆய்வு கட்டுரை தெரிவிக்கிறது. ஆனால் இந்த எலக்ட்ரோடு தூண்டும் சிகிச்சை தரப்படும் போது மிகக் குறைந்த அளவாவது ஞாபசக்தியும், செயல்பாடும் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே மூளையில் எலக்ட்ரோடைப் பொருத்தும் சிகிச்சை வெற்றி பெறுகிறது.

எலக்ட்ரோடைத் தூண்டுவதினால் தடைபட்ட பேச்சு வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. கை, கால் விரல்களின் செயல்பாடும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பார்க்கின்சன் நோயாளிக்கு செய்யப்படும் இந்த சிகிச்சை தற்போது கோமா ஸ்டேஜில் உள்ளவர்களுக்கு செய்யப்படுகிறது.

அறிவியல் ஆயிரம், தினமலர், 18-08-2007

சாய் சப் செண்டர் நெல்லைக்கு மாற்றம்! குமரி விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு பேரணி

நாகர்கோவில்: ராஜாக்கமங்கலத்திலிருந்து நெல்லைக்கு சாய் சப் சென்டரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் அனைத்து கிராம மக்கள் சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலத்தில் மத்தியில் பா.ஜ.க ஆட்சியின் போது இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை பயிற்சி மையம் (சாய் சப் சென்டர்)அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.அதற்காக மாநில அரசின் சார்பில் சாய் சப் சென்டருக்கு 53 ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டது.அதனை தொடர்ந்து சாய் சப் சென்டருக்கு ராஜாக்கமங்கலத்தில் அலுவலகம் திறக்கப்பட்டது.அதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடந்தது.தற்போது சாய் சப் சென்டர் நெல்லைக்கு கொண்டு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சாய் சப் சென்டர் நெல்லைக்கு கொண்டு செல்ல கன்னியாகுமரி மாவட்டத்தில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.வரும் 10 ம் தேதி(செப் 10)முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.நேற்று கன்னியாகுமரி மாவட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் அனைத்து கிராம மக்கள் சார்பில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்திற்கு அர்ஜூனா விருது பெற்ற கபடி வீரர் ராஜரெத்தினம் தலைமை வகித்தார்.மாவட்ட கபடி கிளப் அவைத்தலைவர் எஸ்.சதாசிவன், ராஜாக்கமங்கலம் பஞ்.,தலைவர் ராமகிருஷ்ணன், மாவட்ட கபடி கிளப் தலைவர் பூபதி, யூனியன் கவுன்சிலர் சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.டி.பச்சைமால், குமாரதாஸ், மாவட்ட வாலிபால் கழக இணை செயலாளர் ஆர்.கிருஷ்ணதாஸ், செயலாளர் செல்லசிவலிங்கம், கபடி கிளப் துணைத் தலைவர் கணேசன், சாய் சப் சென்டர் நடவடிக்கை குழு பொதுச் செயலாளர் எம்.சுயம்பு, துணைத் தலைவர் நடராஜன் உட்பட பலர் பேசினர். முன்னாள் பஞ்.,தலைவர்கள் முருகன், தங்கராஜ், பூமதி, கவுன்சிலர் கலைச்செல்வி, தர்மலிங்க உடையார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.மாவட்ட கபடி கிளப் செயலாளர் சுபாஷ் நன்றி கூறினார்.

(தினமலர். 17-08-2007)

துவங்கியது அத்தம் இனி பூக்களின் காலம்...

மார்த்தாண்டம்: ஓணப்பண்டிகைக்கு முன்னோடியாக அத்தப்பூ கோலமிடுதல் இன்று (17ம் தேதி) முதல் துவங்குகிறது. இனி வரும் நாட்கள் குமரி, கேரள பகுதிகளில் வீடுகளுக்கு முன்னால் அழகிய அத்தப்பூ கோலங்கள் இடும் பணியில் பெண்கள் ஈடுபடுவார்கள். ஆடி மாதம் என்பது மழைக்காலம். ஆடி மழையில் குளிர்ந்து தளிர்க்கும் செடிகள் ஆவணி மாதம் பூக்கத் துவங்கும். இந்த காலத்தை பூக்களின் காலம் என்றே சொல்லலாம். அதனால் இந்த காலத்தில் வரும் ஓணத்திருவிழாவை பூக்களின் திருவிழா என்று குறிப்பிடுவது மிகையாகாது. ஓணத் திருவிழாவின் முக்கிய அம்சமே அத்தத்தில் துவங்கி பத்து நாட்கள் பூக்களால் அலங்கரித்து போடப்படும் அத்தப்பூ கோலம் தான். அத்தம் முதல் ஒன்பது நாட்களுக்கு மகாபலியை நினைவுகூறவும் பத்தாவது நாள் மகாவிஷ்ணுவை நினைவு கூறவும் அத்தப்பூ கோலம் போடப்படுகிறது என்பது நம்பிக்கை.அதிகாலையில் எழுந்திருக்கும் பெண்கள் குளித்துவிட்டு வீட்டு முற்றத்தை கூட்டி சுத்தம் செய்து தினமும் விதவிதமான வண்ண மலர்களால் அத்தப்பூ கோலம் போடுவர். பூ பறிக்க செல்ல சில சட்டதிட்டங்கள் உள்ளன. அதிகாலை எழுந்து குளித்து நெற்றியில் திலகமிட்டு சுத்தமான ஆடை அணிந்து பூ பறிக்க செல்லவேண்டும்.கன்னியாகுமரி மாவட்டம் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் பூத்துக்குலுங்கும் பூக்கள் ஓணப்பண்டிகைக்காக கேரளா சென்று குவியும். ஓணக்காலத்தில் பல இனம் பூக்கள் பூத்தாலும் ஓணப்பூ, தும்பைப் பூ, காசிப்பூ, அரிப்பூ, சங்குபுஷ்பம் போன்ற பூக்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. முதல் நாளில் ஒரு களம், இரண்டாவது நாள் இரண்டு களம்...இப்படி பத்தாவது நாளாகிய ஓணம் நாளில் பத்து களங்கள் இடப்படும்.மற்ற நாட்கள் எப்படி போட்டாலும் பத்தாவது நாளாகிய ஓணம் அன்று பத்து களங்கள் போடவேண்டும். முதல் களத்தில் விநாயகர், இரண்டாவதில் சக்தி, மூன்றாவதில் சிவன், நான்காவதில் பிரம்மா, ஐந்தாவதில் பஞ்ச பூதங்கள், ஆறாவதில் முருகன், ஏழாவதில் குரு, எட்டாவதில் அஷ்டதிக் பாலகர், ஒன்பதாவதில் இந்திரன், பத்தாவதில் விஷ்ணு இப்படி பத்து களங்களிலும் இறை வடிவங்கள் பிரதிஷ்டிக்கப்படுகின்றன.

பிற பகுதிகளில்: கேரளாவில் பூக்களின் திருவிழாவாக ஓணம் கொண்டாடப்படுவது போல வேறு பல நாடுகளிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் பூக்களின் திருவிழா கொண்டாடப்படுகிறது.

ஓணத்தை போன்ற ஒரு திருவிழா தாய்லாந்தில் கொண்டாடப்படுகிறது. புத்தாண்டின் முதல் ஐந்து நாட்கள் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. ஓணத்திற்கு செய்வதை போல புத்தாடைகள் அணிந்து வீட்டை பூக்களால் அலங்கரித்து பல்வகை உணவுகளை சமைத்து உண்டு மகிழ்வர். கேரளாவின் புலி விளையாட்டுடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு ஆட்டமும் உண்டு.

வங்காளத்தின் வைசாகி திருவிழாவும் ஒரு பூத்திருவிழா தான். இந்த திருவிழா காலத்தில் குழந்தைகள் பல இடங்களுக்கும் சென்று பூக்கள் சேகரிப்பர். புத்தாண்டு இனியும் வரட்டும் என்று பாடல்கள் பாடி அந்த பூக்களால் மாலைகள் கோர்த்து கழுத்தில் அணிந்து மகிழ்வர். வங்காள கிராம பெண்கள் பூக்களின் வடிவில் பலகாரங்கள் செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழ்வர்.


(தினமலர். 17-08-2007

உலகை உலுக்கிய தாக்குதல் - ஹிரோஷிமா தினம்

ஹிரோஷிமா மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்கியதன் நினைவு நாள் இன்று(06-08-2007) உலகமெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது.

"லிட்டில் பாய்' எனும் 60 கிலோ எடையுள்ள அணுகுண்டை சுமந்து வந்த பி29 ரக "எனோலா கெய்' என்ற அமெரிக்க விமானம், 1945 ஆக., 6ல் காலை 8.15க்கு ஹிரோஷிமா நகரின் மையப் பகுதியை நோக்கி உலகின் முதல் அணுகுண்டை வீசியது. இது, நான்கு சதுர மைல் அளவுக்கு அழிவை ஏற்படுத்தியது. அடுத்த சில மணி நேரங்களுக்கு ஹிரோஷிமாவில் நடந்தது என்ன என்பதே ஜப்பானுக்கு தெரியவில்லை. பேரழிவு நிகழ்ந்திருப்பதை மட்டும் அறிந்து கொள்ள முடிந்தது. தாக்குதல் நடத்தப்பட்ட நேரத்தில் ஏறத்தாழ மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் அந்த பகுதியில் வசித்தனர். இவர்களும் உயிரிழக்க நேரிடும் என தெரிந்த போதும், ஜப்பானை பணிய வைக்க வேண்டும் என்ற எண்ணமே அமெரிக்காவுக்கு மேலோங்கி இருந்தது. குண்டு வீசப்பட்டு 16 மணி நேரம் கழித்து அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமேன், ஜப்பான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தியதாக அறிவித்தார். இதன் பிறகே, ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டது ஜப்பான் உட்பட உலக நாடுகளுக்கு தெரிய வந்தது. 1945 ஆக., 9ல் நாகசாகி மீதும் அணு ஆயுத தாக்குதல் நடத்தியது அமெரிக்கா. அமெரிக்காவின் இந்த தாக்குதலால், இரு நகரங்களும் முற்றிலுமாக நிலைகுலைந்தன. ஏறத்தாழ ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். கதிர்வீச்சு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 30 ஆயிரத்தை எட்டியது. இதனையடுத்து, ஆக., 10ம் தேதி சரணடைவதாக ஒப்புக்கொண்டது ஜப்பான். யுத்தத்தில் அணு ஆயுதம் பயன்படுத்தப்பட்டது இதுவே முதன்முறையாகவும், கடைசி முறையாகவும் இருந்தது. அமெரிக்காவின் தாக்குதலின் பின்னணியில் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அணு ஆயுதத்தால் எவ்வளவு அழிவு ஏற்படும் என்பதை அதை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கே புதிராக இருந்ததால், அதை பரிசோதிக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கருதப்படுகிறது. வலுவான நிலையிலிருந்த ஜப்பான் பின்வாங்கிய பிறகும், அமெரிக்கா தாக்குதல் நடத்தியது கேள்விகளை எழுப்பியது. மேலும், பல ஜப்பான் நகரங்களில் அணு ஆயுத தாக்குதல் நடத்த அமெரிக்க திட்டமிட்டது பின்னர் தெரிய வந்தது. "போரினால் ஏற்கனவே ஜப்பான் அழிந்திருந்தது. அந்த நாடே முடங்கிப் போயிருந்தது. அதை அழிக்க அணுகுண்டே தேவைப்படவில்லை' என இந்த சம்பவத்தை பற்றி குறிப்பிடுகிறார் மறைந்த பிரிட்டன் பிரதமர் சர்ச்சில். உலக நாடுகளின் அனுதாபத்தை ஜப்பானுக்கு தேடித் தந்த நிகழ்ச்சி இது. அணு ஆயுதத்தின் பயங்கரத்தை உலகம் உணர்ந்து கொள்ளும் விதமாக அமைந்தது ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் நிகழ்ந்த பேரழிவு சம்பவம்.

- இன்று(06-08-2007) ஹிரோஷிமா தினம்


(தினமலர், 06-08-2007)

டாடா நிறுவன ஆலை செயல்படாதது ஏன்?: - நயினார் நாகேந்திரன் விளக்கம்

திருநெல்வேலி: டாடா ஆலை தொடர்பாக கலெக்டர் அறிக்கையில் கூறியிருந்தது என்ன என்பது குறித்து முன்னாள் தொழில்துறை அமைச்சர் நயினார் நாகேந்திரன் விளக்கமளித்தார். நெல்லையில் நடந்த அ.தி.மு.க.,பொதுக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: தமிழகத்தில் தொழில்வளம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக டாடா ஆலையை கொண்டுவர அப்போதைய முதல்வர் ஜெயலலிதா முயற்சி மேற்கொண்டார். இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டது. இதற்காக இரண்டு முறை கூட்டங்கள் நடத்தப்பட்டன. டாடாவுக்கு 16 ஆயிரம் ஏக்கர் நிலம் வேண்டும் என்றனர்.

ஆண்டுக்கு இரண்டு லட்சம் டன் இல்மனைட் தாதுவை வெட்டி எடுப்போம் என்றனர். அதிலும் 50 ஆயிரம் டன் இல்மனைட்டைத் தான் டைட்டானியம் டை ஆக்சைட் தயாரிக்க பயன்படுத்த போவதாகவும் மீதமுள்ள இல்மனைட்டை அப்படியே வெளிநாட்டிற்கு அனுப்ப போவதாகவும் கலெக்டர் அறிக்கையில் தெரிவித்தார். டாடா மூலம் கனிமவளங்கள் வெளிநாட்டுக்கு கொண்டு செல்லப்படும் என அறிக்கை மூலம் தெரியவந்தது. எனவே அந்த திட்டம் விவாத நிலையிலேயே நின்றுபோனது. டாடா எதிர்பார்க்கும் 16 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் வைகுண்டராஜன் ஏற்கனவே சில ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். எனவே இதுதொடர்பாக நடந்த விவாத கூட்டங்களில் வைகுண்டராஜன் பங்கேற்றார். நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் தான் முழுமையாக நிலங்களை கையகப்படுத்தி தந்தோம். அதை இத்தனை ஆண்டுகளாக செயல்படுத்தாதது ஏன்.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேசினார்.


(தினமலர், 06-08-2007)

நாட்டில் 32 ஆயிரம் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட படிக்கவில்லை

புதுடில்லி: நாட்டில் பள்ளிகளுக்கு பற்றாக்குறை இருக்கும் அதே நேரத்தில், 32 ஆயிரம் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட படிக்காத நிலையும் நீடிக்கிறது என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

கல்வி திட்டம் மற்றும் நிர்வாகம் குறித்த தேசிய பல்கலைக்கழகம் (நியூபா),"இந்தியாவில் துவக்கக்கல்வி 2005 06' என்ற தலைப்பில், ஆய்வு நடத்தியது. நாட்டில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படும் 11 லட்சத்து 24 ஆயிரத்து 33 பள்ளிகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டில் 2.92 சதவீத பள்ளிகளில், அதாவது, 32 ஆயிரம் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட படிக்கவில்லை. இதில், 15 ஆயிரத்து 791 பள்ளிகள், துவக்கப் பள்ளிகள். மற்றவை, நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள். இந்த பட்டியலில் கர்நாடகா தான் முன்னணியில் உள்ளது. அங்குள்ள, ஏழாயிரத்து 945 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட படிக்கவில்லை. மேலும், 69 ஆயிரத்து 353 பள்ளிகளில்,ஒவ்வொரு பள்ளியிலும், 25 மாணவர்களுக்கு குறைவாகத் தான் படிக்கின்றனர். ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 888 பள்ளிகளில், 26 முதல் 50 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். நாட்டில் உள்ள 23 ஆயிரம் பள்ளிகளில், ஒரே ஒரு ஆசிரியர் கூட இல்லை. அதே சமயம், 1.3 லட்சம் பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டும் பணியில் உள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வை மேற்கொண்ட சைலேந்திர சர்மா என்ற பேராசிரியர் கூறுகையில், "இவ்வாறு ஆயிரக்கணக்கான பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேராமல் இருப்பதற்கு முக்கிய காரணம், அந்த பள்ளிகளில் ஒரு ஆசிரியர் கூட இருக்க மாட்டார் அல்லது ஆசிரியர் அல்லாத உதவியாளர்கள் தான் பாடம் நடத்துவர்' என்றார்.


(தினமலர், 06-08-2007)

பாதி விலையில் அதிசய வீடு எந்த பேரழிவையும் தாங்கும் மின், குடிநீர் இணைப்பும் தேவையில்லை

புதுடில்லி: மனிதனாலும், இயற்கையாலும் ஏற்படும் அழிவை எதிர்கொள்ளக்கூடிய வீடுகளை டில்லி முனிசிபல் கவுன்சிலுக்கு கட்டித்தர முன்வந்துள்ளது ஜெர்மன் நாட்டை சேர்ந்த, "கிரானைட் ரெசின்' நிறுவனம்.

இந்த வீடுகள், தீ பற்றாதவை, பூகம்பத்தை தாங்கக்கூடியவை, வெள்ளம் வந்தால் தண்ணீரில் மிதக்கக்கூடியவை, எரிமலைகுழம்புகளையும் தாங்க வல்லவை.

இதில் சிறப்பம்சம், ஒரே நாளில் ஒரு வீட்டை கட்டிவிட முடியும்; செங்கல் மற்றும் கான்கிரீட் வீடுகளை விட பாதி செலவு தான் ஆகும். இந்த வீடுகளுக்கென தனியாக மின் இணைப்போ அல்லது குடிநீர் இணைப்போ தேவையில்லை. இந்த வீடே இவற்றை தானாக உற்பத்தி செய்து கொள்ளும் என்பது இன்னொரு சிறப்பம்சம். வழக்கமாக கடைப்பிடிக்கும் முறைப்படி செங்கற்களால் இந்த வீட்டின் சுவர்கள் கட்டப்படுவதில்லை. தேவையான நீள, அகலத்துக்கு தயாரிக்கப்படும் சுவர்கள், வீடு கட்டப்பட உள்ள இடத்துக்கு எடுத்து சென்று, அப்படியே பொருத்தப்படும். இந்த சுவர்கள் நவீன தொழில் நுட்பத்தின் கீழ், தனித்தன்மையுடன் வடிவமைக்கப்படுகின்றன. சுவர் மூன்று அடுக்குகளை கொண்டதாக இருக்கும். நடுப்பகுதியில் பஞ்சு போன்ற மின்கடத்தா பொருள் உள்ளது. மற்ற இரண்டு அடுக்குகளும், சணல் நார் மற்றும் கண்ணாடி இழைகளை கொண்டு தயாரிக்கப்படும், "கிரானைட் ரெசின்' என்ற பொருளால் தயாரிக்கப்படுவது.

இந்த சுவர், எல்லா வகையான தட்ப வெப்ப நிலையையும் எதிர்கொள்ளக்கூடிய திறன் கொண்டது. சுவர்களை நிறுத்தி, ஒரு சுவருடன் இன்னொரு சுவர் ஒட்டவைக்கப்படும். இதற்கு விசேஷ ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு சுவரை இன்னொரு சுவரோடு ஒட்டுவதற்கு, இந்த ரசாயன பசையை தடவினால், இரண்டு மணி நேரத்தில் சுவர்கள் இரண்டும் நிரந்தரமாக ஒட்டிக்கொள்ளும். இந்த சுவர்களை தீ தாக்க முடியாது. அதே போல, வீட்டுக்கு வெளியில் அதிக சத்தம் இருந்தாலும், வீட்டுக்குள் அந்த சத்தம் கேட்காது. எனவே, சாலை ஓரத்தில் இந்த வீடுகள் அமைக்கப்பட்டாலும், சாலைகளில் ஓடும் வாகன இரைச்சலால் தொந்தரவு இருக்காது. அடுத்தது வீட்டின் மேற்கூரை. இதுவும் ரெடிமேட் தான். ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கூரைகள் சுவரை ஒட்டுவதைப் போல, ஒட்டப்பட்டு கூரைகளின் மேல், சூரிய ஒளியை மின்சக்தியாக மாற்றக்கூடிய சூரியசக்தி கண்ணாடிகள் பொறுத்தப்பட்டு இருக்கும். இதன் மூலம், வீட்டுக்கு இரவு பகல் எந்த நேரத்திலும் தேவையான மின்சாரம் கிடைக்கும். எனவே மின் இணைப்பு தேவை இல்லை. ஏர்கண்டிஷன் மற்றும் ஹீட்டர் பயன்படுத்த வேண்டுமானால், அதற்கேற்ப மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் சூரியசக்தி கண்ணாடிகள் அமைக்கப்படும். அடுத்ததாக தண்ணீர். இந்த வீடுகளில், மழைநீரை சேகரித்து வைக்க தனி இடம் உள்ளது. இந்த மழைநீர், வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சுத்திகரிப்பு தொட்டி மூலம் சுத்திகரிக்கப்பட்டு, தண்ணீர் சப்ளை கிடைக்கும். பயன்படுத்தப்படும் தண்ணீரும் மறுபடியும் சுத்திகரிப்பு தொட்டிக்கு வந்து சேரும். அந்த நீரும் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் நல்ல குடிநீராக மாறி, பயன்பாடுக்கு வந்துவிடும். துõசுகள் மட்டுமின்றி, பாக்டீரியாவைக்கூட சுத்திகரிக்கும் திறன் கொண்டதாக இந்த சுத்திகரிப்பு தொட்டி வீட்டில் பொருத்தப்படும். எனவே, குடிநீருக்கோ, மின்சாரத்துக்கோ எந்த இணைப்பும் தேவை ஏற்படாது. இந்த வீடு எடை குறைந்தது என்பதால், வீட்டுக்குள் வெள்ளம் புகாது. தண்ணீரில் வீடு மிதக்கும். அதை நகரச்செய்யாதபடி, வீட்டின் நான்கு மூலைகளிலும் நிலத்துக்கு மிக ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள அஸ்திவார கயிறுகள் இறுக பிடித்துக்கொள்ளும். இந்த திட்டம் வெற்றிபெற்றால், விலை குறைந்த, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வீடுகள் ஏராளமான அளவில் டில்லியில் கட்டப்படும். ஆனால், அதற்கு முன்பாக மாதிரி வீடுகளை கட்டி காண்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டது. அடுத்த இரண்டு வாரத்தில் இந்த மாதிரி வீடுகள் கட்டப்பட உள்ளன. இத்திட்டம் உறுதியாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் உள்ள, "கிரானைட் ரெசின்' நிறுவனம், கூர்கான் அருகில் ஜெர்மனியில் உள்ள தங்களது தொழிற்சாலை போன்றே, கிளை ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது.


(தினமலர், 06-08-2007)

வேளாண்மையின் இறக்கம்

இந்தியா கிராமங்களில் வாழ்ந்தது. இன்றைய இந்தியா நகரங்களில் மட்டுமே வாழ்கிறது. நெல், கோதுமை, சோளம், கம்பு, வரகு, தினை எல்லாம் ஏகபோகமாக விளைந்தன. உண்டி கொடுத்து மக்களை வாழ வைத்த விவசாயிகளை மன்னன் வாழ வைத்தான். ஆட்சிக்கு வருமானமே நிலவரிதான். இதனால் விவசாயிகளுக்கு மரியாதை இருந்தது. இன்றைய இந்தியாவில் ஆட்சியின் வருமானம் நிலவரி இல்லை. வருமான வரி, தொழில் வரி, சுங்க வரி, விற்பனை வரி என்று வேறு தொழில்களிலிருந்து பெறப்படுகிறது. அன்று தேவதானம், பிரம்மதேசம் என்று மானியங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

இன்று மானியங்கள் விவசாயிகளுக்கு இல்லை. விவசாய மானியம் என்ற பெயரில் ரசாயன உரக் கம்பெனிக்கும், பூச்சி மருந்து நிறுவனங்களுக்கும், டிராக்டர் நிறுவனங்களுக்கும் வழங்கப்படுகிறது. அன்று விவசாயம் செய்பவனே வளமாக வாழ்கிறான் என்று நிலம் உள்ளவனுக்குப் பெண் கொடுத்தார்கள். இன்று விவசாயிகளுக்குப் பெண் கொடுப்பாரில்லை. மாதச் சம்பளம் பெறும் கடைநிலை ஊழியராக இருந்தாலும் பரவாயில்லை, விவசாயி மாப்பிள்ளை வேண்டாம் என்று பெண்ணைப் பெற்றவர்கள் யோசிக்கத் தொடங்கிவிட்டார்கள். விவசாயம் என்பது அன்று சுகஜீவனம். இன்று துன்பஜீவனம். ஏன் இந்த அவலம்?

பொருளியல் அடிப்படையில் யோசித்தால் உண்மை புரியும். ஒரு விவசாயி எந்த அளவில் ஏமாளியாக வாழ்கிறான் என்பதும் எந்த அளவில் சுரண்டப்படுகிறான் என்பதும் புரியும்.

பொருளாதாரத்திற்கு அடிப்படை ஒரு பண்டத்தின் நிலையான மதிப்பு. அதை நெல் மதிப்பு என்றுகூடச் சொல்லலாம். பணமதிப்பு குறைந்தால் நெல் மதிப்பு அந்த அளவில் உயர வேண்டும். 1960 - 70 விலைவாசியை வைத்து இன்றைய நிலையை அளவிட்டால் வேளாண்மையின் இறக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.

அன்று நெல் விலை ரூ. 50. ஒரு மூட்டை 75 கிலோ நெல். 400 மூட்டை நெல் விற்றால் 35 ஏட டிராக்டர் ரூ. 20,000-க்கு வாங்கலாம். 20 மூட்டை நெல் விற்றால் 1 ஜோடி மாடு ரூ. 1000 வாங்கலாம். 7 மூட்டை நெல்லுக்கு 1 பவுன் தங்கம். இன்று நெல்விலை ரூ. 350. டிராக்டர் விலை 5 லட்சம் ஜோடி மாடு 20,000. பவுன் 8,000. 1 டிராக்டர் வாங்க 1000 மூட்டை நெல் விற்க வேண்டும். ஒரு விவசாயி இழப்பது 600 மூட்டை நெல். நெல் விலைக்குக் கட்டுப்பாடு உண்டு. டிராக்டர் விலைக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. இழந்து வரும் பணமதிப்புக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை.

கடந்த 30 ஆண்டுகளில் தொழிற்சாலைப் பொருள்கள் விலை 40 மடங்கு உயர்ந்துவிட்டது. அரசு அலுவலர்களின் ஊதியம் 50 மடங்கு உயர்ந்துவிட்டது. ரூ. 250 சம்பளம் வாங்கிய எம்.எல்.ஏ. இன்று லட்ச ரூபாய் வாங்குகிறார். மாத வருமானம் இல்லாத ஒரு விவசாயி தான் விளைவித்த பொருளை விற்று ஜீவனம் செய்கிறார். விலைவாசி ஏறுவதற்கு ஏற்ப அகவிலைப்படி பெற அவர் தகுதியற்றவர். கடந்த 30 ஆண்டுகளில் நெல், கோதுமை விலை 8 மடங்குதான் உயர்ந்துள்ளது.

உணவு உற்பத்தி கூடிய நிலையில் உணவுக் கட்டுப்பாடு ஏன்? இதன் உள்நோக்கம் என்ன? வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு உணவுப்பங்கீட்டால் கிடைக்கும் மானியம் ரூ. 534 என்று புள்ளிவிவரம் கூறுகிறது. உணவுப் பங்கீட்டையும் கட்டுப்பாட்டையும் ரத்து செய்து விட்டு உணவுக்கூப்பன் அட்டை வழங்கி ரூ. 1000 ரொக்கம் வறுமைக்கோட்டு ஏழைகளுக்கு வழங்கலாமே. ஒருவரை வாழவிடாமல் அடித்து ஏழைக்கு வழங்குவது அரசாங்கத்தின் திருட்டுக்குணம் ஆகாதா? ராபின்ஹுட் கூட பணக்காரனிடம் திருடி ஏழைக்கு வழங்கினான். ""தகுதி என வொன்று நன்றே பகுதியார் பாற்பட்டு ஒழுகப்பெறின்'' என்ற நடுநிலை தவறுவது ஏன்? அரசுப் பொருளாதாரம் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பாமல் விவசாயிகளின் வயிற்றிலடிப்பது மன்னர் காலத்துக் கொடுங்கோன்மையைவிட மோசமானதல்லவா? இதனால் பாதிக்கப்படுபவன் ஒரு விவசாயி என்று யாருக்கும் புரிவதில்லை.

50 ஆண்டுகளில் அரசில் உள்ளவர்கள் ஐந்து ஊதியக்கமிஷன் அமைத்து ஊதியத்தை உயர்த்திவிட்டனர். ""உண்டி கொடுத்தோன் உயிர் கொடுத்தோன்' இந்த ஊனும் உயிரும் வாழ வழி செய்து வரும் விவசாயிகளுக்கு அகவிலைப்படி கொடுத்தோமா? இல்லை. ஒரு முழக்கயிறு கொடுத்தோம். லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதைப் பார்வையிட்ட பாரதப் பிரதமர், விவசாயிகளின் கடனுக்கு உண்டான வட்டியை ரத்து செய்தார்.

மேலும் கடன் பெற வழிசெய்து விட்டார். பேராசைக்கு ஒரு தூண்டுதல். மேலும் பலர் தற்கொலை செய்து கொள்ளும் வழி அல்லவா கடன். விவசாயம் ஆசையை நிறைவேற்றும் தொழில் இல்லை. அடிப்படை ஆசையைக்கூட நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உள்ளபோது பேராசையை நிறைவேற்ற முடியுமா?

ஆகவே, விவசாயிகள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் ஒரு முழக்கயிறு வேண்டாம். பசுமைப்புரட்சி வரும் முன்பு நமது முன்னோர்கள் எந்த விதைகளைக் கொண்டு எந்த முறையில் எந்த நீரைக் கொண்டு யாருக்காக விவசாயம் செய்தார்கள் என்பதை உணர்ந்து வெளியிலிருந்து எந்த இடுபொருளும் கொண்டு வராமல், நிலத்திற்கு ஓய்வும் கொடுத்து உடலுழைப்போடு அத் தொழிலைச் செய்யுங்கள். கிடைப்பதைக் கொண்டு வாழுங்கள். கடன் வாங்காதீர்கள். ""விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்'' என்ற பட்டுக்கோட்டையார் பாடல்தான், விவசாயிகளின் வேதம்.

ஆர்.எஸ். நாராயணன்

(தினமணி – கட்டுரை, 14-12-2007)

டைட்டானியம் டை ஆக்ஸைடு-வரமா, சாபமா?

டாடா நிறுவனத்தின் டைட்டானியம் டை ஆக்ஸைடு ஆலை - செய்தி ஊடகங்களில் பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. மாநிலம் தழுவிய அளவில் இந்த விஷயம் குறித்த வாதப் பிரதிவாதங்கள் அனல் பறந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வோர் அரசியல் கட்சியும் தனது குழுவை தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு அனுப்பி அப்பகுதி மக்களின் கருத்துகளைக் கேட்டு வருகிறது. அப்பகுதி மக்கள் பதிலளித்தே மாய்ந்து போகிறார்கள். ஆனால் இவ்வாறு கட்சிகள் கருத்து கேட்பதால் அப்பகுதி மக்கள் ஒரு தெளிவுக்கு வந்து விட்டார்கள். பொட்டல் காடு என்று தங்களது நிலப்பரப்பை நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அங்கு டைட்டானியம் டை ஆக்ஸைடு என்ற விலைமதிக்க முடியாத கனிமம் உள்ளது என்ற தெளிவுதான் அது.

எனவே இனிமேல் ரத்தன் டாடாவே நேரில் வந்து கேட்டாலும்கூட நிலத்திற்குக் கூடுதல் விலை கேட்க அப்பகுதி மக்கள் தயங்க மாட்டார்கள். டைட்டானியம் டை ஆக்ஸைடின் மதிப்பு அப்படி!

நமது பகுதிகளில் உள்ள மணலில் ஒருவித கருப்பு மணல் இருக்கும். இந்த மணலில் உள்ள ஒருவித கனிமம்தான் டைட்டானியம் டை ஆக்ஸைடு. மணலைச் சூடுபடுத்தி அதில் உள்ள கனிமங்களைப் பிரித்தெடுக்கும்போது ஒருவித வெள்ளை நிறப்பொடி கிடைக்கிறது. அதுதான் டைட்டானியம் டை ஆக்ஸைடு. இது வெப்பத்தைத் தாங்கக்கூடியது. சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக்கதிர்களைக் கிரகித்துக்கொள்ளும் தன்மை படைத்தது.

இக்கனிமம் "அலாய்' உலோக வகையைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மிகவும் பயனுடையது. குறிப்பாக, விமான என்ஜின்கள், ராக்கெட் மற்றும் ராணுவப் பயன்பாட்டுக்கு இன்றியமையாதது. அதுமட்டுமல்லாமல் நாம் பல் துலக்கப் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் மற்றும் முகத்தில் தடவும் லோஷன்களிலும் இந்த டைட்டானியம் டை ஆக்ஸைடு உள்ளது. இது ஒரு விஷயம்.

மற்றொரு விஷயம், மணலைச் சூடுபடுத்தி அதில் இருந்து டைட்டானியம் டை ஆக்ஸைடைப் பிரித்தெடுக்கும்போதே தோரியம் போன்ற பிற கனிமங்களும் கிடைக்கும். இந்த தோரியம் அணு உலைகளுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தக்கூடியது. எனவே டைட்டானியம் டை ஆக்ஸைடு தொழிற்சாலை என்பது சாதாரண விஷயம் அல்ல; நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயமும் கூட. எனவேதான் இந்த விஷயத்தில் இவ்வளவு எதிர்ப்பு.

பலன்கள் என்கிற ரீதியில் பார்த்தால் - டாடா நிர்வாகம் சொல்லும் பலன்கள் இவைதான் - அதாவது, ஆண்டுக்கு 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் டன் வரை டைட்டானியம் டை ஆக்ஸைடை நாம் இறக்குமதி செய்து வருகிறோம். இங்கு ஆலை அமைத்தால் ஆண்டுக்கு ஒரு லட்சம் டன் டைட்டானியம் டை ஆக்ஸைடை நாமே உற்பத்தி செய்ய முடியும்; இந்த ஆலையால் சுமார் ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 3 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளிக்க முடியும். மேலும் அப்பகுதிகளில் பள்ளி, பூங்கா, தண்ணீர் தொட்டி அமைத்தல் போன்ற "சமூக' சேவைகளையும் செய்து அப்பகுதி மக்களுக்குத் தங்களால் உதவ முடியும் என்பது டாடா நிறுவனத்தின் வாக்குறுதிகள்.

ஆனால், சுற்றுச்சூழல் ஆய்வாளர்களின் பார்வை வேறுவிதமாக உள்ளது. சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பைக் கையகப்படுத்தி அதில் உள்ள லட்சக்கணக்கான தென்னை, பனை மரங்களை வெட்டி வித்து, அப்பகுதிகளில் உள்ள மணலை எடுத்து அதில் இருந்து கனிமங்களைப் பிரித்தெடுத்து பின்னர் மீண்டும் அந்தக் குழிகளை நிரப்பினால், அதன் பிறகு அந்த நிலத்தை விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியுமா? அவ்வாறு பயன்படுத்த வேண்டுமானால் ரசாயன உரங்களைப் போட்டு அந்த நிலத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும். அதற்கு ஆகும் செலவினங்களை யார் ஏற்பது? மேலும் அவ்வாறு ரசாயன உரங்களைப் பயன்படுத்தினால் நிலத்தின் தன்மை, விவசாயத்திற்கு உகந்ததாக இருக்குமா?

ஏனெனில் கனிமங்களைப் பிரித்தெடுத்தபின் அந்த மணல் கனிம வளங்கள் உறிஞ்சப்பட்ட வெறும் சக்கையாகத்தான் இருக்கும். மேலும் அதில் புவி ஈர்ப்பு விசையும் குறைந்துபோய் பலமிழந்து இருக்கும். அதில் தண்ணீரே நிற்காது. கனிம வளங்களோடு இருக்கும் மணல் பிரதேசத்தில் 4.5 என்ற அளவில் புவி ஈர்ப்பு விசை இருக்கும். கனிமத்தை எடுத்துவிட்டால் வெறும் 2 என்ற அளவில்தான் ஈர்ப்பு விசை இருக்கும். இதுமட்டுமல்லாது இதற்குப் பிறகு இந்த நிலங்களால் டாடா ஆலைக்கு எந்தவிதப் பிரயோஜனமும் கிடையாது. அப்படிப்பட்ட சூழலில் அந்த நிலத்தை மீண்டும் உரிமையாளர்களுக்கே திருப்பிக் கொடுக்கப்படுமா?

இதுதவிர, மணலில் இருந்து டைட்டானியம் டை ஆக்ஸைடைப் பிரித்தெடுக்கும்போது அதில் கதிர்வீச்சு ஏற்படும். அது ஆலைகளில் பணிபுரிவோருக்கும், ஆலையைச் சுற்றி வசிப்பவர்களுக்கும் உடல் ரீதியான பாதிப்பை உண்டாக்கும். கொல்லத்தில் உள்ள சவரா பகுதியில் கடந்த 80 ஆண்டுகளாக மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இதனால் அங்கு ஆஸ்துமா, சரும வியாதிகள், மனநோய், பெண்களுக்கு கருச்சிதைவு ஆகியவை அதிக அளவில் ஏற்படுவதாக ஆய்வு விவரங்கள் தெரிவிக்கின்றன. மீன்வளம் மற்றும் உயிரினங்களின் வாழ்க்கை முறை தலைகீழாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. டைட்டானியம் ஆலையால் பாதிப்பு பன்மடங்காக இருக்கும்.

வேலைவாய்ப்பு என்கிற ரீதியில் பார்த்தாலும்கூட, இந்த ஆலை பெரும்பாலும் இயந்திரங்கள் மூலம்தான் இயக்கப்படும். ஏனெனில் மனித உழைப்பு என்பது குறைவுதான். எனவே வேலைவாய்ப்பு என்பதும் வெறும் கண்துடைப்பு நாடகம்தான். கடற்கரைப் பகுதிகளில் கடல் அரிப்பு மற்றும் கடல் நீர் நிலத்தடி நீரோடு கலப்பது போன்ற பிரச்னைகளும் ஏற்படும்.

நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தைச் சுட்டிக்காட்டி, டைட்டானியம் ஆலைக்கு ஆதரவாகப் பேசுபவர்கள், டைட்டானியம் டை ஆக்ஸைடு தயாரிப்பில் கதிர்வீச்சு அபாயம் உள்ளதை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, ஐரோப்பிய கமிஷனின் அறிக்கையின்படி முகத்தில் பூசும் லோஷன்கள் வாயிலாக டைட்டானியம் டை ஆக்ஸைடு உடலுக்குள் ஊடுருவுகிறது என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது. இந்த "டைட்டானியம் டை ஆக்ஸைடில்' உள்ள நுண்பொருள் புற்றுநோயை உருவாக்கக்கூடியது என்றும் ஐரோப்பிய கமிஷன் அறிக்கை கூறுகிறது.

இதனையெல்லாம் நாங்கள் கருத்தில்கொண்டுதான் ஆலையை அமைக்கிறோம் என்று டாடா நிர்வாகம் சொல்லுமானால், டாடா நிர்வாகத்தின் செயல்பாடுகளைக் கண்காணிப்பது யார்? ஏனெனில் ஒரு மணல் குவாரியைக் கூட அரசால் ஒழுங்குபடுத்த முடியவில்லை. ஒதுக்கப்பட்ட பகுதிகளில் 3 அடி ஆழத்திற்கும் மேல் மணலை எடுக்கக்கூடாது என்ற விதிமுறை இருந்தாலும்கூட அது நடைமுறையில் உள்ளதா என்றால் இல்லை. பல இடங்களில் மணல் அள்ளுபவர்கள் ஒதுக்கப்பட்ட பகுதியையும் தாண்டி, அதுவும் பல மீட்டர் ஆழம் வரை மணலைச் சுரண்டி வருகிறார்கள். இதனால் பல ஆறுகளின் படுகைகள் வறண்டுள்ளன. இதனால் நிலத்தடி நீர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் ரூ. 2 ஆயிரத்து 500 கோடி செலவில் டாடா நிறுவனம் அமைக்கும் ஆலையில் எந்த அளவுக்கு மணல் அள்ளுகிறார்கள், எந்த அளவு இயற்கை வளம் சுரண்டப்படுகிறது என்பதைக் கண்காணிப்பது யார், அவ்வாறு முறைகேடுகள் நடந்தாலும்கூட அதனைத் தட்டிக்கேட்பது யார்? என்ற கேள்வி எழுகிறது.

நீண்டகாலத்திற்கு அப்பகுதி நிலங்களில் ஏற்படப்போகும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சுகாதார ரீதியான பாதிப்புகளைப் பற்றி கணக்கிடாமல் டைட்டானியம் ஆலை அமைக்கப்படுமானால், அது தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மக்களுக்கு வரம் அல்ல; சாபமாகத்தான் அமையப்போகிறது!


டி .எம். விஸ்வநாத்

(தினமணி – கட்டுரை, 17-08-2007)

காத்திருக்கும் அபாயம்...!

சுதந்திரம் அடைந்து என்ன சாதித்து விட்டோம் என்று கேட்பவர்களுக்கு ஒரு தகவல் - இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நம்மில் எழுதவும் படிக்கவும் தெரிந்தவர்கள் வெறும் 20 விழுக்காடுகூட இல்லை. இன்று, 68 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்கள் எழுதவும் படிக்கவும் தெரிந்தவர்கள் என்பது மிகப்பெரிய சாதனை அல்லவா? அதுவும், நமது மக்கள்தொகை மூன்று மடங்கு அதிகரித்திருக்கும் நிலையில் 68 சதவிகிதம் என்பது சாதாரண விஷயமல்லவே!

பள்ளிக்கூடங்கள் அதிகரித்திருக்கின்றன. உயர் கல்வி நிறுவனங்கள் பெருகி இருக்கின்றன. இப்போது இந்தியாவில் சுமார் 300-க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களும், 19,000-க்கும் மேற்பட்ட உயர் கல்வி நிறுவனங்களும் இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால், பெருகி வரும் தேவைக்கு இவை போதுமானதா என்றால் இல்லை. உலக அரங்கில் சுமார் 36 சதவிகித மாணவர்கள் உயர் கல்வி பெறுகின்ற நிலைமை இருக்கும்போது, இந்தியாவில் 18-க்கும் 23-க்கும் இடைப்பட்ட இளைஞர்களில் பத்து சதவிகிதத்தினர்கூட உயர் கல்வி பெறுவதில்லை என்கிறது சமீபத்திய புள்ளிவிவரம்.

தெருவோரக் குழந்தைகள் எழுத்தறிவே இல்லாமல் வளர்ந்து வருகின்றன என்பதைப் பற்றிய கவலை யாருக்குமே இருப்பதாகத் தெரியவில்லை. இவர்களை எப்படி கல்விச்சாலைகளுக்குக் கொண்டு வரப்போகிறோம் என்பது விடையில்லாப் புதிராகத் தொடர்கிறது.

இந்தியாவின் மக்கள்தொகையில் முப்பது கோடிப் பேர் இப்போதும் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழ்கிறார்கள் என்பது மட்டுமல்ல, இவர்களது குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்வதை முக்கியமாகக் கருதுவதும் இல்லை. நமது மக்கள்தொகை ஆண்டுக்கு ஒரு கோடி அதிகரித்து வரும் நிலைமை. இந்தச் சூழ்நிலையில், கல்விக்கான ஒதுக்கீடு அதிகரிப்பது, புதிய கல்விக் கொள்கை வகுப்பது, கல்விச்சாலைகளை நிறுவுவது போன்ற முயற்சிகளில் இப்போதே முனைப்பாக இறங்காவிட்டால், இத்தனை ஆண்டு முயற்சிகளும் வளர்ச்சியும் வீணாகிவிடும் அபாயம் காத்திருக்கிறது.

இந்தியாவிலுள்ள 370 மாவட்டங்களிலும் புதிதாக அரசுக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும், 30 மாநிலங்களிலும் புதிதாக மத்திய பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும் என்றும் பிரதமர் தனது சுதந்திரதின உரையில் குறிப்பிட்டிருக்கிறார். வரவேற்கப்பட வேண்டிய அறிவிப்பு.

அறிவியல் கல்வி ஆராய்ச்சிக்காக ஐந்து புதிய தேசியக் கல்வி நிறுவனங்கள், எட்டு ஐ.ஐ.டி.க்கள், ஏழு ஐ.ஐ.எம்.கள், தகவல் தொழில்நுட்பக் கல்வியை அளிக்க 20 புதிய உயர்கல்வி நிறுவனங்கள், நாடு முழுவதும் 1,600 தொழிற்பயிற்சி நிலையங்களும் பாலிடெக்னிக்குகளும்... இப்படி இன்னும் பல அறிவிப்புகள். அரசும் ஆட்சியாளர்களும் கல்வித் துறையைப் பற்றி நிறையவே கவலைப்படுகிறார்கள் என்பது மனதுக்குத் தெம்பான விஷயம். அரசு நாளைய இந்தியாவைப் பற்றிக் கவலைப்படுகிறது என்பதே ஆறுதலான விஷயம்தானே.

இன்னொரு முக்கியமான பிரச்னையையும் நாம் கவனிக்காமல் இருந்துவிடக் கூடாது. அதுதான், தரமான ஆசிரியர்களை உருவாக்கும் முயற்சி.

இன்றைய நிலையில், திறமைசாலிகள் எவரும் ஆசிரியர் தொழிலுக்கு வருவதில்லை. மருத்துவம், பொறியியல், வணிகவியல், உயர் விஞ்ஞானம் போன்ற துறைகளுக்கு திறமைசாலிகள் போய்விடுகின்றனர். எதிலுமே சேர முடியாத அளவுக்கு மதிப்பெண்கள் குறைந்த மாணவர்கள் மட்டுமே, சரித்திரம், பொருளாதாரம் போன்ற இளங்கலைப் பட்டப் படிப்புகளிலும், கணக்கு, விஞ்ஞானம் போன்ற அறிவியல் பட்டப் படிப்புகளிலும் சேர்கின்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதன் தொடர்விளைவாக, ஆசிரியர் பயிற்சியை நாடுவோர், திறமை குறைந்தவர்களாக இருக்கும் ஓர் அபாயம் இருக்கிறது.

இதை ஆட்சியாளர்கள் உணர்ந்து, இதற்கு உடனடியாகப் பரிகாரம் தேட வேண்டும். திறமைசாலிகளை ஆசிரியர்களாக்காமல் போனால், எத்தனைதான் கல்விச்சாலைகள் அமைத்தாலும், உலக அரங்கில் திறமைசாலி மாணவர்களை நம்மால் உலவ விட முடியாது. இதைப் பற்றிய சிந்தனை ஆட்சியாளர்களிடம் இல்லாமல் போனால், நாளைய இந்தியா "நவ' இந்தியாவாக இருக்காது!

(தினமணி - தலையங்கம், 16-08-2007)

"வானொலி அறிவிப்பாளரா? மிமிக்ரி ஆர்டிஸ்டா?''

"வானொலி அறிவிப்பாளரா? மிமிக்ரி ஆர்டிஸ்டா?'' - ந.ஜீவா


"ஹலோ யார் பேசறது?''

"மடிப்பாக்கத்திலிருந்து மன்னார்சாமி''

"ஹாய் மன்னார்சாமி...என்ன பண்றீங்க''

"தலையச் சொறிஞ்சிக்கிட்டிருக்கேன்...''

"ஹய்...யோ...எப்பிடிங்க மன்னார்சாமி இவ்வளவு ஸ்பான்டனியஸô கடிக்கிறீங்க?''

ரேடியோவைத் திறந்தால் இப்படி விதவிதமான குரல்கள். அதுவும் ஆங்கிலத்தில் தமிழ் கலந்து பேசும் வானொலி அறிவிப்பாளர்கள்...தப்பு...தப்பு... ரேடியோ ஜாக்கிகள்.

தனியார் எஃப்.எம். ரேடியோ வந்த பின்னால் இப்படி இரவு, பகல் எந்நேரமும் இசை மழையும் பேச்சு மழையும் பொழிந்து கொண்டே இருக்கிறது. இந்தக் கட்டுக்கடங்காத இசை வெள்ளம் வளர்ச்சிதானா? இல்லை வீணா? என்று ரொம்பவும் கவலைப்பட்டு இதுபற்றித் தெரிந்த யாரிடமாவது கேட்க வேண்டும் என்று எஸ்.சம்பத்குமாரை அணுகினோம்.

ஒலிபரப்புத் துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர் எஸ்.சம்பத்குமார். 1969 - 75 கால கட்டத்தில் சென்னை விவித்பாரதியில் அறிவிப்பாளர். அதன் பின் தூர்தர்ஷனில் தயாரிப்பாளர். அப்புறம் லண்டன் பிபிசி தமிழோசையில் பணி. இப்போது சென்னையில் ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசத்தில் "வானொலி இயலைச்' சொல்லித் தரும் விரிவுரையாளர். அவரிடம் பேசியபோது....

அன்றைய வானொலிக்கும் இன்றைய எஃப்.எம். வானொலிக்கும் என்ன வித்தியாசம்?

அப்போது வானொலி என்றால் ஆல் இன்டியா ரேடியோ மட்டும்தான். ஓர் அறிவிப்பாளர் இப்போது எஃப்.எம்.மில் பேசுவது மாதிரி அப்போது பேச முடியாது. "அடுத்துவரும் பாடல் இடம் பெற்ற திரைப்படம்: பணமா? பாசமா? பாடியவர்கள்: டி.எம்.செüந்தரராஜன், பி.சுசீலா' என்ற அறிவிப்பைக் கூட எழுதி வைத்து அதில் மேலதிகாரியிடம் கையெழுத்து வாங்கிய பின் அதை வாசிக்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்குத் தவறான செய்தி போகக் கூடாது என்பதே இதற்குக் காரணம். அப்போது ஆல் இன்டியா ரேடியோவிற்கு என வழிகாட்டும் நெறிமுறைகள் இருந்தன. மத உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது; நட்பு நாடுகளுக்கு எதிரான செய்திகளைச் சொல்லக் கூடாது என்று நிறைய விதிமுறைகள்.

தமிழில் பேச்சு வழக்கு என்றும் எழுத்து வழக்கு என்றும் இருக்கிறது. பேச்சு வழக்குக்கும் எழுத்து வழக்குக்கும் இடைவெளி குறைய வேண்டும். ஆனால் எழுதிப் படிக்கும் போது இந்த இடைவெளியை எப்படிக் குறைப்பது? குரலில் ஏற்றத் தாழ்வுகள் கொடுத்துப் பேசுவதைத் தவிர வேறுவழியில்லை.

இந்த வகையில் வானொலித் தமிழுக்கு அன்று உயிர் கொடுத்தவர்கள் இலங்கை வானொலியைச் சேர்ந்த மயில்வாகனன், ராஜா, ஹமீது போன்றவர்கள். அவர்களுடைய அறிவிப்பைக் கேட்கவே சுகமாக இருக்கும். இங்கே கூத்தபிரான், ஜெயங்கொண்டான் போன்றவர்களைச் சொல்லலாம். இருந்தாலும் இலங்கை வானொலியை நாம் நெருங்க முடியாது. அதுபோல லண்டன் பிபிசி தமிழோசையில் செய்தியை சங்கரமூர்த்தி மிகவும் சுவையாகக் கொடுப்பார். ஆனந்தியின் குரலை இன்று முழுக்கக் கேட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் இவர்கள் எல்லாரும் நல்ல தமிழை எந்த இலக்கண வழுவும் இல்லாமல் பேசியவர்கள். பிபிசியில் நல்ல தமிழில் செய்தியைக் கொடுங்கள் என்று சொல்வார்கள்.

அதற்காக மக்களுக்குப் புரியாத தமிழில் கொடுங்கள் என்று அர்த்தமல்ல. அன்றாடம் வழக்கத்தில் உள்ள தமிழைக் கொடுக்க வேண்டும் என்பார்கள். ஆனால் இன்று எஃப்.எம். வானொலியில் உள்ள தமிழைக் கேட்க வருத்தமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் தமிழைக் கலந்து பேசுகிறார்கள். பேச்சுத் தமிழில், கொச்சைத் தமிழில் பேசுகிறார்கள். யார் வானொலி கேட்கிறார்கள்? அவர்களிடம் எப்படிப் பேசுவது என்பதைத் திட்டமிடாமல் பேசுகிறார்கள். ""என்ன மச்சி, உன் ரவுசு தாங்க முடியலை'' என்று பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென்று நல்ல ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்.

இதில் இவர்கள் யாரிடம் பேசுகிறார்கள்? சென்னையில் வாழும் சாதாரண மனிதனிடமா? இல்லை நன்கு ஆங்கிலம் கற்ற நடுத்தர வர்க்க மனிதனிடமா? இவர்களுக்கு, யாருக்கு நிகழ்ச்சி பண்ணுகிறோம்? அவர்களுக்கு என்ன மாதிரியான பேச்சு தேவை? போன்றவற்றைப் பற்றி அடிப்படையான திட்டம் எதுவும் இல்லை.

இப்போது வானொலியில் ரேடியோ ஜாக்கிகள் நேயர்களிடம் நன்கு பேசுகிறார்கள். வானொலி என்பது ஒரு வழி தகவல் சாதனம் என்ற நிலை மாறி நேயர்களும் பங்கேற்பது நல்லதுதானே?

என்ன நல்ல மாற்றம்? டெலிபோனில் வழிவது நல்ல மாற்றமா? இது முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது. ஏதாவது உருப்படியான விஷயங்களைப் பேசினால் கேட்கும் அனைவருக்கும் பயன் இருக்கும். இவர்கள் பேசுவது எல்லாம் , ""என்ன பண்றீங்க?'' ""சாப்ட்டாச்சா? காலையில பத்துமணி வரைக்கும் தூங்குவீங்களா?'' என்கிற மாதிரியான பேச்சு. இதனால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை.

இப்படிப்பட்ட மாறுதலுக்கு என்ன காரணம்?

உலகம் வர்த்தக உலகம் ஆகிவிட்டது. எஃப்.எம். தனியார் வசம் வந்துவிட்டது. அவர்களுக்கிடையே கடுமையான போட்டி. ஒருவர் இன்னொருவரை விஞ்ச வேண்டும் என்று நினைக்கிறார்கள். இருப்பது சினிமாப் பாட்டு போடுவது ஒன்றுதான். செய்தி கிடையாது. அதனால் எப்படியாவது நேயர்களை வளைத்துப் போட வேண்டும் என்பதற்காகப் பலவிதங்களிலும் இறங்குகிறார்கள்.

சில அறிவிப்பாளர்கள் பிரபல நடிகர்கள் மாதிரி - ரஜினிகாந்த் மாதிரியெல்லாம் குரலை மாற்றிப் பேசுகிறார்கள். இவர்கள் அறிவிப்பாளர்களா? இல்லை மிமிக்ரி ஆர்டிஸ்ட்களா என்று தெரியவில்லை.

இந்த நிலைக்குக் காரணம் இன்றைய உலகமயச் சூழலும் காரணம் என்று சொல்ல வேண்டும். நுகர்வோர் பொருட்கள் நமது சந்தைக்கு வந்து குவிகின்றன. இந்தப் பொருள்களை மக்கள் வாங்க வேண்டும். அதற்கு நிறைய விளம்பரங்கள் செய்ய வேண்டும். வானொலி என்பது மக்களுக்கு அறிவூட்டும், தகவல் அளிக்கும், சந்தோஷத்தைத் தரும் சாதனம் என்பது போய் விளம்பரங்களுக்கான சாதனமாகிவிட்டது.


அரசு வானொலியான விவித் பாரதியில் கூட முதலில் எல்லாம் நிறைய விளம்பரங்கள் வந்தனவே?

அதற்குக் காரணம் அப்போது வர்த்தக விளம்பரங்கள் வரும் ஒரே வானொலியாக அது இருந்தது. எல்லா வானொலி விளம்பரங்களும் அதில்தான் வர வேண்டும். அந்த விளம்பரத்தைக் கூட எவ்வளவு சுவையாகக் கொடுத்தார்கள் என்பது இப்போதும் ஞாபகத்துக்கு வருகிறது. சில விளம்பரங்கள் பாடல்கள் போலவே மக்களுக்கு மனப்பாடம் ஆகியிருக்கும். ஆனால் இன்றைய நிலை முற்றிலும் வேறானது.

இப்போது ரேடியோ ஜாக்கிகளாகப் பணிபுரிபவர்கள் இளைஞர்கள். இளைஞர்களுக்கு ஏற்றவிதத்தில் அவர்கள் பேசுகிறார்கள். அதைத் தவறு என்று சொல்ல முடியாதே?

இவர்கள் ஆங்கிலம் கலந்த கொச்சைத் தமிழில் பேசுவதற்கும் இளைஞர்களாக இருப்பதற்கும் என்ன சம்பந்தம்? இப்போது எல்.கே.ஜி.முதல் கல்லூரி படிப்பு வரை ஆங்கில மீடியம் என்றாகிவிட்டது.

இப்போதுள்ள இளைஞர்களில் பலருக்கு இதனால் ஆங்கிலமும் சரியாகத் தெரியாது; தமிழும் சரியாகத் தெரியாது. அப்படியிருக்கும் போது இவர்கள் எப்படி நல்ல தமிழை அழுத்தம் திருத்தமாகப் பேசுவார்கள்? நான் நல்ல தமிழ் என்று சொல்வது மக்களுக்குப் புரியாத தூய தமிழை அல்ல. சில ஆங்கிலச் சொற்கள் தமிழ் போலவே வழங்கி வருகின்றன. அவற்றைப் பயன்படுத்துவதில் தவறில்லை.

எனக்குத் தெரிந்த ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன். ஒரு முக்கியமான எஃப்.எம். வானொலி அறிவிப்பாளருக்காக ஆட்களைத் தேர்வு செய்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு தமிழ் தெரியாது. தெலுங்கு அவரின் தாய்மொழி. அவர் எப்படி தமிழில் பேசுகிறார் என்கிறீர்கள்? தமிழ் சொற்களை ஆங்கிலத்தில் எழுதி வைத்துச் சமாளிக்கிறார்.

இதெல்லாம் தேவைதானா? உச்சரிப்புச் சுத்தம் எப்படி வரும்?

நீங்கள் பேசுவது மாற்றத்தை ஏற்காத மனோபாவத்தைக் காட்டுவதாகத் தெரிகிறதே?

மாற்றம் நல்ல மாற்றமாக இருந்தால் வரவேற்கலாம். நான் பேசுவதைப் பார்த்து என்னைப் பழமைவாதி என்று கூடச் சிலர் சொல்லலாம். அதற்காக உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியுமா?

ஆனால் இதில் சந்தோஷப்படக் கூடிய விஷயமும் ஒன்று உள்ளது. இந்த ரேடியோ ஜாக்கிகள் பேசுவதை அவ்வளவாக யாரும் விரும்புவதில்லை. எப்போது பாட்டு போடுவார்கள்? என்பதுதான் எல்லாருடைய எதிர்பார்ப்பும். பாட்டு கேட்கத் தானே ரேடியோ போடுகிறார்கள்?

தினமணி கதிர், 27-08-2007

குறும்படங்கள் - விசாலப் பார்வை!

"குறும்படங்கள் - விசாலப் பார்வை!" - சிவாஜி ஆதித்தன்

சென்னை, எம்.ஜி.ஆர். நகரில் பரபரப்பாக தொடங்கியுள்ளது குறும்பட தயாரிப்பாளர்கள் சங்கம். குறும்படங்களுக்காக ஒரு சங்கமா? இந்த சங்கம் குறும்படங்களுக்காக என்ன செய்யப்போகிறது? இந்தச் சங்கத்தினால் என்ன பயன்? என்பதை அறிந்துகொள்ள சங்கத்தின் தலைவர் பி. மனோகரனைச் சந்தித்தோம்.

குறும்படங்களுக்கு ஒரு சங்கம் அமைத்திருப்பது எதற்காக?

வெவ்வேறு இடங்களில் தயாராகும் குறும்படங்கள் குறிப்பிட்ட வட்டத்திற்குள் முடங்கி விடுகின்றன. நல்ல குறும்படங்கள் அனைத்து மக்களையும் சென்றடைவதில்லை. குறும்படங்கள் தயாரிப்பவர்களுக்கு பொருளாதார உத்திரவாதம் இல்லை. குறும்படங்களை விற்க முடிவதும் இல்லை. எனவே தரமான குறும்படங்களை ஒருங்கிணைத்து வர்த்தக ரீதியில் மொத்த விநியோகம் செய்வது அல்லது தொடர் ஒளிபரப்பு செய்து, அதன்மூலம் அந்தந்த படைப்பாளிகள் பயனுறச் செய்யும் நோக்கத்தோடு தொடங்கியிருப்பதுதான் இந்தச் சங்கம். "அகில இந்திய குறும்படத் தயாரிப்பாளர் சங்கம்' என்று பெயர் சூட்டியிருக்கிறோம். ஏற்கனவே தயாரிக்கப்பட்ட குறும்படங்களைத் தொகுத்து வெளியிடுவது மட்டும் எங்கள் வேலை அல்ல, சங்கமே சொந்தமாகக் குறும்படங்களைத் தயாரித்து அதில் உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும்!

குறும்படங்களின் ஓடும் நேரம் ஒவ்வொன்றும் மாறுபடுமே... அவற்றை எப்படி தொகுப்பீர்கள்?

குறும்படம் என்ன தலைப்பில் என்ன பிரச்னையை அலசுகிறது என்பதை மையமாக வைத்து தொகுக்கிறோம். உதாரணமாக குழந்தையை மையமாகக் கொண்ட குறும்படம் என்றால் அது ஒரு தொகுப்பு. நீதி சொல்லும் குறும்படம் என்றால் அது ஒரு தொகுப்பு. ஒரு குறும்படம் 20 நிமிடம் ஓடினால், ஒரு குறும்படம் 10 நிமிடம் ஓடும். இவை இரண்டையும் இணைத்தால் அது ஒரு அரைமணி நேர நிகழ்ச்சியாக அமையும்.

குறும்படம் என்றாலே கமர்ஷியலாக இருக்காது என்ற கருத்து உள்ளது. அவற்றை இணைத்து விநியோகம் செய்வது சாத்தியமா?

பார்ப்பவரை நிமிர்ந்து உட்காரவைக்கும் எத்தனையோ குறும்படங்கள் உள்ளன. மக்கள் எப்போதும் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஆரம்பத்தில் இது திணிப்பது போலத் தோன்றும். ஆனால் எப்போதும் இது திகட்டுவது கிடையாது. நாங்கள் தேர்ந்தெடுக்கும் குறும்படங்கள் நிச்சயம் நல்ல வரவேற்பைப் பெறும். பலருக்கு திரைப்பட வாய்ப்பு கிடைப்பதற்கு குறும்படங்கள் கருவியாகச் செயல்படுகிறது.

குறும்படங்களின் "அணிவகுப்பை' எப்போது ஒளிபரப்பப் போகிறீர்கள்?

எங்கள் சங்கத்தை முறைப்படி பதிவு செய்திருக்கிறோம். அதேபோல முறைப்படியே சேனல்களில் முயற்சி செய்து வருகிறோம். நல்ல ஒப்பந்தம் கிடைத்தவுடன் ஒளிபரப்பு ஆரம்பிக்க முடிவு செய்திருக்கிறோம்.

யாரெல்லாம் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்?

ஊடகவியல் பயிலும் மாணவ, மாணவிகள், தொழிலதிபர்கள், குடும்பத் தலைவிகள் என சகலரும் இதில் அங்கம் வகிக்கின்றனர். பெருமைக்குரிய விஷயம் ஒன்று கூறுகிறேன்... இப்போது, எங்கள் சங்கத்திற்கு ஜீ.வி. பிலிம்ஸ் அதிபர்கள் மகாதேவன் கணேஷ், வெங்கட்ரமணி ஆகியோர் கெüரவ தலைவர்களாக இருந்து பெருந்தன்மையுடன் எங்களுக்கு வழிகாட்டி வருகிறார்கள்!

வேறு யாருடைய ஆதரவு உங்களுக்கு கிடைத்திருக்கிறது?

எங்கள் முயற்சிகளுக்கு நாங்கள் எதிர்பார்த்ததை விட, அதிக ஆதரவும் வரவேற்பும் உள்ளது. அதை நல்ல முறையில் பயன்படுத்தி சங்கத்தை வலுப்படுத்த வேண்டும். அதுவே எங்களது குறிக்கோள். ஒரு பெரும் அரசியல் கட்சித் தலைவர் குறும்படங்களை அதிக அளவில் ஆதரித்து போற்றி அருமையாக வளர்த்து வருகிறார். எங்களது கெüரவத் தலைவர்களுடன் கலந்து பேசி முடிவெடுத்தபின் அவரை முறைப்படி சந்திக்க இருக்கிறோம்.

வேறு என்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்?

சொல்வது எளிது. செய்வது கடினம். எனவே புதிய திட்டங்கள் சாத்தியமாகும் வகையில் செயல்படுத்துவோம். எங்கள் சங்கத்தின் குறும்படத் தயாரிப்பில் 50 சதவித வாய்ப்புகளை மகளிர்க்கு வழங்குவோம். ஆண்டுதோறும் சிறந்த குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டு படைப்பாளிகள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்படும். குறும்படங்களைத் திரையிடுவதற்கான அரங்கம் அமைத்தல், குறும்படங்களின் நேரம் குறித்த நிரந்தரமான வரையறையை ஏற்படுத்துதல், போட்டிகளில் பங்கேற்கும் குறும்படங்களுக்கு வசூலிக்கப்படும் நுழைவுக் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்துதல் போன்ற குறும்பட வளர்ச்சிக்கான திட்டங்கள் பல இன்னும் எங்களிடம் ஏராளமாக உள்ளன.

- குறும்பட வளர்ச்சியில் இந்தச் சங்கம் காட்டும் பெரும் அக்கறை நம்மை வியக்கவைக்கிறது. விசாலமான பார்வையோடு வளரட்டும் இந்தச் சங்கம்!

தினமணி கதிர், 27-08-2007

வானமே எல்லை!

வானமே எல்லை! - பி. முரளிதரன்விமானத்தை நேரில் பார்ப்பதே ஓர் அரிய விஷயமாகக் கருதி வந்த மக்களுக்கு, இன்று விமானத்தில் பயணம் செய்வது என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. குறிப்பாக, நடுத்தர மக்களும் பயணம் செய்யும் அளவுக்கு விமானக் கட்டணம் வெகுவாக குறைந்து வருகிறது.

விமானத்தில் வேலைவாய்ப்பைப் பெறுவது சாமானிய மக்களுக்கு இதற்கு முன்பெல்லாம் குதிரைக் கொம்பாகத்தான் இருந்து வந்தது. குறிப்பாக, "ஏர்-ஹோஸ்டஸ்' பணி சமூகத்தில் மேல்தட்டு மக்களுடைய பிள்ளைகளுக்குத்தான் கிடைக்கும். ஆனால், தற்போது கிராமப்புறத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் பிள்ளைகளும் "ஏர்-ஹோஸ்டஸ்' வேலையில் சேர்வது சர்வ சாதாரணமாகியுள்ளது. இதற்குக் காரணம், சென்னையில் உள்ள "ஏர்-ஹோஸ்டஸ் அகாடமி' அளித்து வரும் பயிற்சி தான்.

இந்த அகாடமி, தமிழக அரசுடன் இணைந்து முதன்முறையாக, கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழை மாணவ, மாணவியருக்கு விமானத்தில் பணியாற்றுவதற்கான பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது.

இது குறித்து, ஏர்-ஹோஸ்டஸ் அகாடமியின் கிளை மேலாளர் கண்ணன் நம்மிடம் விவரித்தார்.

""நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப, இந்திய விமானத் துறையும் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த 25 நிறுவனங்களுடைய விமானங்கள் தற்போது இயங்கி வருகின்றன. அடுத்த பத்தாண்டுகளில், இந்தியாவில் உள்ள விமானங்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை எட்டும் என ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. தற்போது, தினமும், நாடு முழுவதும் 200 முதல் 300 விமானங்கள் தங்களது பயணச் சேவையை வழங்கி வருகின்றன.

இத்துறையைப் பொறுத்த வரை வேலைவாய்ப்பும் கொட்டிக் கிடக்கிறது. குறிப்பாக, "ஏர்-ஹோஸ்டஸ்' எனப்படும் விமானப் பணிப்பெண்களுக்கான வேலைவாய்ப்பும், ஆண்களுக்கான "கேபின் க்ரூ' வேலைவாய்ப்பும் அதிகளவில் உள்ளது. இப்பயிற்சிகள் அளிப்பதற்காக, விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒருசில பயிற்சி மையங்களே உள்ளன.

அத்தகைய பயிற்சி மையங்களில் எங்களுடைய நிறுவனமும் ஒன்று. நாங்கள் கடந்த 1997-ம் ஆண்டு முதல் பயிற்சி அளித்து வருகிறோம். பொதுவாக, விமானத்தில் பணியாற்றுவது தொடர்பான பயிற்சிகளில் சேர பயிற்சிக் கட்டணம் கூடுதலாக உள்ளது. மேலும், இப்பயிற்சிக்கு ஆங்கில மொழிப் புலமையும் அவசியம் என்பதால், இதுவரை மேல்தட்டு குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளே இப்பயிற்சியை பெற்று வந்தனர். குறிப்பாக, கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு இப்பயிற்சி ஒரு எட்டாக் கனியாக இருந்து வந்தது. அவர்களுக்கும் இந்தப் பயிற்சியை அளித்து, நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்பட்டது.

இதற்காக, 2005-ம் ஆண்டு முதன்முதலில் கர்நாடக மாநில அரசிடம் தொடர்பு கொண்டு, கிராமப்புறத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழே வசிக்கும் மாணவ, மாணவிகளுக்கு "ஏர்-ஹோஸ்டஸ்', "கேபின் க்ரூ' ஆகிய பயிற்சிகளை அளிக்க விருப்பம் தெரிவித்தோம்.

இதை ஏற்றுக்கொண்டு, அம்மாநில அரசு கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழை மாணவர்களைத் தேர்வு செய்து அளித்தது. அவர்களுக்கு நாங்கள் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை பெற்றுத் தந்தோம். இந்த முயற்சி வெற்றியடைந்ததன் விளைவாக, இந்த ஆண்டு தமிழக அரசிடம் தொடர்பு கொண்டு, இந்தத் திட்டத்தை செயல்படுத்த விரும்புவதாக தெரிவித்தோம். மாநில ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் தமிழரசி, "தாட்கோ' நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சிவசூரியன் ஆகியோர் இத்திட்டத்தை செயல்படுத்த போதிய உதவியையும், ஒத்துழைப்பையும் அளித்தனர்.

முதல் கட்டமாக, தமிழகத்தில் உள்ள சென்னை, மதுரை, பொள்ளாச்சி, தர்மபுரி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கிராமப்புற ஏழை மாணவர்கள் 100 பேரை தேர்வு செய்து "ஏர்-ஹோஸ்டஸ்' பயிற்சியை அளித்து வருகிறோம். இவர்களுக்கான பயிற்சிக் கட்டணத்தில் ஒரு குறிப்பிட்டத் தொகையை மாநில அரசு அளித்து விடுகிறது. மீதித் தொகையை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இதனால், இப்பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் முற்றிலும் இலவசமாக உள்ளது. அத்துடன், அவர்களுக்கு தங்குவதற்கும் இலவசமாக இடம் அளிப்பதோடு, மாதம் தோறும் ரூ.200 ஊக்கத் தொகையும் வழங்குகிறோம்.

இப்பயிற்சியில் சேர அடிப்படைத் தகுதிகள் என சிலவற்றை வகுத்துள்ளோம். இதன்படி, பிளஸ் டூ படித்திருப்பதுடன், 17 முதல் 24 வயதுக்குள் இருக்கவேண்டும். அத்துடன், ஆங்கில மொழியில் அடிப்படை அறிவாற்றல் பெற்றிருப்பதோடு, ஓரளவு பார்ப்பதற்கு "பர்சனாலிட்டி'யும் இருக்க வேண்டும். ஓராண்டு காலம் நடைபெறும் இப்பயிற்சியின் போது, கேபின் க்ரூ டிரெய்னிங், வெளிநாட்டு மொழி (ஜெர்மனி மற்றும் பிரெஞ்சு மொழி) பயிற்சி, ஹோட்டல் மேனேஜ்மென்ட், இன்டர்நேஷனல் டிக்கெட்டிங் அண்ட் டூரிஸம் (கலிலியோ, ஃபிடிலியோ முறை), பர்சனாலிட்டி டெவலப்மென்ட் அண்ட் பப்ளிக் ரிலேஷன், பிசினஸ் இங்கிலீஷ், முதலுதவி, இன்டஸ்டிரியல் டிரெய்னிங், பர்சனல் குரூமிங், ஹேர் அண்ட் ஸ்கின் கேர் பயிற்சி, விமானம் மற்றும் நட்சத்திர ஹோட்டலுக்குள் அழைத்துச் சென்று பயிற்சி அளித்தல் மற்றும் நீச்சல் பயிற்சி ஆகியவை அளிக்கப்படும்.

இப்பயிற்சியை முடிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்கும் நாங்கள் உதவி செய்கிறோம். வேலைக்குச் சேர்ந்த உடனே அவர்களுக்கு சம்பளம் ரூ.30 ஆயிரத்திலிருந்து ரூ.40 ஆயிரம் வரை கிடைக்கும். வெளிநாட்டு விமான நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்தால் மாதம் தலா ரூபாய் ஒரு லட்சம் வரை சம்பளம் கிடைக்கும். தற்போது, இப்பயிற்சியில் எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டு முதல், பிற வகுப்பைச் சேர்ந்த மாணவர்களும் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். மேலும், பிற மாநிலங்களிலும் இந்தப் பயிற்சியை தொடங்க அம்மாநில அரசுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்'' என்றார்.

இப்பயிற்சியில் கலந்து கொள்ள வந்திருந்த திண்டுக்கல் மாவட்டம் பெரியகோட்டையைச் சேர்ந்த மாணவி தேன்மொழி, ""எனக்கு சின்ன வயதில் இருந்தே விமானப் பணிப்பெண்ணாக பணியாற்ற வேண்டும் என ஆசை இருந்தது.

ஆனால், என்னுடைய குடும்ப சூழ்நிலை, இப்பயிற்சியில் சேர அனுமதிக்கவில்லை. பயிற்சிக் கட்டணம் அதிகமாக இருந்ததே இதற்குக் காரணம். அப்போது தான், ஏர்-ஹோஸ்டஸ் அகாடமியின் விளம்பரத்தைப் பார்த்தேன். உடனே, இங்கு வந்து இப்பயிற்சியில் சேர்ந்தேன். இப்பயிற்சி முடித்ததும் என்னுடைய "லைஃப் ஸ்டைலே' முற்றிலும் மாறிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது'' என்றார்.

சென்னையைச் சேர்ந்த மாணவர் பாலசுப்ரமணி, ""பள்ளிப் பருவத்திலேயே விமானத்தில் பணியாற்ற வேண்டும் என்ற கனவு இருந்தது. தற்போது, அந்தக் கனவு நிஜமாகி விட்டது. இப்பயிற்சியில் சேரும் போது, ஆங்கிலத்தில் பேச சிரமப்பட்டேன். தற்போது, நான் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுகிறேன். இதன் மூலம், பிறரிடம் எளிதில் தொடர்பு கொள்ள முடிகிறது. இப்பயிற்சியில் சேர்ந்துள்ளதன் மூலம், எனக்கு வாழ்க்கையில் ஒரு புதிய தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது'' என்றார்.

- அப்புறமென்ன... இவர்களுக்கு வானமே எல்லைதான்!

படங்கள்: "மீனம்' மனோ
தினமணி கதிர், 27-08-2007

மந்திரக் கோட்டும் மாயாவியும்

என்.ராமதுரை, தினமணி, தெரியுமா? 25-09-2006

பிரபல நடிகர் என்.டி.ராமா ராவ் நடித்த "பாதாள பைரவி' என்னும் படத்தில் அவர் மந்திரக் கோட்டு ஒன்றை அணிவார். உடனே அவர் யார் கண்ணிலும் படாதவராகிவிடுவார். வில்லனை வெல்ல இந்த மந்திரக் கோட்டு அவருக்கு உதவுகிறது. ஹாரி பாட்டர் கதையிலும் இப்படி மந்திரக் கோட்டு உண்டு. "இன்விசிபிள் மேன்' என்னும் ஆங்கிலப் படத்தில் கதாநாயகன் யார் கண்ணிலும் படாத மாயமனிதனாக நடமாடுவார். இதெல்லாம் வெறும் கதைதான்.

ஆனால் நிஜ உலகில் இப்படி - ஒரு மனிதனை இல்லாவிட்டாலும் - ஒரு சிறிய பொருளை யார் கண்ணிலும் படாதபடி ஆக்க வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இது பற்றி இப்போது மேலை நாடுகளில் தீவிர ஆராய்ச்சி நடந்து வருகிறது.

தெரு விளக்கு வெளிச்சம் கூட நுழையாதபடி எல்லாக் கதவுகளும் ஜன்னல்களும் மூடப்பட்ட ஒரு வீட்டுக்குள் நீங்கள் நள்ளிரவில் நுழைந்தால் எதிலும் மோதாமல் இருக்க இரு கைகளையும் துழாவிக் கொண்டு மெதுவாக நடக்க வேண்டியிருக்கும். இருட்டில் எதுவும் தெரியாது. டார்ச் லைட் அடித்தால் எதிரே உள்ள பொருட்கள் நன்கு தெரியும். எந்த ஒரு பொருளையும் நாம் காண்பதற்கு ஒளி தேவை. ஒரு பொருள் மீது ஒளிக் கற்றைகள் படும் போது தான் அப் பொருள் நம் கண்களுக்குப் புலனாகிறது.

பகலில் நல்ல வெளிச்சத்தில் பொருட்கள் தெளிவாகத் தெரிகின்றன. இவ்விதம் வெளிச்சத்தில் தெரிகின்ற பொருள் ஒன்றை கண்ணுக்கு தெரியாதபடி செய்வது எப்படி என்பது குறித்துத்தான் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே அமெரிக்காவிடம் புலப்படா விமானங்கள் (நற்ங்ஹப்ற்ட் ஆர்ம்க்ஷங்ழ்) உள்ளன. அதாவது இவை ராடார் கருவியின் திரையில் சிக்காதவை. விமானம் தொலைவில் இருக்கும் போதே அதைக் கண்டுபிடிக்க எல்லா நாடுகளிலும் ராடார் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. ராடார் கருவியிலிருந்து கிளம்பும் மைக்ரோ அலைகள் விமானத்தின் மீது பட்டு எதிரொலித்துத் திரும்பி வரும். அப்படி அவை திரும்ப வரும்போது ராடார் கருவியின் திரையில் அது நிழல் போன்று தெரியும். இதை வைத்து எதிரி விமானத்தை தாக்க ஏவுகணைகளைச் செலுத்த முடியும். அமெரிக்காவிடம் உள்ள புலப்படா விமானத்தின் வெளிப்புற பகுதிகள் மைக்ரோ அலைகளை "விழுங்கி' விடும் அல்லது அவற்றை வேறு திசையில் திருப்பி விடும். ஆகவே அவை எதிரொலித்து ராடார் கருவிக்குத் திரும்ப வந்து சேர முடியாமல் போய் விடும். ஆகவே அமெரிக்கா இந்த வகை விமானங்களைப் பயன்படுத்தி எதிரி நாடுகள் மீது எளிதில் தாக்குதல் நடத்த முடிகிறது.

இப்போது விஞ்ஞானிகள் ஒளிக்கற்றை விஷயத்தில் வேறு கோணத்திலிருந்து ஆராய்கின்றனர். இவர்கள் நடத்தும் ஆராய்ச்சியில் ஒரு பொருள் மீது மின்காந்த அலைகள் - ஒளிக் கற்றைகளும் ஒரு வகையான மின்காந்த அலைகளே - விழும்போது அவை செயலிழக்கின்றன. அல்லது அப் பொருள் மீது படாமல் பக்கவாட்டில் சுற்றிச் செல்கின்றன. ஒளிக்கற்றைகளை இவ்வாறு செயல்படுமாறு ஆக்குவதற்கு குறிப்பிட்ட பொருட்களால் ஆன கேடயத்தை உருவாக்குவது விஞ்ஞானிகளின் முயற்சியாகும். ஒரு பொருளுக்கு விசேஷப் பூச்சு அளிப்பதன் மூலமும் ஒளி அலைகள் அதன் மீது விழாதபடி செய்வது குறித்தும் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

அந்த அளவில் அவ்வகைப் பொருட்களைக் கொண்டு கதைகளில் வருகின்ற மந்திரக் கோட்டு போன்ற ஒன்றை உருவாக்குவது ஏட்டளவில் சாத்தியமே என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனாலும் இப்போதுள்ள அளவில் மிக நுண்ணிய பொருட்களை மைக்ரோ அலைகளைப் பொருத்தமட்டில் புலப்படாமல் ஆக்க இயலும் என்றே கூறப்படுகிறது. ஒளி அலைகள் விஷயத்திலும் இதை சாத்தியமாக்க இன்னும் நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது. இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றால் மந்திரக் கோட்டு தயாரிப்பது அவர்களது நோக்கமாக இராது. ராணுவத்துறையில் தான் முதலில் அது பயன்படுத்தப்படும்.

நடுப்பகல் எப்போது?

என்.ராமதுரை, தினமணி, தெரியுமா? 24-09-2006

இந்தியாவின் கிழக்குக் கோடியில் அருணாசலப் பிரதேசத்தில் டோங் எனப்படும் இடத்தில் ஒருவர் தமது கைகடிகாரத்தைப் பார்க்கிறார். மணி 12 காட்டுகிறது. ஆனால் சூரியனைப் பார்த்தால் அது உச்சியைத் தாண்டி ஒரு மணி நேரமாகிவிட்டதாகத் தெரிகிறது. இந்தியாவின் மேற்குக் கோடியில் மாண்ட்வி நகரில் அதே போல ஒருவர் கைகடிகாரத்தை நோக்குகிறார். மணி 12 காட்டுகிறது. ஆனால் வானைப் பார்த்தால் சூரியன் உச்சிக்கு வர மேலும் ஒரு மணி நேரம் ஆகும் போலத் தெரிகிறது. ஆனால் அலாகாபாத் அருகே மிர்சாபூரில் இருப்பவர் கடிகாரத்தைப் பார்க்கும் போது மணி 12. சூரியன் தலைக்கு மேலே உச்சியில் இருக்கிறது. இதற்குக் காரணம் உண்டு.

பூமி உருண்டை என்பதால் சூரிய உதயம் ஊருக்கு ஊர் வித்தியாசப்படும். ஆகவே சூரியன் தலைக்கு மேலே உச்சிக்கு வருகிற நேரமும் வித்தியாசப்படும். இந்த நிலையில் தங்கள் ஊரில் சூரியன் உச்சிக்கு வருவதை வைத்து ஒவ்வொருவரும் கடிகாரத்தில் மணி 12 என்று வைத்துக் கொள்ள முயன்றால் அது சரிப்பட்டு வராது. குழப்பம் தான் ஏற்படும்.

மிர்சாபூர் நாட்டின் மத்தியில் உள்ளது. 82.5 டிகிரி கிழக்கு தீர்க்கரேகை அந்த ஊர் மீது அமைந்துள்ளது. சூரியன் அந்த ஊரில் நேர் உச்சியில் இருக்கும் போது இந்தியா முழுவதற்கும் நடுப்பகல் 12 மணி என்று நாம் நிர்ணயித்துக் கொண்டுள்ளோம். அதுவே இந்தியாவுக்கான பொது நேரம் ஆகும். இது இந்தியாவின் நிர்ணய நேரம் (Indian Standard Time) அதாவது சுருக்கமாக IST என்று குறிப்பிடப்படுகிறது. நாட்டில் ஒவ்வொருவரின் வீட்டில் இருக்கிற கடிகாரங்களும் அவரவர் அணிந்துள்ள கைகடிகாரங்களும் இந்த ஏற்பாட்டின்படியான நேரத்தைத்தான் காட்டுகின்றன.

இந்த ஏற்பாட்டில் ஒரு வசதி உள்ளது. உலக அளவில் பின்பற்றப்படுகிற மபஇ நேரத்துக்கும் (பழைய GMT) இந்தியாவின் IST-க்கும் இடையில் சரியாக 5 மணி 30 நிமிஷ நேர வித்தியாசம் உள்ளது.

நாம் பின்பற்றுகிற IST ஏற்பாட்டில் பிரச்சினை இல்லாமல் இல்லை. அருணாசலப் பிரதேசத்தில் சூரியனை வைத்துக் கணக்கிடுகிற நேரத்துக்கும் நாம் பின்பற்றுகிற நேரத்துக்கும் இடையே ஒரு மணி நேர வித்தியாசம் உள்ளது. மேற்குக் கோடியில் குஜராத்தில் உள்ளவர்களுக்கும் இதே பிரச்சினை உள்ளது. சென்னையைப் பொருத்தவரை அது 80 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையில் அமைந்துள்ளதால் பெரிய வித்தியாசம் கிடையாது. ஆகவே சென்னைக்கும் சரி, தமிழக நகரங்களுக்கும் சரி பெரிய பிரச்சினை இல்லை. முன்னர் பிரிட்டிஷ் கம்பெனி ஆட்சி நடந்த போது சென்னை நகரின் நேரம் தான் பிரிட்டிஷ் இந்தியாவுக்கான பொது நேரமாக இருந்தது.

இந்தியாவின் மேற்குக் கோடியிலிருந்து கிழக்குக் கோடி வரையிலான தூரம் சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர். ஆகவே வடகிழக்கு மாநிலங்களில் உள்ளவர்கள் தங்களுக்கென தனி நேர மண்டலம் ஏற்படுத்தக் கோரினர். மேற்குக் கோடியில் இருப்பவர்களுக்கும் பிரச்சினை உள்ளதால் இந்தியாவில் மூன்று நேர மண்டலங்களைப் பின்பற்றலாம் என்று 1980 களில் யோசனை கூறப்பட்டது. இந்த யோசனையை 2001-ல் ஒரு கமிட்டி ஆராய்ந்து கடைசியில் அதை நிராகரித்துவிட்டது.

அமெரிக்காவைப் பொருத்தவரையில் அந்த நாடு முழுவதுக்கும் பொருந்துகிற தனி ஒரு நேர ஏற்பாடு கிடையாது. காரணம் நியூயார்க் நகருக்கும் மேற்குக் கோடியில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகருக்கும் இடையே உள்ள நேர வித்தியாசம் மூன்று மணி நேரம் ஆகும். ஆகவே அமெரிக்காவில் 4 நேர மண்டலங்கள் உள்ளன. இவற்றைத் தவிர அலாஸ்காவும், ஹவாயும் தனித்தனி நேர மண்டலங்களைப் பெற்றுள்ளன. ஆகவே ஒருவர் ஒரு நேர மண்டலத்திலிருந்து அடுத்த நேர மண்டலத்துக்குச் செல்லும் போது கைகடிகாரத்தில் நேரத்தை அங்குள்ள நேர மண்டலத்துக்கு ஏற்ப திருத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.

அவ்வளவாகப் படிப்பறிவில்லாத மக்களைக் கொண்ட இந்தியாவில் இப்படி மூன்று நேர மண்டலங்கள் இருக்குமானால் விவரமறியாத மக்கள் மிகவும் சிரமப்படுவார்கள். கமிட்டி எடுத்த முடிவு சரியானதே என்று சொல்லலாம்.

பூகம்பம் மனிதனை சாகடிப்பதில்லை?

என்.ராமதுரை, தினமணி, தெரியுமா? 23-09-2006

ஆர்மீனியா நாட்டில் 1988 ஆம் ஆண்டில் ஸ்பிடாக் என்னுமிடத்தில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. மறு ஆண்டில் அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு அருகே லோமா பிரிட்டா என்னுமிடத்தில் அதே போல கடும் பூகம்பம் ஏற்பட்டது. இரண்டுமே ரிக்டர் அளவில் 7 ஆகப் பதிவாகியது. ஆனால் ஆர்மீனியாவில் பூகம்பத்துக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகினர். லோமா பிரிட்டாவில் 62 பேர் மட்டுமே உயிரிழந்தனர்.

ஓரிடத்தில் பூகம்பம் ஏற்பட்டால் அதற்குப் பலியாகிறவர்களின் எண்ணிக்கை பல அம்சங்களைப் பொருத்தது. பூகம்பம் தாக்கிய பகுதியில் எவ்விதமான கட்டடங்கள் இருந்தன? அவை அனைத்தும் பூகம்பத்தை தாங்கி நிற்கிற வகையில் கட்டப்பட்டவையா என்பன முக்கிய அம்சங்களாகும்.

லோமா பிரிட்டாவில் கட்டப்பட்ட கட்டடங்கள் பூகம்பத்தை தாங்கி நிற்கிற வகையில் கடும் கட்டுமான விதிகளைப் பின்பற்றிக் கட்டப்பட்டவை என்பதால் பூகம்பம் ஏற்பட்ட போது இடிந்த கட்டடங்கள் மிகக் குறைவாகவே இருந்தன. ஆர்மீனியாவில் நிலைமை வேறு விதமாக இருந்தது. ஆகவே அங்கு உயிர்ச் சேதம் அதிகமாக இருந்ததில் வியப்பில்லை.

இப்போதெல்லாம் பூகம்பத்தை நன்கு தாங்கி நிற்கிற வகையிலான கட்டடங்களைக் கட்டுவதற்கு நவீன தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. பூகம்ப வாய்ப்பு அதிகம் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில் 60 அல்லது 70 மாடிக் கட்டடங்கள் இந்த வகையில் கட்டப்பட்டுள்ளன. லோமா பிரிட்டா பூகம்பத்தின் போது சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில் சான்பிரான்சிஸ்கோ நகரில் டிரான்ஸ் அமெரிக்கா எனப்படும் 49 மாடிக் கட்டடம் ஒரு நிமிஷம் சற்றே ஆடியது. கட்டடத்தின் உச்சிப் பகுதி முன்னும் பின்னுமாக ஓர் அடி அசைந்தது. மற்றபடி அக் கட்டடத்துக்குச் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

ஜப்பானில் பூகம்ப ஆபத்து அதைவிட அதிகம். வழக்கமாக அங்கு வீடுகளும் இதர சிறிய கட்டடங்களும் மரத்தினால் கட்டப்படுவது வழக்கம். பூகம்பம் ஏற்பட்டு பலகைகள் முறிந்து அதன் அடியில் சிக்கினால் மீட்பது எளிது. இப்போதெல்லாம் ஜப்பானில் டோக்கியோ போன்ற நகரங்களில் மிக உயரமான அடுக்கு மாடிக் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. இவற்றின் அஸ்திவாரத்தில் ரப்பர் பாளங்கள் அல்லது உருளைகள் வைக்கப்படுகின்றன. தைவானில் 101 மாடிக் கட்டடத்தில் உச்சிக்கு சற்று கீழே 733 டன் இரும்பு உருண்டை தொங்கவிடப்பட்டுள்ளது. பூகம்பம் ஏற்பட்டு கட்டடம் அசைய முற்பட்டால் அந்த அசைவுக்கு எதிர்திசையில் இந்த உருண்டை நகர்ந்து கட்டடம் அதிகம் ஆடாமல் பார்த்துக்கொள்கிறது.

அமெரிக்காவில் பூகம்ப வாய்ப்புள்ள இடங்களில் கட்டடங்களை எவ்விதம் கட்ட வேண்டும் என்பது குறித்து கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. தவிரவும் பூகம்பம் ஏற்பட்டால் எவ்வித விளைவுகள் தோன்றுகின்றன என்பதைப் பதிவு செய்வதற்கு பெரிய கட்டடங்கள், பாலங்கள், அணைகள் போன்றவற்றில் நுட்பமான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு பூகம்பத்துக்குப் பிறகு இக்கருவிகள் காட்டுகிற தகவல்களை வைத்து கட்டுமானத் தொழில்நுட்பம் மேலும் செம்மையாக்கப்படுகிறது.

பூகம்ப வாய்ப்புள்ள பகுதிகளில் கட்டடங்கள் எவ்விதம் கட்டப்படவேண்டும் என்பது குறித்து இந்தியாவில் சட்ட திட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இவை கண்டிப்பாகப் பின்பற்றப்படுவதாகச் சொல்ல முடியாது. அதுவும் கிராமப்புறங்களில் சொல்லவே வேண்டாம். முன்பெல்லாம் மண்சுவர் வைத்து கட்டடம் கட்டப்பட்ட இடங்களில் கடந்த பல ஆண்டுகளாக கான்கிரீட் கட்டடங்கள் முளைத்து வருகின்றன. விதிமுறைகளின்படி கட்டப்படாத நிலையில் இவை இடிந்து விழும்போது அடியில் சிக்கி மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகம். தவிர, இடிபாடுகளை விரைவில் அகற்றுவதற்கும் தகுந்த யந்திரங்கள் இருப்பதில்லை. ஆகவே தான் குஜராத்தில் பூஜ் நகரில் 2001 ஜனவரியில் (ரிக்டர் அளவில் 7.9) ஏற்பட்ட பூகம்பத்தின் போது 90 சதவிகித வீடுகள் இடிந்தன. அந்த பூகம்பத்தில் 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

கட்டடங்கள் சரியாகக் கட்டப்படவில்லை என்றால் அதன் இடிபாடுகளில் சிக்கி உயிரிழப்போர் தொகை தான் அதிகம். ஆகவே கட்டடங்கள் தான் மனிதனைக் கொல்கின்றன என்ற பொருளில் பூகம்பம் மனிதனைக் கொல்வதில்லை என்று சொல்வதுண்டு.

விடி வெள்ளி

என்.ராமதுரை, தினமணி, தெரியுமா? 22-09-2006

அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்னர் கிழக்கு வானில் அவ்வப்போது பிரகாசமான வான் பொருள் தெரியும். அதுவே விடிவெள்ளி எனப்படுகிறது. பலரும் அதை நட்சத்திரம் என்றே கருதுவர். உண்மையில் அது வெள்ளி கிரகம் ஆகும். வானில் சந்திரனுக்கு அடுத்தபடியாக மிகப் பிரகாசமானது வெள்ளியே.

விடிவெள்ளியை "அந்தி வெள்ளி' என்ற சொன்னாலும் அது பொருத்தமே. ஏனெனில் அவ்வப்போது அது சூரியன் அஸ்தமித்த பிறகு மேற்கு வானில் பிரகாசமாகத் தெரியும். ஆகவேதான் வெள்ளிக்கு ஆங்கிலத்தில் morning star என்றும் evening star என்றும் இரண்டு பெயர்கள் உண்டு.

வருகிற (2006) டிசம்பரில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு வெள்ளி கிரகம் மேற்கு வானில் பிரகாசமாகத் தெரியும்.

சூரிய மண்டலத்தில் வெள்ளி கிரகம் ஒரு வகையில் விசேஷமனது. மற்ற கிரகங்கள் (பூமி உட்பட) தங்கள் அச்சில் மேற்கிலிருந்து கிழக்காகச் சுழல்கின்றன. ஆனால் வெள்ளி கிரகம் ஒன்று தான் கிழக்கிலிருந்து மேற்காகச் சுழல்கிறது. ஆகவே வெள்ளி கிரகத்துக்கு நாம் போக நேர்ந்தால் அங்கு போனதும் “மேற்கே உதிக்கிற சூரியன் கிழக்கே உதித்தாலும் அது நடக்காது” என்று மாற்றிச் சொல்ல வேண்டும். ஆனால் அதற்கு வாய்ப்பே இராது.

எனெனில் நாம் வெள்ளி கிரகத்தில் இருக்க நேரிட்டால் சூரிய உதயத்தை ஒரு போதும் காண முடியாது. நம் ஊரில் ஐப்பசியில் பல நாட்கள் சூரியனே தலை காட்டாமல் வானம் மேக மூட்டமாக இருப்பது உண்டு. ஆனால் வெள்ளி கிரகத்தில் வானம் என்றென்றும் மேக மூட்டமாகவே இருக்கும். வெள்ளியைப் போர்த்து நிற்கும் மேகங்கள் காரணமாக பூமியிலிருந்து சக்தி மிக்க தொலை நோக்கி மூலம் பார்த்தாலும் வெள்ளியில் நிலப் பரப்பைக் காண இயலாது. கார்பன்-டை-ஆக்சைட் வாயுவினால் ஆன இந்த மேகங்கள் வேறு வகையிலும் அக் கிரகத்துக்கு சாபக்கேடாக உள்ளன.

வெள்ளியைப் போர்த்த முகில்கள் காரணமாக அந்த கிரகம் பற்றி மிக நீண்ட காலம் எதுவுமே தெரியாமல் இருந்தது. பூமிக்கு அருகாமையில் உள்ள கிரகம் என்றாலும் மற்ற பல கிரகங்களைப் பற்றி நிறைய அறியப்பட்ட பிறகே வெள்ளி பற்றி ஓரளவில் அறிய முடிந்தது. இன்றும் கூட வெள்ளி பற்றி நம்மால் இன்னும் முழுமையாக அறிய முடியவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் பரிமாணத்தைப் பொருத்த வரையில் பூமியைப் போல - பூமியின் சகோதரி போல விளங்குவது வெள்ளிக் கிரகமே.

வெள்ளியின் காற்று மண்டலம் அடர்த்தி மிக்கது. காற்றுக்கு எடை உண்டு என நாம் அறிவோம். அந்த வகையில் அங்கு பூமியில் உள்ளதை விட காற்றழுத்தம் மிக மிக அதிகம். இதன் விளைவாக பூமியிலிருந்து ஒரு விண்கலம் வெள்ளியில் போய் இறங்கினால் அது அங்குள்ள காற்றழுத்தம் காரணமாக ஒரேயடியாக நசுங்கிப் போய்விடும்.

வெள்ளியின் மேகங்களால் அங்கு வேறு வித விபரீதமும் உள்ளது. சூரிய வெப்பம் காரணமாக இயல்பாக வெள்ளி கிரகம் சூடேறுகிறது. ஆனால் அந்த வெப்பம் சற்றும் வெளியேறிவிடாதபடி மேகங்கள் தடுத்துவிடுகின்றன. இதன் காரணமாக வெள்ளியில் தரை வெப்பம் பயங்கரமான அளவில் உள்ளது. வெள்ளி கிரகத்தில் போய் இறங்குவது என்பது அக்கினிக் குண்டத்தில் இறங்குவதற்கு ஒப்பாக உள்ளது.

அமெரிக்காவும் ரஷியாவும் வெள்ளி கிரகத்துக்கு கடந்த காலத்தில் அனுப்பிய ஆளில்லாத விண்கலங்கள் வெள்ளியில் போய் இறங்கிய பின் மிகக் குறைந்த நேரமே செயல்பட்டன. மனிதன் ஒரு போதும் வெள்ளி கிரகத்தில் காலடி வைக்க முடியாது. அடிவானத்தில் வெள்ளி அழகாகத் தான் காட்சி அளிக்கிறது. ஆனால் உண்மையில் அது ஒரு
நரகமே.

கங்கண சூரிய கிரகணம்

என்.ராமதுரை, தினமணி, தெரியுமா? 21-09-2006

இம்மாதம் 22-ந் தேதி சூரியனின் நடுப் பகுதி மறைக்கப்பட்டு சூரியன் நெருப்பு வளையம் போல காட்சியளிக்கப் போகிறது. இது ஒரு வகை சூரிய கிரகணமே. இது கங்கண சூரிய கிரகணம் எனப்படுகிறது. (கங்கணம் என்றால் வளை).

சூரிய கிரகணம் ஏற்படுவது ஒரு பெரிய அதிசயமல்ல. இது அடிக்கடி நிகழ்வது தான். பூமியை ஓயாது சுற்றிக் கொண்டிருக்கிற சந்திரன் அவ்வப்போது சூரியனுக்கும் பூமிக்கும் குறுக்காக வந்து நிற்கும். அதாவது நீங்கள் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது உங்கள் முகத்தருகே ஒருவர் கையை விரித்து நீட்டினால் டிவி திரை மறைக்கப்படுகிறது. இவ்விதமாக சந்திரன் வந்து சூரியனின் ஒளித் தட்டை மறைக்கிறது.

எப்போதுமே அமாவாசையன்று தான் சூரிய கிரகணம் நிகழும். ஏனெனில் அமாவாசைகளில் தான் பூமிக்கும் சூரியனுக்கும் நடுவே சந்திரன் அமைவதாகிறது. ஆனால் ஒவ்வொரு அமாவாசையிலும் சூரிய கிரகணம் ஏற்படுவதில்லை. காரணம் சந்திரனின் சுற்றுப்பாதை சற்று கீழாக அமைகிறது. அல்லது சற்று மேலாக அமைகிறது. ஆகவே தான் சந்திரன் ஒவ்வொரு அமாவாசையிலும் குறுக்கே வந்து நிற்பதில்லை.

சந்திரன் சில சமயங்களில் அவ்விதம் நேர் குறுக்கே வந்து நிற்கிது. அப்போது சூரியனின் ஒளித் தட்டு முழுவதுமாக மறைக்கப்படும். அது முழு சூரிய கிரகணம் ஆகும். அப்படியான நிலைமைகளில் சந்திர வட்டமும் சூரியனின் ஒளித்தட்டும் மிகச் கச்சிதமாக பொருந்துவதாக இருக்கும். இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். வானில் நம் பார்வைக்கு சூரியனும் பெüர்ணமி சந்திரனும் அநேகமாக ஒரே அளவில் இருக்கின்றன. அதற்குக் காரணம் உண்டு. குறுக்களவை வைத்து ஒப்பிட்டால் சந்திரனை விட சூரியன் சுமார் 400 மடங்கு பெரியது. பூமியிலிருந்து சந்திரன் உள்ள தூரத்துடன் ஒப்பிட்டால் சூரியன் 400 மடங்கு தொலைவில் உள்ளது. இது தற்செயல் பொருத்தமே. ஆகவேதான் சூரியனும் சந்திரனும் பார்வைக்கு ஒரே அளவில் இருப்பதாகத் தெரிகிறது.

எனினும் பூமியிலிருந்து சந்திரன் எப்போதும் ஒரே தூரத்தில் இருப்பதாகச் சொல்ல முடியாது. ஒரு சமயம் சந்திரன் அதிகபட்சமாக 4,05,542 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கலாம். வேறு சமயங்களில் அது குறைந்த பட்சமாக 3,63,296 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கலாம். சந்திரன் அதிகபட்ச தொலைவில் இருக்கின்ற சமயத்தில் அது சூரியனை மறைக்கின்ற வகையில் நேர் குறுக்கே நிற்குமானால் அப்போது அது சூரியனின் ஒளித் தட்டை விளிம்புடன் விளிம்பு பொருந்துகிற வகையில் முழுமையாக மறைக்காது. சூரிய ஒளித் தட்டின் நட்ட நடுவில் சந்திரன் அமைந்துள்ளது போலக் காட்சி அளிக்கும். அந்த நிலைமையில் தான் கங்கண சூரிய கிரகணம் நிகழ்கிறது.

சில சமயங்களில் சூரியனின் ஒளித் தட்டை சந்திரன் ஓரமாகக் கடக்கும். அவ்வித நிலையில் அரைகுறை சூரிய கிரகணம் நிகழும்.

இப்போது நிகழ்கிற கங்கண சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. 2010-ஆம் ஆண்டு ஜனவரி 15-ந் தேதி இதே போல கங்கண சூரிய கிரகணம் நிகழ இருக்கிறது. அது தமிழகத்தில் தெரிவதாக இருக்கும். பொதுவில் சூரிய கிரகணத்தின் போது சூரியனை வெறுங்கண்ணால் பார்க்கவே கூடாது.

சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் பற்றிப் பல மூட நம்பிக்கைகள் உண்டு. இந்த விஞ்ஞான யுகத்திலும் அவை முற்றிலுமாக நீங்கவில்லை. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் முழு சூரிய கிரகணம் ஏற்பட்டது. கிரகண நேரத்தில் வெளியே வந்தால் ஏதோ விபரீதம் ஏற்பட்டு விடும் என்ற பீதியில் மக்கள் வீடுகளில் முடங்கினர். சென்னை நகரில் சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. மூட நம்பிக்கையே அதற்குக் காரணம்.

இறக்கையில்லாத விமானம்

என்.ராமதுரை, தினமணி, தெரியுமா? 20-09-2006

வான் வழியே பயணம் செய்ய விமானம் தான் தேவை என்று சொல்ல முடியாது. ஆகாயக் கப்பல் எனப்படும் வாகனத்தின் மூலமும் பயணம் செய்ய முடியும். சொல்லப் போனால் விமானம் வந்ததற்கு முன்னர் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பயணம் செய்ய 1928 முதல் 1937 வரை ஆகாயக் கப்பல்கள் (Airships) தான் பயன்படுத்தப்பட்டன. இப்போதைய விமானங்களில் பயணிகள் நன்கு சாய்ந்து கொண்டு செல்லலாமே தவிர பயணிகளுக்கென தனித்தனி அறை கிடையாது. ஆகாயக் கப்பல்களில் தனித்தனி அறைகள் இருந்தன. உணவுக் கூடம் இருந்தது. இன்னும் பல வசதிகளும் இருந்தன.

ஆகாயக் கப்பல்களை ஹைட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட பிரம்மாண்டமான பலூன் எனலாம். ஹைட்ரஜன் வாயு அடைக்கப்பட்ட பலூன்களை நீங்கள் பார்த்திருக்கலாம். நூலை விட்டால் உயரே பறந்து போய்விடும். ஹைட்ரஜன் வாயு காற்றை விட லேசானது என்பதே காரணம். இந்த வாயு நிரப்பப்பட்ட ஆகாயக் கப்பல் ஒன்றின் நீளம் 400 அல்லது 800 அடி வரை இருக்கலாம்.

இப்போதைய விமானங்களில் எஞ்சின்கள் இயங்காமல் நின்றுவிட்டால் அதோ கதி தான். ஆகாயக் கப்பலிலும் எஞ்சின்கள் உண்டு என்றாலும் எஞ்சின்கள் இயங்காவிட்டால் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படாது. அடிப்படையில் பலூன் என்பதால் அந்தரத்தில் ஒரே இடத்தில் நிலையாக நிற்கும் அவ்வளவு தான்.

ஆகாயக் கப்பல்களுக்கு இப்போதைய விமானத்தில் உள்ளது போன்று இறக்கைகள் கிடையாது. ஆகவே இவற்றை இறக்கை இல்லாத விமானம் என்றும் வருணிக்கலாம்.

ஆரம்ப நாட்களில் பட்டுத் துணியை கொண்டு முதலில் பலூன் வடிவம் பெறுகிற கூடு தயாரித்தனர். அதற்குள்ளாக ஹைட்ரஜன் வாயு அடங்கிய பலூன்கள் வைக்கப்பட்டன. ஆகாயக் கப்பல்களைக் கட்டுவதில் முன்னேற்றம் ஏற்பட்ட போது வெளிப்புறக்கூடு லேசான அலுமினியத்தால் உருவாக்கப்பட்டது. பலூன் வடிவ ஆகாயக் கப்பலின் அடிப்புறத்தில் கட்டுமானம் கட்டப்பட்டு அதில் தான் இருக்கைகள், அறைகள், கட்டில்கள், உணவுக்கூடம் முதலியன அமைக்கப்பட்டன.

இப்போதைய விமானங்கள் போல ஆகாயக் கப்பல்கள் வேகமாகச் செல்லக்கூடியவை அல்ல. ஆகாயக் கப்பலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர். இப்போதைய விமானங்கள் சுமார் 40 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கின்றன. ஆகாயக் கப்பல்கள் வெறும் ஆயிரம் அடி உயரத்தில் பறந்தன. வேண்டுமானால் அவற்றை மிகவும் தாழ்வாகவும் இயக்க முடியும். ஆகவே பறக்கின்ற இடத்துக்குக் கீழே உள்ள இயற்கைக் காட்சிகளை கண்டுகளிக்க முடியும் என்ற வசதியும் இருந்தது.

வான் வழியே பயணம் செய்வது புதிய அனுபவம் என்பதால் மக்கள் ஆகாயக் கப்பல்களில் பயணம் செய்வதை விரும்பினர். எனினும் காலப் போக்கில் பல்வேறு காரணங்களால் ஆகாயக் கப்பல் மவுசு இழந்தது.

ஆகாயக் கப்பல்களின் வேகம் மிகக் குறைவு. ஜெர்மனியில் ஹிண்டன்பர்க் என்ற பெரிய ஆகாயக் கப்பல் ஐரோப்பாவிலிருந்து நியூயார்க் போய்ச் சேர 60 மணி நேரம் பிடித்தது. இது இப்போது ஜெட் விமான மூலம் சென்றால் ஆவதைப் போல ஐந்து மடங்கு நேரம் ஆகும்.

ஹைட்ரஜன் வாயு எளிதில் தீப்பிடிக்கக்கூடியது. பல ஆகாயக் கப்பல்கள் இவ்விதம் தீப்பிடித்து அழிந்தன. தவிர, தரையில் இறங்கியபின் இவற்றைக் கம்பத்தில் கட்டிப் போடுவதிலும் பிரச்சினை இருந்தது. அடிப்படையில் பலூன் என்பதால் கடும் காற்று அடித்தால் ஆகாயக் கப்பல்கள் எளிதில் சேதம் அடைந்தன. ஹிண்டன்பர்க் 1937-ல் நியூயார்க் நகரில் தீப்பிடித்து அழிந்ததைத் தொடர்ந்து ஆகாயக் கப்பல் சகாப்தம் முடிந்தது.

இப்போது வானிலிருந்து ரோந்துப் பணி, விளம்பரம் செய்வது, பெரிய விளையாட்டு விழாக்களின் போது டிவி நிறுவனங்களுக்காக வானிலிருந்து படம் பிடிப்பது போன்ற பணிகளுக்கு ஆகாயக் கப்பல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் தீப்பிடிக்கும் வாய்ப்பு இல்லாத ஹீலியம் வாயு நிரப்பப்படுகிறது.

புதன் பெயர்ச்சி இல்லாதது ஏன்?

என்.ராமதுரை, தினமணி, தெரியுமா? 19-09-2006

சனிப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி என்றால் பத்திரிகைகளில் ஒவ்வொரு ராசிக்கும் விரிவாகப் பலன்கள் வெளியிடப்படும். சிறு புத்தகங்களும் வெளியிடப்படும். ஆனால் புதன் பெயர்ச்சியை யாரும் சீந்துவதில்லை. புதன் கிரகம் சூரியனுக்கு மிக அருகாமையில் உள்ளது என்பதே அதற்குக் காரணம்.

சிறுவர்கள் தெருவில் ஓடிப் பிடித்து விளையாடுவர். பிடிக்க வரும் சிறுவன் துரத்தும் போது துரத்தப்படுகிற சிறுவன் பிடிபடாமல் தப்பிக்க வேகமாக ஓடுவான். அதே நேரத்தில் மற்ற சிறுவர்கள் மிகத் தள்ளி இருக்க நேரிடும்போது அவர்கள் மெதுவாக ஓடுவர். அது போல புதன் கிரகம் சூரியனுக்கு மிக அருகாமையில் இருப்பதால் சூரியனின் ஈர்ப்பு சக்தியால் "பிடிபடாமல் இருக்க' சூரியனை அதி வேகத்தில் சுற்றி வர வேண்டியிருக்கிறது.

கிரகங்களின் இயக்கம் பற்றி ஆராய்ந்த விஞ்ஞானி கெப்ளர் கூறிய விதிகளின்படி ஒரு கிரகம் எந்த அளவுக்கு சூரியனிலிருந்து தொலைவில் உள்ளதோ அந்த அளவுக்கு அது தனது சுற்றுப்பாதையில் மெதுவாகச் செல்லும். சூரியனிலிருந்து வியாழன் 77 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அது தனது சுற்றுப்பாதையில் செல்லும் வேகம் மணிக்கு 46,000 கிலோ மீட்டர். 142 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சனி கிரகத்தின் வேகம் 34,000 கிலோ மீட்டர். இத்துடன் ஒப்பிட்டால் சூரியனிலிருந்து சுமார் 5 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதன் கிரகம் சூரியனை தனது சுற்றுப்பாதையில் மணிக்கு ஒரு லட்சத்து 72 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது. இது தலைதெறிக்கிற வேகமே. புதன் கிரகத்துடன் ஒப்பிட்டால் வியாழனும், சனியும் மெதுவாகச் செல்வதில் வியப்பில்லை.

பூமிக்கு மேலே உள்ள வான் பிரதேசம் 12 ராசி மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வியாழன் கிரகம் சூரியனை ஒரு தடவை சுற்றி முடிக்க கற்பனையான இந்த 12 ராசிகளையும் கடந்து சென்றாக வேண்டும். சூரியனை வியாழன் ஒரு தடவை சுற்றி முடிக்க சுமார் 12 ஆண்டுகள் ஆகின்றன. அதாவது வியாழன் ஒவ்வொரு ராசியிலும் ஓராண்டு இருக்கிறது. சனி கிரகம் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் இருக்கிறது. புதன் கிரகம் ஒவ்வொரு ராசியிலும் இருப்பது ஏழு நாட்களே. ஆகவே புதன் பெயர்ச்சிப் பலன்கள் பற்றித் தெரிவிப்பதானால் ஏழு நாட்களுக்கு ஒரு முறை புத்தகம் போட்டாக வேண்டும். புதன் பெயர்ச்சியை யாரும் சீந்தாததற்கு இதுவே காரணம்.

புதன் கிரகத்தில் ஒரு விசித்திரம் உள்ளது. நீங்கள் புதன் கிரகத்தில் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட சமயத்தில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் கிழக்கு வானை கவனித்தால் சூரியன் மிக மெதுவாக அடிவானில் எழும். பிறகு மெதுவாக கீழே அடிவானத்தை நோக்கி கிழக்கு திசையில் அஸ்தமிக்கும். பிறகு மெதுவாக மறுபடி உதிக்கும். அதாவது புதன் வானில் ஒரே நாளில் இரு சூரிய உதயங்களைக் காண இயலும். புதன் தனது அச்சில் மெதுவாகச் சுழல, அது தனது சுற்றுப் பாதையில் மிக வேகமாகச் செல்வதன் ஒரு விளைவாக இவ்விதம் நிகழ்கிறது. புதன் கிரகத்தில் ஒரு நாள் என்பது பூமிக் கணக்குப்படி 58 நாட்கள். ஆகவே புதன் கிரகத்தில் ஓயாத இரவும் ஓயாத பகலும் மாறி மாறி வருகின்றன.

இக் காரணத்தாலும் அத்துடன் சூரியனுக்கு மிக அருகில் இருப்பதாலும் புதன் கிரகத்தில் வெப்பம் - பகலில் 350 டிகிரி செல்சியஸ் - மிகக் கடுமையாக உள்ளது.

புதன் கிரகத்துக்கு மனிதன் சென்றது கிடையாது. ஆனாலும் ஆளற்ற விண்கலங்கள் அக் கிரகத்தை விரிவாக ஆராய்ந்துள்ளன. புதன் கிரகத்தில் எல்லா இடங்களுக்கும் நிபுணர்கள் பெயரிட்டுள்ளனர். அங்குள்ள வட்ட வடிவப் பள்ளங்கள் சிலவற்றுக்கு தியாகராஜா, காளிதாசா, அசுவகோஷா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 90 கிலோ மீட்டர் குறுக்களவு கொண்ட ஒரு பள்ளத்தின் பெயர் ஆண்டாள்.

வண்டுகளின் ராஜ்ஜியம்

என். ராமதுரை, தினமணி, தெரியுமா? 18-09-2006

ஜனநாயகத்தில் அனைவருக்கும் வாக்குரிமை என்ற அடிப்படையில் உலகில் யானை, குதிரை, ஆடு, மாடு, பூனை முதல் சிறிய வண்டுகள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் வாக்குரிமை இருக்குமானால் உலகில் வண்டுகள் தான் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும். ஏனெனில் பூமியில் வண்டுகள் இனம் தான் அதிகம் உள்ளது.

உலகில் 400 வகையான நாய்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் வண்டுகளை எடுத்துக் கொண்டால் 3 லட்சம் வகையான வண்டுகள் உள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது. இன்னொரு தகவலோ 5 லட்சம் வகையான வண்டுகள் உள்ளதாகத் தெரிவிக்கிறது. இந்த வித்தியாசத்துக்குக் காரணம் எவ்வளவு வகையான வண்டுகள் உள்ளன என்று இன்னும் முழுக் கணக்கு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூற முடியாது என்பதே.

பூமியில் எவ்வளவோ வகையான விலங்குகள், பறவைகள், பிராணிகள், வண்டுகள், பூச்சிகள், புழுக்கள் உள்ளன. கடந்த 300 ஆண்டுகளாகத் தான் நிபுணர்கள் கணக்கெடுத்து வருகிறார்கள். இன்னும் இக் கணக்கு முடிவடைந்த மாதிரி தெரியவில்லை. அதே நேரத்தில் கடந்த காலத்தில் மனிதனின் செயல்களால் எவ்வளவோ உயிரினங்கள் அழிந்து போய்விட்டன. முன்பு இந்தியாவில் பிரிட்டிஷ் எஜமானர்கள் காடுகளில் பாதுகாப்பாகப் பரண்கள் மீது அல்லது யானை மீது அமர்ந்து புலிகளை சுட்டுத் தள்ளி தங்கள் "வீரத்தை' காட்டினர். போர்ச்சுகீசியர்கள் மொரிஷஸ் தீவில் வாழ்ந்த டோடோ பறவை இனத்தை சுட்டுத் தள்ளி அந்த இனத்தையே அழித்தனர். ஆப்பிரிக்காவில் தென் அமெரிக்காவிலும் ஐரோப்பியர்களின் துப்பாக்கிக்களுக்கு எண்ணற்ற உயிரினங்கள் அழிந்தன.

இக் காலகட்டத்தில் தான் ஸ்வீடனைச் சேர்ந்த நிபுணர் கரோலஸ் லின்னாயஸ் (1707-1778) வகைப்பாட்டியல் (Taxonomy) என்ற புதிய துறையை உண்டாக்கினார். இது பல்வேறான உயிரினங்களை விஞ்ஞான அடிப்படையில் வகைப்படுத்தி அவற்றுக்குப் பெயரிடுவது தொடர்பானது. லின்னாயஸ் தாவரவியலில் மிகுந்த ஆர்வம் செலுத்தினார். தமது மாணவர்கள் மூலம் உலகின் பல பகுதிகளிலிருந்து தாவரங்களை சேகரித்தார். விலங்குகள் பற்றிய தகவல்களைச் சேகரித்தார். இவற்றை முறைப்படி அவர் வகைப்படுத்தி ஒரு நூல் வெளியிட்டார். இன்றும் அவர் உருவாக்கிய முறை தேவையான மாறுதல்களுடன் பின்பற்றப்படுகிறது.

லின்னாயஸுக்குப் பிறகு அவரைப் போலவே சார்லஸ் டார்வின் (1802-1882) உயிரின ஆய்வில் ஈடுபட்டார். புவியியல், தாவரவியல், விலங்கியல் என பல துறைகளிலும் ஆர்வம் காட்டி அத்துறைகளில் தேர்ச்சி பெற்றார். ஆராய்ச்சிக் கப்பல் ஒன்றில் 5 ஆண்டுகள் பயணம் செய்து பல தகவல்களையும் சான்றுகளையும் திரட்டினார். இறுதியில் அவர் உயிரினங்களின் தோற்றம், வளர்ச்சி பற்றிய தமது பரிணாமக் கொள்கை அடங்கிய நூலை வெளியிட்டார்.

டார்வினின் நூலுக்குக் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. அவரது கொள்கை வேண்டுமென்றே கொச்சைப்படுத்தப்பட்டு “குரங்கிலிருந்து மனிதன் தோன்றியதாக டார்வின் கூறுகிறார்” என்று பிரசாரம் செய்யப்பட்டது. குரங்கிலிருந்து மனிதன் தோன்றியதாக டார்வின் ஒரு போதும் கூறவில்லை. பல்வேறு வகையான குரங்குகளுக்கும் மனிதனுக்கும் பொது மூதாதையாக இருந்த உயிரினத்திலிருந்து படிப்படியாகப் பரிணாம வளர்ச்சி மூலம் மனிதன் தோன்றினான் என்று தான் டார்வின் கூறினார். ஆனாலும் இன்னமும் குரங்கிலிருந்து தான் மனிதன் தோன்றியதாகப் பலரும் பேசுகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க, பல்வேறு வகையான உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும் என உலகெங்கிலும் இப்போது பரந்த அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. காடுகளை அழித்தால், பணத்துக்காக அரிய விலங்குகளை வேட்டையாடினால், அவற்றைக் கடத்தினால், அது பல உயிரினங்களை அழிப்பதற்குச் சமம். ஆனால் வேதனையான வகையில் உலகின் கடல்களில் திமிங்கிலங்களை நவீன கருவிகளைக் கொண்டு வேட்டையாடிக் கொல்வது இன்றும் நின்றபாடில்லை.

மான் தோல், புலித் தோல், புலி நகம் வாங்க மாட்டோம். உடும்புக் கறி, மான் கறி, காடைக் கறி உண்ண மாட்டோம் என நாம் சபதம் ஏற்றால், உயிரினங்களைக் காப்பதற்கு ஓரளவு பங்களித்தவர்களாக இருப்போம்.

வானமே எல்லை

என்.ராமதுரை, தினமணி, தெரியுமா? 17-09-2006

ஓயாது மழை பெய்தால் ""வானமே பொத்துக்கொண்டு விட்டது போல மழை பொழிவதாக'' கூறுவது உண்டு. ""வானமே எல்லை'' என்றும் பேச்சு வழக்கில் சொல்வது உண்டு. மிக உயரமான கோபுரம் என்றால் வானை முட்டும் கோபுரம் என்பார்கள். வானம் என்பது ஏதோ மிக உயரத்தில் அமைந்துள்ள கூரை போன்றது என்ற எண்ணத்தில் இவ்வாறு கூறப்படுகிறது.

வானம் என்பது "தட்டையான' பூமிக்கு மேலே அமைந்த வளைவான கூடாரத்தின் உட்புறக் கூரை போன்று நமக்குக் காட்சி அளிக்கிறது. வானத்துக்கும் நிறம் உள்ளது போலவும் ஒரு தோற்றம் உள்ளது. சில சமயங்களில் அது தெளிவான நீல நிறத்தில் உள்ளது. வேறு சமயங்களில் அது சாம்பல் நிறத்தில் உள்ளது. ஆனால் நிலவற்ற நாளில் இரவில் வானை நோக்கினால் அது கரிய நிறத்தில் இருக்கிறது. இதிலிருந்து வானத்துக்கென தனி நிறம் இல்லை என நம்மால் ஊகிக்க முடிகிறது.

வானம் என்பது தான் என்ன? ஒரு பெரிய மைதானத்தில் ஒரு கொசு பறக்கிறது. அக் கொசு அந்தரத்தில் நிலையாக ஓரிடத்தில் நிற்பதாக வைத்துக் கொள்வோம். அக் கொசுவைப் பொருத்தமட்டில் எல்லாத் திசைகளிலும் உள்ள இடம் காலியானதே. பூமிக்கும் அது பொருந்தும்.

பூமியிலிருந்து நீங்கள் கிளம்பி எந்த திசையில் சென்றாலும் நீங்கள் போய்க் கொண்டே இருக்கலாம். பல ஆயிரம், பல லட்சம், பல கோடி ஆண்டுகள் பயணம் செய்தாலும் எல்லை என எதுவுமே கிடையாது. இதையே வேறு விதமாகச் சொல்வதானால் வானத்துக்கு எல்லையே கிடையாது. பிரும்மாண்டமான காலியிடத்தில் பூமியானது அந்தரத்தில் நின்றபடி தனது அச்சில் சுழல்கிறது. இந்த பிரும்மாண்டமான காலியிடத்தையே நாம் விண்வெளி(Space) என்று கூறுகிறோம்.

ஒரு பெரிய வீட்டைச் சுற்றிலும் விஸ்தாரமான காலியிடம் இருக்கலாம். ஆனாலும் அந்த வீட்டின் முன்புறத்தை வாசல் என்றும் பின்புறத்தைப் புழற்கடை என்றெல்லாம் குறிப்பிடுகிறோம். அந்த மாதிரியில் பூமியைச் சுற்றியுள்ள விண்வெளியின் ஒரு பகுதியை நாம் வானம் என்று கூறுகிறோம்.

பூமியைச் சுற்றிலும் காற்று மண்டலம் உள்ளது. இதையும் நாம் வானம் என்றே குறிப்பிடுகிறோம். மேக மூட்டமாக இருந்து மழை பெய்யும் போலத் தோன்றினால் “வானம் மப்பு மந்தாரமாக” உள்ளது என்று கூறுகிறோம். அதே நேரத்தில் பக்கத்து ஊரில் நல்ல வெயில் அடிக்கலாம். ஆகவே அவர்கள் வானம் தெளிவாக இருக்கிறது என்று கூறுவார்கள். அதாவது அந்தந்த வட்டாரத்துக்கு மேலே உள்ள குறிப்பிட்ட வான் பகுதியும் வானம் என்றே குறிப்பிடப்படுகிறது. தவிர, தலைக்கு மேலே காகம் பறக்கிற இடமும் நமக்கு வானம் தான். தலைக்கு மேலே பல கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் சூரியன் இருக்கிற இடமும் நமக்கு வானம் தான்.

வானத்துக்கு நிறம் கிடையாது என்று குறிப்பிட்டோம். நீங்கள் சந்திரனில் இருப்பதாக வைத்துக் கொண்டால் வானம் எல்லா நேரங்களிலும் ஒரே கருப்பாக இருக்கும். பகலில் இந்தக் கரிய வானில் சூரியன் தெரியும். நட்சத்திரங்களும் தெரியும். பூமியில் காற்று மண்டலம் இருப்பதால், பகல் நேரத்தில் சூரியனின் ஒளிக் கதிர்கள் - குறிப்பாக சூரிய ஒளியில் அடங்கிய நீல நிற ஒளி அலைகள் நாலாபுறங்களிலும் சிதறடிக்கப்பட்டு வானம் என்பது நீல நிறத்தில் காட்சி அளிக்கிறது.

பகலில் தெரிகிற வானமும் இரவில் தெரிகிற வானமும் முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. இரவு வானமோ மிக மிக உயரத்தில் இருப்பது போன்று தோன்றுகிறது. மிக உயரமான கூடாரத்தின் உட்புறக் கூரையில் நுண்ணிய விளக்குகள் பதிக்கப்பட்டது போலவும் தோன்றுகிறது. பகல் வானம் நமக்கு அருகாமையில் உள்ளது போலக் காட்சி அளிக்கிறது. எல்லாம் வெறும் தோற்றமே. சுருங்கச் சொன்னால் வானம் என்று தனியாக எதுவும் இல்லை.