விடி வெள்ளி

என்.ராமதுரை, தினமணி, தெரியுமா? 22-09-2006

அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்னர் கிழக்கு வானில் அவ்வப்போது பிரகாசமான வான் பொருள் தெரியும். அதுவே விடிவெள்ளி எனப்படுகிறது. பலரும் அதை நட்சத்திரம் என்றே கருதுவர். உண்மையில் அது வெள்ளி கிரகம் ஆகும். வானில் சந்திரனுக்கு அடுத்தபடியாக மிகப் பிரகாசமானது வெள்ளியே.

விடிவெள்ளியை "அந்தி வெள்ளி' என்ற சொன்னாலும் அது பொருத்தமே. ஏனெனில் அவ்வப்போது அது சூரியன் அஸ்தமித்த பிறகு மேற்கு வானில் பிரகாசமாகத் தெரியும். ஆகவேதான் வெள்ளிக்கு ஆங்கிலத்தில் morning star என்றும் evening star என்றும் இரண்டு பெயர்கள் உண்டு.

வருகிற (2006) டிசம்பரில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு வெள்ளி கிரகம் மேற்கு வானில் பிரகாசமாகத் தெரியும்.

சூரிய மண்டலத்தில் வெள்ளி கிரகம் ஒரு வகையில் விசேஷமனது. மற்ற கிரகங்கள் (பூமி உட்பட) தங்கள் அச்சில் மேற்கிலிருந்து கிழக்காகச் சுழல்கின்றன. ஆனால் வெள்ளி கிரகம் ஒன்று தான் கிழக்கிலிருந்து மேற்காகச் சுழல்கிறது. ஆகவே வெள்ளி கிரகத்துக்கு நாம் போக நேர்ந்தால் அங்கு போனதும் “மேற்கே உதிக்கிற சூரியன் கிழக்கே உதித்தாலும் அது நடக்காது” என்று மாற்றிச் சொல்ல வேண்டும். ஆனால் அதற்கு வாய்ப்பே இராது.

எனெனில் நாம் வெள்ளி கிரகத்தில் இருக்க நேரிட்டால் சூரிய உதயத்தை ஒரு போதும் காண முடியாது. நம் ஊரில் ஐப்பசியில் பல நாட்கள் சூரியனே தலை காட்டாமல் வானம் மேக மூட்டமாக இருப்பது உண்டு. ஆனால் வெள்ளி கிரகத்தில் வானம் என்றென்றும் மேக மூட்டமாகவே இருக்கும். வெள்ளியைப் போர்த்து நிற்கும் மேகங்கள் காரணமாக பூமியிலிருந்து சக்தி மிக்க தொலை நோக்கி மூலம் பார்த்தாலும் வெள்ளியில் நிலப் பரப்பைக் காண இயலாது. கார்பன்-டை-ஆக்சைட் வாயுவினால் ஆன இந்த மேகங்கள் வேறு வகையிலும் அக் கிரகத்துக்கு சாபக்கேடாக உள்ளன.

வெள்ளியைப் போர்த்த முகில்கள் காரணமாக அந்த கிரகம் பற்றி மிக நீண்ட காலம் எதுவுமே தெரியாமல் இருந்தது. பூமிக்கு அருகாமையில் உள்ள கிரகம் என்றாலும் மற்ற பல கிரகங்களைப் பற்றி நிறைய அறியப்பட்ட பிறகே வெள்ளி பற்றி ஓரளவில் அறிய முடிந்தது. இன்றும் கூட வெள்ளி பற்றி நம்மால் இன்னும் முழுமையாக அறிய முடியவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் பரிமாணத்தைப் பொருத்த வரையில் பூமியைப் போல - பூமியின் சகோதரி போல விளங்குவது வெள்ளிக் கிரகமே.

வெள்ளியின் காற்று மண்டலம் அடர்த்தி மிக்கது. காற்றுக்கு எடை உண்டு என நாம் அறிவோம். அந்த வகையில் அங்கு பூமியில் உள்ளதை விட காற்றழுத்தம் மிக மிக அதிகம். இதன் விளைவாக பூமியிலிருந்து ஒரு விண்கலம் வெள்ளியில் போய் இறங்கினால் அது அங்குள்ள காற்றழுத்தம் காரணமாக ஒரேயடியாக நசுங்கிப் போய்விடும்.

வெள்ளியின் மேகங்களால் அங்கு வேறு வித விபரீதமும் உள்ளது. சூரிய வெப்பம் காரணமாக இயல்பாக வெள்ளி கிரகம் சூடேறுகிறது. ஆனால் அந்த வெப்பம் சற்றும் வெளியேறிவிடாதபடி மேகங்கள் தடுத்துவிடுகின்றன. இதன் காரணமாக வெள்ளியில் தரை வெப்பம் பயங்கரமான அளவில் உள்ளது. வெள்ளி கிரகத்தில் போய் இறங்குவது என்பது அக்கினிக் குண்டத்தில் இறங்குவதற்கு ஒப்பாக உள்ளது.

அமெரிக்காவும் ரஷியாவும் வெள்ளி கிரகத்துக்கு கடந்த காலத்தில் அனுப்பிய ஆளில்லாத விண்கலங்கள் வெள்ளியில் போய் இறங்கிய பின் மிகக் குறைந்த நேரமே செயல்பட்டன. மனிதன் ஒரு போதும் வெள்ளி கிரகத்தில் காலடி வைக்க முடியாது. அடிவானத்தில் வெள்ளி அழகாகத் தான் காட்சி அளிக்கிறது. ஆனால் உண்மையில் அது ஒரு
நரகமே.

0 மறுமொழிகள்: