காத்திருக்கும் அபாயம்...!

சுதந்திரம் அடைந்து என்ன சாதித்து விட்டோம் என்று கேட்பவர்களுக்கு ஒரு தகவல் - இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நம்மில் எழுதவும் படிக்கவும் தெரிந்தவர்கள் வெறும் 20 விழுக்காடுகூட இல்லை. இன்று, 68 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்கள் எழுதவும் படிக்கவும் தெரிந்தவர்கள் என்பது மிகப்பெரிய சாதனை அல்லவா? அதுவும், நமது மக்கள்தொகை மூன்று மடங்கு அதிகரித்திருக்கும் நிலையில் 68 சதவிகிதம் என்பது சாதாரண விஷயமல்லவே!

பள்ளிக்கூடங்கள் அதிகரித்திருக்கின்றன. உயர் கல்வி நிறுவனங்கள் பெருகி இருக்கின்றன. இப்போது இந்தியாவில் சுமார் 300-க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களும், 19,000-க்கும் மேற்பட்ட உயர் கல்வி நிறுவனங்களும் இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால், பெருகி வரும் தேவைக்கு இவை போதுமானதா என்றால் இல்லை. உலக அரங்கில் சுமார் 36 சதவிகித மாணவர்கள் உயர் கல்வி பெறுகின்ற நிலைமை இருக்கும்போது, இந்தியாவில் 18-க்கும் 23-க்கும் இடைப்பட்ட இளைஞர்களில் பத்து சதவிகிதத்தினர்கூட உயர் கல்வி பெறுவதில்லை என்கிறது சமீபத்திய புள்ளிவிவரம்.

தெருவோரக் குழந்தைகள் எழுத்தறிவே இல்லாமல் வளர்ந்து வருகின்றன என்பதைப் பற்றிய கவலை யாருக்குமே இருப்பதாகத் தெரியவில்லை. இவர்களை எப்படி கல்விச்சாலைகளுக்குக் கொண்டு வரப்போகிறோம் என்பது விடையில்லாப் புதிராகத் தொடர்கிறது.

இந்தியாவின் மக்கள்தொகையில் முப்பது கோடிப் பேர் இப்போதும் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழ்கிறார்கள் என்பது மட்டுமல்ல, இவர்களது குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்வதை முக்கியமாகக் கருதுவதும் இல்லை. நமது மக்கள்தொகை ஆண்டுக்கு ஒரு கோடி அதிகரித்து வரும் நிலைமை. இந்தச் சூழ்நிலையில், கல்விக்கான ஒதுக்கீடு அதிகரிப்பது, புதிய கல்விக் கொள்கை வகுப்பது, கல்விச்சாலைகளை நிறுவுவது போன்ற முயற்சிகளில் இப்போதே முனைப்பாக இறங்காவிட்டால், இத்தனை ஆண்டு முயற்சிகளும் வளர்ச்சியும் வீணாகிவிடும் அபாயம் காத்திருக்கிறது.

இந்தியாவிலுள்ள 370 மாவட்டங்களிலும் புதிதாக அரசுக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும், 30 மாநிலங்களிலும் புதிதாக மத்திய பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும் என்றும் பிரதமர் தனது சுதந்திரதின உரையில் குறிப்பிட்டிருக்கிறார். வரவேற்கப்பட வேண்டிய அறிவிப்பு.

அறிவியல் கல்வி ஆராய்ச்சிக்காக ஐந்து புதிய தேசியக் கல்வி நிறுவனங்கள், எட்டு ஐ.ஐ.டி.க்கள், ஏழு ஐ.ஐ.எம்.கள், தகவல் தொழில்நுட்பக் கல்வியை அளிக்க 20 புதிய உயர்கல்வி நிறுவனங்கள், நாடு முழுவதும் 1,600 தொழிற்பயிற்சி நிலையங்களும் பாலிடெக்னிக்குகளும்... இப்படி இன்னும் பல அறிவிப்புகள். அரசும் ஆட்சியாளர்களும் கல்வித் துறையைப் பற்றி நிறையவே கவலைப்படுகிறார்கள் என்பது மனதுக்குத் தெம்பான விஷயம். அரசு நாளைய இந்தியாவைப் பற்றிக் கவலைப்படுகிறது என்பதே ஆறுதலான விஷயம்தானே.

இன்னொரு முக்கியமான பிரச்னையையும் நாம் கவனிக்காமல் இருந்துவிடக் கூடாது. அதுதான், தரமான ஆசிரியர்களை உருவாக்கும் முயற்சி.

இன்றைய நிலையில், திறமைசாலிகள் எவரும் ஆசிரியர் தொழிலுக்கு வருவதில்லை. மருத்துவம், பொறியியல், வணிகவியல், உயர் விஞ்ஞானம் போன்ற துறைகளுக்கு திறமைசாலிகள் போய்விடுகின்றனர். எதிலுமே சேர முடியாத அளவுக்கு மதிப்பெண்கள் குறைந்த மாணவர்கள் மட்டுமே, சரித்திரம், பொருளாதாரம் போன்ற இளங்கலைப் பட்டப் படிப்புகளிலும், கணக்கு, விஞ்ஞானம் போன்ற அறிவியல் பட்டப் படிப்புகளிலும் சேர்கின்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதன் தொடர்விளைவாக, ஆசிரியர் பயிற்சியை நாடுவோர், திறமை குறைந்தவர்களாக இருக்கும் ஓர் அபாயம் இருக்கிறது.

இதை ஆட்சியாளர்கள் உணர்ந்து, இதற்கு உடனடியாகப் பரிகாரம் தேட வேண்டும். திறமைசாலிகளை ஆசிரியர்களாக்காமல் போனால், எத்தனைதான் கல்விச்சாலைகள் அமைத்தாலும், உலக அரங்கில் திறமைசாலி மாணவர்களை நம்மால் உலவ விட முடியாது. இதைப் பற்றிய சிந்தனை ஆட்சியாளர்களிடம் இல்லாமல் போனால், நாளைய இந்தியா "நவ' இந்தியாவாக இருக்காது!

(தினமணி - தலையங்கம், 16-08-2007)

0 மறுமொழிகள்: