பூகம்பம் மனிதனை சாகடிப்பதில்லை?

என்.ராமதுரை, தினமணி, தெரியுமா? 23-09-2006

ஆர்மீனியா நாட்டில் 1988 ஆம் ஆண்டில் ஸ்பிடாக் என்னுமிடத்தில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. மறு ஆண்டில் அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு அருகே லோமா பிரிட்டா என்னுமிடத்தில் அதே போல கடும் பூகம்பம் ஏற்பட்டது. இரண்டுமே ரிக்டர் அளவில் 7 ஆகப் பதிவாகியது. ஆனால் ஆர்மீனியாவில் பூகம்பத்துக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகினர். லோமா பிரிட்டாவில் 62 பேர் மட்டுமே உயிரிழந்தனர்.

ஓரிடத்தில் பூகம்பம் ஏற்பட்டால் அதற்குப் பலியாகிறவர்களின் எண்ணிக்கை பல அம்சங்களைப் பொருத்தது. பூகம்பம் தாக்கிய பகுதியில் எவ்விதமான கட்டடங்கள் இருந்தன? அவை அனைத்தும் பூகம்பத்தை தாங்கி நிற்கிற வகையில் கட்டப்பட்டவையா என்பன முக்கிய அம்சங்களாகும்.

லோமா பிரிட்டாவில் கட்டப்பட்ட கட்டடங்கள் பூகம்பத்தை தாங்கி நிற்கிற வகையில் கடும் கட்டுமான விதிகளைப் பின்பற்றிக் கட்டப்பட்டவை என்பதால் பூகம்பம் ஏற்பட்ட போது இடிந்த கட்டடங்கள் மிகக் குறைவாகவே இருந்தன. ஆர்மீனியாவில் நிலைமை வேறு விதமாக இருந்தது. ஆகவே அங்கு உயிர்ச் சேதம் அதிகமாக இருந்ததில் வியப்பில்லை.

இப்போதெல்லாம் பூகம்பத்தை நன்கு தாங்கி நிற்கிற வகையிலான கட்டடங்களைக் கட்டுவதற்கு நவீன தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. பூகம்ப வாய்ப்பு அதிகம் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில் 60 அல்லது 70 மாடிக் கட்டடங்கள் இந்த வகையில் கட்டப்பட்டுள்ளன. லோமா பிரிட்டா பூகம்பத்தின் போது சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில் சான்பிரான்சிஸ்கோ நகரில் டிரான்ஸ் அமெரிக்கா எனப்படும் 49 மாடிக் கட்டடம் ஒரு நிமிஷம் சற்றே ஆடியது. கட்டடத்தின் உச்சிப் பகுதி முன்னும் பின்னுமாக ஓர் அடி அசைந்தது. மற்றபடி அக் கட்டடத்துக்குச் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

ஜப்பானில் பூகம்ப ஆபத்து அதைவிட அதிகம். வழக்கமாக அங்கு வீடுகளும் இதர சிறிய கட்டடங்களும் மரத்தினால் கட்டப்படுவது வழக்கம். பூகம்பம் ஏற்பட்டு பலகைகள் முறிந்து அதன் அடியில் சிக்கினால் மீட்பது எளிது. இப்போதெல்லாம் ஜப்பானில் டோக்கியோ போன்ற நகரங்களில் மிக உயரமான அடுக்கு மாடிக் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. இவற்றின் அஸ்திவாரத்தில் ரப்பர் பாளங்கள் அல்லது உருளைகள் வைக்கப்படுகின்றன. தைவானில் 101 மாடிக் கட்டடத்தில் உச்சிக்கு சற்று கீழே 733 டன் இரும்பு உருண்டை தொங்கவிடப்பட்டுள்ளது. பூகம்பம் ஏற்பட்டு கட்டடம் அசைய முற்பட்டால் அந்த அசைவுக்கு எதிர்திசையில் இந்த உருண்டை நகர்ந்து கட்டடம் அதிகம் ஆடாமல் பார்த்துக்கொள்கிறது.

அமெரிக்காவில் பூகம்ப வாய்ப்புள்ள இடங்களில் கட்டடங்களை எவ்விதம் கட்ட வேண்டும் என்பது குறித்து கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. தவிரவும் பூகம்பம் ஏற்பட்டால் எவ்வித விளைவுகள் தோன்றுகின்றன என்பதைப் பதிவு செய்வதற்கு பெரிய கட்டடங்கள், பாலங்கள், அணைகள் போன்றவற்றில் நுட்பமான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு பூகம்பத்துக்குப் பிறகு இக்கருவிகள் காட்டுகிற தகவல்களை வைத்து கட்டுமானத் தொழில்நுட்பம் மேலும் செம்மையாக்கப்படுகிறது.

பூகம்ப வாய்ப்புள்ள பகுதிகளில் கட்டடங்கள் எவ்விதம் கட்டப்படவேண்டும் என்பது குறித்து இந்தியாவில் சட்ட திட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இவை கண்டிப்பாகப் பின்பற்றப்படுவதாகச் சொல்ல முடியாது. அதுவும் கிராமப்புறங்களில் சொல்லவே வேண்டாம். முன்பெல்லாம் மண்சுவர் வைத்து கட்டடம் கட்டப்பட்ட இடங்களில் கடந்த பல ஆண்டுகளாக கான்கிரீட் கட்டடங்கள் முளைத்து வருகின்றன. விதிமுறைகளின்படி கட்டப்படாத நிலையில் இவை இடிந்து விழும்போது அடியில் சிக்கி மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகம். தவிர, இடிபாடுகளை விரைவில் அகற்றுவதற்கும் தகுந்த யந்திரங்கள் இருப்பதில்லை. ஆகவே தான் குஜராத்தில் பூஜ் நகரில் 2001 ஜனவரியில் (ரிக்டர் அளவில் 7.9) ஏற்பட்ட பூகம்பத்தின் போது 90 சதவிகித வீடுகள் இடிந்தன. அந்த பூகம்பத்தில் 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

கட்டடங்கள் சரியாகக் கட்டப்படவில்லை என்றால் அதன் இடிபாடுகளில் சிக்கி உயிரிழப்போர் தொகை தான் அதிகம். ஆகவே கட்டடங்கள் தான் மனிதனைக் கொல்கின்றன என்ற பொருளில் பூகம்பம் மனிதனைக் கொல்வதில்லை என்று சொல்வதுண்டு.

0 மறுமொழிகள்: