அதென்ன தகர டப்பா?

என்.ராமதுரை, தினமணி, தெரியுமா? 16-09-2006

தகர டப்பாவைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. பிளாஸ்டிக் யுகம் வந்த பிறகும் கூட பால் பவுடர் போன்று பல வகை உணவுப் பொருட்கள் தகர டப்பாவில் அடைத்து விற்கப்படுகின்றன. இவ்வித டப்பாக்களுக்கு டின் என்றும் பெயர் உண்டு. சிறிய டின் முதல் எண்ணெய் போன்றவை விற்கப்படுகிற பெரிய டின் வரை பல சைஸ்களில் டின்கள் உள்ளன.

மேலை நாடுகளில் பல வகையான உணவுப் பெருட்கள் டின்களில் அடைத்து விற்கப்படுகின்றன. நம் நாட்டிலும் பெரிய சூப்பர் மார்கெட்டுகளில் டின்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களைக் காணலாம்.

தகரம் என்றால் தமிழில் ஈயம் என்ற பொருள் உண்டு. அதே போல ஆங்கிலத்தில் பண்ய் என்றால் ஈயம் என்ற பொருள். ஈயம் என்பது ஓர் உலோகம். முன்பெல்லாம் வீடுகளில் பித்தளைப் பாத்திரங்களின் உட்புறத்தில் ஈயப் பூச்சு அளித்து அவற்றை சமையலுக்குப் பயன்படுத்தி வந்தனர். இப்போதெல்லாம் வீடுகளில் ஈயம் பூசப்பட்ட பாத்திரங்களைக் காண்பது அரிது. எனினும் திருமணக் கூடங்களில் பல நூறு பேருக்கு சமையல் செய்ய ஈயம் பூசப்பட்ட பித்தளை அண்டாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. தனி ஈயத்தைக் கொண்டும் பாத்திரங்கள் செய்வது உண்டு. இவை ஈயச் சொம்பு என்று அழைக்கப்படும்.

இது ஒரு புறம் இருக்க, தகர டப்பா என்பது ஈயத்தினால் செய்யப்பட்டது அல்ல. அது ஈயம் பூசப்பட்ட பித்தளைப் பாத்திரம் போன்றதே. அதாவது மெல்லிய உருக்குத் தகடுகள் மீது ஈயம் பூசி அத் தகடுகளைக் கொண்டு செய்யப்படுகிற டப்பா தான் தகர டப்பா எனப்படுகிறது. பயன்படுத்தப்பட்ட பழைய தகர டப்பாக்களை மூலையில் தூக்கிப் போட்டிருந்தால் சில காலத்துக்குப் பின் அவை துரு ஏறிக் காணப்படும். மெல்லிய ஈயப் பூச்சு அகன்றுவிட்ட பின்னர் உருக்குத் தகடு துருவேறிப் போவதே அதற்குக் காரணம்.

நவீன உருக்காலைகளில் முதலில் மென் ரக உருக்கைக் கொண்டு தகடுகளைத் தயாரித்து அதற்கு ஈயப் பூச்சு அளித்து "டின் ஷீட்டுகளை' உற்பத்தி செய்கின்றனர். இத் தகடுகளுக்கு ஈயப்பூச்சு அளிக்கப் பிரதானமாக இரு முறைகள் பின்பற்றப்படுகின்றன. தானியங்கி யந்திரங்களில் தகடுகளை தக்கபடி பக்குவப்படுத்திய பிறகு அவை கொதிக்கும் ஈயக் குழம்பின் ஊடே செல்லும்படி செய்யப்படுகின்றன. அப்போது அத் தகடுகள் மீது மெல்லிய ஈயப் பூச்சு படிகிறது. இதற்குப் பதிலாக மின்சாரத்தைப் பயன்படுத்தி இத் தகடுகள் மீது ஈயப் பூச்சு அளிக்கும் முறையும் பின்பற்றப்படுகிறது. இந்த இரண்டாவது முறையில் மிக மெல்லிய, அத்துடன் சீரான பூச்சை அளிக்க முடிகிறது. நீங்கள் காணும் புத்தம் புதிய தகர டப்பாவின் மீது பூசப்பட்ட ஈயப் பூச்சின் கனம் 0.002 மில்லி மீட்டர் அளவுக்கு இருக்கலாம்.

பிற நிறுவனங்கள் இந்த உலோகத் தகடுகளை வாங்கி தகர டப்பாக்களைத் தயாரிக்கின்றன. இவை பல்வேறு நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப வெவ்வேறு அளவுகளில் டப்பாக்களைத் தயாரிப்பதுடன் அந்த நிறுவனங்கள் கூறுகின்ற வகையில் அந்த டப்பாக்களின் மீது பொருட்களின் பெயர் மற்றும் இதர விவரங்களை அச்சிட்டு விடுகின்றன.

தகர டின்களில் தகடுகளை இணைக்க உலோகப் பற்று வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இவ்விதம் பற்று வைக்க காரீயமும் ஈயமும் கலந்த உலோகம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதில் காரீயத்தைப் பயன்படுத்தலாகாது என்றும் ஈயத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மேலை நாடுகளில் இப்போது கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. காரீயம் உடலுக்குத் தீங்கானது என்பதே இதற்குக் காரணம்.

மேலை நாடுகளில் இன்னமும் தகர டப்பாக்களுக்கு நல்ல மவுசு உள்ளது. பல்வேறு வகையான உணவுப் பொருட்களை அடைத்து விற்க இவை வசதியாக உள்ளன. இவ்விதமான உணவுகளுக்கு Tinned food என்ற பெயர் உண்டு.

ஈயம் பூசப்பட்ட உலோகத்தினால் ஆன டப்பாக்கள் என்ற பொருளில் தான் இந்த டப்பாக்களுக்கு பண்ய் என்ற பெயர் ஏற்பட்டது.

0 மறுமொழிகள்: