வானமே எல்லை!

வானமே எல்லை! - பி. முரளிதரன்விமானத்தை நேரில் பார்ப்பதே ஓர் அரிய விஷயமாகக் கருதி வந்த மக்களுக்கு, இன்று விமானத்தில் பயணம் செய்வது என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. குறிப்பாக, நடுத்தர மக்களும் பயணம் செய்யும் அளவுக்கு விமானக் கட்டணம் வெகுவாக குறைந்து வருகிறது.

விமானத்தில் வேலைவாய்ப்பைப் பெறுவது சாமானிய மக்களுக்கு இதற்கு முன்பெல்லாம் குதிரைக் கொம்பாகத்தான் இருந்து வந்தது. குறிப்பாக, "ஏர்-ஹோஸ்டஸ்' பணி சமூகத்தில் மேல்தட்டு மக்களுடைய பிள்ளைகளுக்குத்தான் கிடைக்கும். ஆனால், தற்போது கிராமப்புறத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் பிள்ளைகளும் "ஏர்-ஹோஸ்டஸ்' வேலையில் சேர்வது சர்வ சாதாரணமாகியுள்ளது. இதற்குக் காரணம், சென்னையில் உள்ள "ஏர்-ஹோஸ்டஸ் அகாடமி' அளித்து வரும் பயிற்சி தான்.

இந்த அகாடமி, தமிழக அரசுடன் இணைந்து முதன்முறையாக, கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழை மாணவ, மாணவியருக்கு விமானத்தில் பணியாற்றுவதற்கான பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது.

இது குறித்து, ஏர்-ஹோஸ்டஸ் அகாடமியின் கிளை மேலாளர் கண்ணன் நம்மிடம் விவரித்தார்.

""நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப, இந்திய விமானத் துறையும் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த 25 நிறுவனங்களுடைய விமானங்கள் தற்போது இயங்கி வருகின்றன. அடுத்த பத்தாண்டுகளில், இந்தியாவில் உள்ள விமானங்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை எட்டும் என ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. தற்போது, தினமும், நாடு முழுவதும் 200 முதல் 300 விமானங்கள் தங்களது பயணச் சேவையை வழங்கி வருகின்றன.

இத்துறையைப் பொறுத்த வரை வேலைவாய்ப்பும் கொட்டிக் கிடக்கிறது. குறிப்பாக, "ஏர்-ஹோஸ்டஸ்' எனப்படும் விமானப் பணிப்பெண்களுக்கான வேலைவாய்ப்பும், ஆண்களுக்கான "கேபின் க்ரூ' வேலைவாய்ப்பும் அதிகளவில் உள்ளது. இப்பயிற்சிகள் அளிப்பதற்காக, விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒருசில பயிற்சி மையங்களே உள்ளன.

அத்தகைய பயிற்சி மையங்களில் எங்களுடைய நிறுவனமும் ஒன்று. நாங்கள் கடந்த 1997-ம் ஆண்டு முதல் பயிற்சி அளித்து வருகிறோம். பொதுவாக, விமானத்தில் பணியாற்றுவது தொடர்பான பயிற்சிகளில் சேர பயிற்சிக் கட்டணம் கூடுதலாக உள்ளது. மேலும், இப்பயிற்சிக்கு ஆங்கில மொழிப் புலமையும் அவசியம் என்பதால், இதுவரை மேல்தட்டு குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளே இப்பயிற்சியை பெற்று வந்தனர். குறிப்பாக, கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு இப்பயிற்சி ஒரு எட்டாக் கனியாக இருந்து வந்தது. அவர்களுக்கும் இந்தப் பயிற்சியை அளித்து, நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்பட்டது.

இதற்காக, 2005-ம் ஆண்டு முதன்முதலில் கர்நாடக மாநில அரசிடம் தொடர்பு கொண்டு, கிராமப்புறத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழே வசிக்கும் மாணவ, மாணவிகளுக்கு "ஏர்-ஹோஸ்டஸ்', "கேபின் க்ரூ' ஆகிய பயிற்சிகளை அளிக்க விருப்பம் தெரிவித்தோம்.

இதை ஏற்றுக்கொண்டு, அம்மாநில அரசு கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழை மாணவர்களைத் தேர்வு செய்து அளித்தது. அவர்களுக்கு நாங்கள் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை பெற்றுத் தந்தோம். இந்த முயற்சி வெற்றியடைந்ததன் விளைவாக, இந்த ஆண்டு தமிழக அரசிடம் தொடர்பு கொண்டு, இந்தத் திட்டத்தை செயல்படுத்த விரும்புவதாக தெரிவித்தோம். மாநில ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் தமிழரசி, "தாட்கோ' நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சிவசூரியன் ஆகியோர் இத்திட்டத்தை செயல்படுத்த போதிய உதவியையும், ஒத்துழைப்பையும் அளித்தனர்.

முதல் கட்டமாக, தமிழகத்தில் உள்ள சென்னை, மதுரை, பொள்ளாச்சி, தர்மபுரி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கிராமப்புற ஏழை மாணவர்கள் 100 பேரை தேர்வு செய்து "ஏர்-ஹோஸ்டஸ்' பயிற்சியை அளித்து வருகிறோம். இவர்களுக்கான பயிற்சிக் கட்டணத்தில் ஒரு குறிப்பிட்டத் தொகையை மாநில அரசு அளித்து விடுகிறது. மீதித் தொகையை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இதனால், இப்பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் முற்றிலும் இலவசமாக உள்ளது. அத்துடன், அவர்களுக்கு தங்குவதற்கும் இலவசமாக இடம் அளிப்பதோடு, மாதம் தோறும் ரூ.200 ஊக்கத் தொகையும் வழங்குகிறோம்.

இப்பயிற்சியில் சேர அடிப்படைத் தகுதிகள் என சிலவற்றை வகுத்துள்ளோம். இதன்படி, பிளஸ் டூ படித்திருப்பதுடன், 17 முதல் 24 வயதுக்குள் இருக்கவேண்டும். அத்துடன், ஆங்கில மொழியில் அடிப்படை அறிவாற்றல் பெற்றிருப்பதோடு, ஓரளவு பார்ப்பதற்கு "பர்சனாலிட்டி'யும் இருக்க வேண்டும். ஓராண்டு காலம் நடைபெறும் இப்பயிற்சியின் போது, கேபின் க்ரூ டிரெய்னிங், வெளிநாட்டு மொழி (ஜெர்மனி மற்றும் பிரெஞ்சு மொழி) பயிற்சி, ஹோட்டல் மேனேஜ்மென்ட், இன்டர்நேஷனல் டிக்கெட்டிங் அண்ட் டூரிஸம் (கலிலியோ, ஃபிடிலியோ முறை), பர்சனாலிட்டி டெவலப்மென்ட் அண்ட் பப்ளிக் ரிலேஷன், பிசினஸ் இங்கிலீஷ், முதலுதவி, இன்டஸ்டிரியல் டிரெய்னிங், பர்சனல் குரூமிங், ஹேர் அண்ட் ஸ்கின் கேர் பயிற்சி, விமானம் மற்றும் நட்சத்திர ஹோட்டலுக்குள் அழைத்துச் சென்று பயிற்சி அளித்தல் மற்றும் நீச்சல் பயிற்சி ஆகியவை அளிக்கப்படும்.

இப்பயிற்சியை முடிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்கும் நாங்கள் உதவி செய்கிறோம். வேலைக்குச் சேர்ந்த உடனே அவர்களுக்கு சம்பளம் ரூ.30 ஆயிரத்திலிருந்து ரூ.40 ஆயிரம் வரை கிடைக்கும். வெளிநாட்டு விமான நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்தால் மாதம் தலா ரூபாய் ஒரு லட்சம் வரை சம்பளம் கிடைக்கும். தற்போது, இப்பயிற்சியில் எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டு முதல், பிற வகுப்பைச் சேர்ந்த மாணவர்களும் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். மேலும், பிற மாநிலங்களிலும் இந்தப் பயிற்சியை தொடங்க அம்மாநில அரசுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்'' என்றார்.

இப்பயிற்சியில் கலந்து கொள்ள வந்திருந்த திண்டுக்கல் மாவட்டம் பெரியகோட்டையைச் சேர்ந்த மாணவி தேன்மொழி, ""எனக்கு சின்ன வயதில் இருந்தே விமானப் பணிப்பெண்ணாக பணியாற்ற வேண்டும் என ஆசை இருந்தது.

ஆனால், என்னுடைய குடும்ப சூழ்நிலை, இப்பயிற்சியில் சேர அனுமதிக்கவில்லை. பயிற்சிக் கட்டணம் அதிகமாக இருந்ததே இதற்குக் காரணம். அப்போது தான், ஏர்-ஹோஸ்டஸ் அகாடமியின் விளம்பரத்தைப் பார்த்தேன். உடனே, இங்கு வந்து இப்பயிற்சியில் சேர்ந்தேன். இப்பயிற்சி முடித்ததும் என்னுடைய "லைஃப் ஸ்டைலே' முற்றிலும் மாறிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது'' என்றார்.

சென்னையைச் சேர்ந்த மாணவர் பாலசுப்ரமணி, ""பள்ளிப் பருவத்திலேயே விமானத்தில் பணியாற்ற வேண்டும் என்ற கனவு இருந்தது. தற்போது, அந்தக் கனவு நிஜமாகி விட்டது. இப்பயிற்சியில் சேரும் போது, ஆங்கிலத்தில் பேச சிரமப்பட்டேன். தற்போது, நான் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுகிறேன். இதன் மூலம், பிறரிடம் எளிதில் தொடர்பு கொள்ள முடிகிறது. இப்பயிற்சியில் சேர்ந்துள்ளதன் மூலம், எனக்கு வாழ்க்கையில் ஒரு புதிய தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது'' என்றார்.

- அப்புறமென்ன... இவர்களுக்கு வானமே எல்லைதான்!

படங்கள்: "மீனம்' மனோ
தினமணி கதிர், 27-08-2007

0 மறுமொழிகள்: