குறும்படங்கள் - விசாலப் பார்வை!

"குறும்படங்கள் - விசாலப் பார்வை!" - சிவாஜி ஆதித்தன்

சென்னை, எம்.ஜி.ஆர். நகரில் பரபரப்பாக தொடங்கியுள்ளது குறும்பட தயாரிப்பாளர்கள் சங்கம். குறும்படங்களுக்காக ஒரு சங்கமா? இந்த சங்கம் குறும்படங்களுக்காக என்ன செய்யப்போகிறது? இந்தச் சங்கத்தினால் என்ன பயன்? என்பதை அறிந்துகொள்ள சங்கத்தின் தலைவர் பி. மனோகரனைச் சந்தித்தோம்.

குறும்படங்களுக்கு ஒரு சங்கம் அமைத்திருப்பது எதற்காக?

வெவ்வேறு இடங்களில் தயாராகும் குறும்படங்கள் குறிப்பிட்ட வட்டத்திற்குள் முடங்கி விடுகின்றன. நல்ல குறும்படங்கள் அனைத்து மக்களையும் சென்றடைவதில்லை. குறும்படங்கள் தயாரிப்பவர்களுக்கு பொருளாதார உத்திரவாதம் இல்லை. குறும்படங்களை விற்க முடிவதும் இல்லை. எனவே தரமான குறும்படங்களை ஒருங்கிணைத்து வர்த்தக ரீதியில் மொத்த விநியோகம் செய்வது அல்லது தொடர் ஒளிபரப்பு செய்து, அதன்மூலம் அந்தந்த படைப்பாளிகள் பயனுறச் செய்யும் நோக்கத்தோடு தொடங்கியிருப்பதுதான் இந்தச் சங்கம். "அகில இந்திய குறும்படத் தயாரிப்பாளர் சங்கம்' என்று பெயர் சூட்டியிருக்கிறோம். ஏற்கனவே தயாரிக்கப்பட்ட குறும்படங்களைத் தொகுத்து வெளியிடுவது மட்டும் எங்கள் வேலை அல்ல, சங்கமே சொந்தமாகக் குறும்படங்களைத் தயாரித்து அதில் உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும்!

குறும்படங்களின் ஓடும் நேரம் ஒவ்வொன்றும் மாறுபடுமே... அவற்றை எப்படி தொகுப்பீர்கள்?

குறும்படம் என்ன தலைப்பில் என்ன பிரச்னையை அலசுகிறது என்பதை மையமாக வைத்து தொகுக்கிறோம். உதாரணமாக குழந்தையை மையமாகக் கொண்ட குறும்படம் என்றால் அது ஒரு தொகுப்பு. நீதி சொல்லும் குறும்படம் என்றால் அது ஒரு தொகுப்பு. ஒரு குறும்படம் 20 நிமிடம் ஓடினால், ஒரு குறும்படம் 10 நிமிடம் ஓடும். இவை இரண்டையும் இணைத்தால் அது ஒரு அரைமணி நேர நிகழ்ச்சியாக அமையும்.

குறும்படம் என்றாலே கமர்ஷியலாக இருக்காது என்ற கருத்து உள்ளது. அவற்றை இணைத்து விநியோகம் செய்வது சாத்தியமா?

பார்ப்பவரை நிமிர்ந்து உட்காரவைக்கும் எத்தனையோ குறும்படங்கள் உள்ளன. மக்கள் எப்போதும் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஆரம்பத்தில் இது திணிப்பது போலத் தோன்றும். ஆனால் எப்போதும் இது திகட்டுவது கிடையாது. நாங்கள் தேர்ந்தெடுக்கும் குறும்படங்கள் நிச்சயம் நல்ல வரவேற்பைப் பெறும். பலருக்கு திரைப்பட வாய்ப்பு கிடைப்பதற்கு குறும்படங்கள் கருவியாகச் செயல்படுகிறது.

குறும்படங்களின் "அணிவகுப்பை' எப்போது ஒளிபரப்பப் போகிறீர்கள்?

எங்கள் சங்கத்தை முறைப்படி பதிவு செய்திருக்கிறோம். அதேபோல முறைப்படியே சேனல்களில் முயற்சி செய்து வருகிறோம். நல்ல ஒப்பந்தம் கிடைத்தவுடன் ஒளிபரப்பு ஆரம்பிக்க முடிவு செய்திருக்கிறோம்.

யாரெல்லாம் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்?

ஊடகவியல் பயிலும் மாணவ, மாணவிகள், தொழிலதிபர்கள், குடும்பத் தலைவிகள் என சகலரும் இதில் அங்கம் வகிக்கின்றனர். பெருமைக்குரிய விஷயம் ஒன்று கூறுகிறேன்... இப்போது, எங்கள் சங்கத்திற்கு ஜீ.வி. பிலிம்ஸ் அதிபர்கள் மகாதேவன் கணேஷ், வெங்கட்ரமணி ஆகியோர் கெüரவ தலைவர்களாக இருந்து பெருந்தன்மையுடன் எங்களுக்கு வழிகாட்டி வருகிறார்கள்!

வேறு யாருடைய ஆதரவு உங்களுக்கு கிடைத்திருக்கிறது?

எங்கள் முயற்சிகளுக்கு நாங்கள் எதிர்பார்த்ததை விட, அதிக ஆதரவும் வரவேற்பும் உள்ளது. அதை நல்ல முறையில் பயன்படுத்தி சங்கத்தை வலுப்படுத்த வேண்டும். அதுவே எங்களது குறிக்கோள். ஒரு பெரும் அரசியல் கட்சித் தலைவர் குறும்படங்களை அதிக அளவில் ஆதரித்து போற்றி அருமையாக வளர்த்து வருகிறார். எங்களது கெüரவத் தலைவர்களுடன் கலந்து பேசி முடிவெடுத்தபின் அவரை முறைப்படி சந்திக்க இருக்கிறோம்.

வேறு என்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்?

சொல்வது எளிது. செய்வது கடினம். எனவே புதிய திட்டங்கள் சாத்தியமாகும் வகையில் செயல்படுத்துவோம். எங்கள் சங்கத்தின் குறும்படத் தயாரிப்பில் 50 சதவித வாய்ப்புகளை மகளிர்க்கு வழங்குவோம். ஆண்டுதோறும் சிறந்த குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டு படைப்பாளிகள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்படும். குறும்படங்களைத் திரையிடுவதற்கான அரங்கம் அமைத்தல், குறும்படங்களின் நேரம் குறித்த நிரந்தரமான வரையறையை ஏற்படுத்துதல், போட்டிகளில் பங்கேற்கும் குறும்படங்களுக்கு வசூலிக்கப்படும் நுழைவுக் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்துதல் போன்ற குறும்பட வளர்ச்சிக்கான திட்டங்கள் பல இன்னும் எங்களிடம் ஏராளமாக உள்ளன.

- குறும்பட வளர்ச்சியில் இந்தச் சங்கம் காட்டும் பெரும் அக்கறை நம்மை வியக்கவைக்கிறது. விசாலமான பார்வையோடு வளரட்டும் இந்தச் சங்கம்!

தினமணி கதிர், 27-08-2007

0 மறுமொழிகள்: