டைட்டானியம் டை ஆக்ஸைடு-வரமா, சாபமா?

டாடா நிறுவனத்தின் டைட்டானியம் டை ஆக்ஸைடு ஆலை - செய்தி ஊடகங்களில் பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. மாநிலம் தழுவிய அளவில் இந்த விஷயம் குறித்த வாதப் பிரதிவாதங்கள் அனல் பறந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வோர் அரசியல் கட்சியும் தனது குழுவை தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு அனுப்பி அப்பகுதி மக்களின் கருத்துகளைக் கேட்டு வருகிறது. அப்பகுதி மக்கள் பதிலளித்தே மாய்ந்து போகிறார்கள். ஆனால் இவ்வாறு கட்சிகள் கருத்து கேட்பதால் அப்பகுதி மக்கள் ஒரு தெளிவுக்கு வந்து விட்டார்கள். பொட்டல் காடு என்று தங்களது நிலப்பரப்பை நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அங்கு டைட்டானியம் டை ஆக்ஸைடு என்ற விலைமதிக்க முடியாத கனிமம் உள்ளது என்ற தெளிவுதான் அது.

எனவே இனிமேல் ரத்தன் டாடாவே நேரில் வந்து கேட்டாலும்கூட நிலத்திற்குக் கூடுதல் விலை கேட்க அப்பகுதி மக்கள் தயங்க மாட்டார்கள். டைட்டானியம் டை ஆக்ஸைடின் மதிப்பு அப்படி!

நமது பகுதிகளில் உள்ள மணலில் ஒருவித கருப்பு மணல் இருக்கும். இந்த மணலில் உள்ள ஒருவித கனிமம்தான் டைட்டானியம் டை ஆக்ஸைடு. மணலைச் சூடுபடுத்தி அதில் உள்ள கனிமங்களைப் பிரித்தெடுக்கும்போது ஒருவித வெள்ளை நிறப்பொடி கிடைக்கிறது. அதுதான் டைட்டானியம் டை ஆக்ஸைடு. இது வெப்பத்தைத் தாங்கக்கூடியது. சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக்கதிர்களைக் கிரகித்துக்கொள்ளும் தன்மை படைத்தது.

இக்கனிமம் "அலாய்' உலோக வகையைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மிகவும் பயனுடையது. குறிப்பாக, விமான என்ஜின்கள், ராக்கெட் மற்றும் ராணுவப் பயன்பாட்டுக்கு இன்றியமையாதது. அதுமட்டுமல்லாமல் நாம் பல் துலக்கப் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் மற்றும் முகத்தில் தடவும் லோஷன்களிலும் இந்த டைட்டானியம் டை ஆக்ஸைடு உள்ளது. இது ஒரு விஷயம்.

மற்றொரு விஷயம், மணலைச் சூடுபடுத்தி அதில் இருந்து டைட்டானியம் டை ஆக்ஸைடைப் பிரித்தெடுக்கும்போதே தோரியம் போன்ற பிற கனிமங்களும் கிடைக்கும். இந்த தோரியம் அணு உலைகளுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தக்கூடியது. எனவே டைட்டானியம் டை ஆக்ஸைடு தொழிற்சாலை என்பது சாதாரண விஷயம் அல்ல; நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயமும் கூட. எனவேதான் இந்த விஷயத்தில் இவ்வளவு எதிர்ப்பு.

பலன்கள் என்கிற ரீதியில் பார்த்தால் - டாடா நிர்வாகம் சொல்லும் பலன்கள் இவைதான் - அதாவது, ஆண்டுக்கு 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் டன் வரை டைட்டானியம் டை ஆக்ஸைடை நாம் இறக்குமதி செய்து வருகிறோம். இங்கு ஆலை அமைத்தால் ஆண்டுக்கு ஒரு லட்சம் டன் டைட்டானியம் டை ஆக்ஸைடை நாமே உற்பத்தி செய்ய முடியும்; இந்த ஆலையால் சுமார் ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 3 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளிக்க முடியும். மேலும் அப்பகுதிகளில் பள்ளி, பூங்கா, தண்ணீர் தொட்டி அமைத்தல் போன்ற "சமூக' சேவைகளையும் செய்து அப்பகுதி மக்களுக்குத் தங்களால் உதவ முடியும் என்பது டாடா நிறுவனத்தின் வாக்குறுதிகள்.

ஆனால், சுற்றுச்சூழல் ஆய்வாளர்களின் பார்வை வேறுவிதமாக உள்ளது. சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பைக் கையகப்படுத்தி அதில் உள்ள லட்சக்கணக்கான தென்னை, பனை மரங்களை வெட்டி வித்து, அப்பகுதிகளில் உள்ள மணலை எடுத்து அதில் இருந்து கனிமங்களைப் பிரித்தெடுத்து பின்னர் மீண்டும் அந்தக் குழிகளை நிரப்பினால், அதன் பிறகு அந்த நிலத்தை விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியுமா? அவ்வாறு பயன்படுத்த வேண்டுமானால் ரசாயன உரங்களைப் போட்டு அந்த நிலத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும். அதற்கு ஆகும் செலவினங்களை யார் ஏற்பது? மேலும் அவ்வாறு ரசாயன உரங்களைப் பயன்படுத்தினால் நிலத்தின் தன்மை, விவசாயத்திற்கு உகந்ததாக இருக்குமா?

ஏனெனில் கனிமங்களைப் பிரித்தெடுத்தபின் அந்த மணல் கனிம வளங்கள் உறிஞ்சப்பட்ட வெறும் சக்கையாகத்தான் இருக்கும். மேலும் அதில் புவி ஈர்ப்பு விசையும் குறைந்துபோய் பலமிழந்து இருக்கும். அதில் தண்ணீரே நிற்காது. கனிம வளங்களோடு இருக்கும் மணல் பிரதேசத்தில் 4.5 என்ற அளவில் புவி ஈர்ப்பு விசை இருக்கும். கனிமத்தை எடுத்துவிட்டால் வெறும் 2 என்ற அளவில்தான் ஈர்ப்பு விசை இருக்கும். இதுமட்டுமல்லாது இதற்குப் பிறகு இந்த நிலங்களால் டாடா ஆலைக்கு எந்தவிதப் பிரயோஜனமும் கிடையாது. அப்படிப்பட்ட சூழலில் அந்த நிலத்தை மீண்டும் உரிமையாளர்களுக்கே திருப்பிக் கொடுக்கப்படுமா?

இதுதவிர, மணலில் இருந்து டைட்டானியம் டை ஆக்ஸைடைப் பிரித்தெடுக்கும்போது அதில் கதிர்வீச்சு ஏற்படும். அது ஆலைகளில் பணிபுரிவோருக்கும், ஆலையைச் சுற்றி வசிப்பவர்களுக்கும் உடல் ரீதியான பாதிப்பை உண்டாக்கும். கொல்லத்தில் உள்ள சவரா பகுதியில் கடந்த 80 ஆண்டுகளாக மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இதனால் அங்கு ஆஸ்துமா, சரும வியாதிகள், மனநோய், பெண்களுக்கு கருச்சிதைவு ஆகியவை அதிக அளவில் ஏற்படுவதாக ஆய்வு விவரங்கள் தெரிவிக்கின்றன. மீன்வளம் மற்றும் உயிரினங்களின் வாழ்க்கை முறை தலைகீழாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. டைட்டானியம் ஆலையால் பாதிப்பு பன்மடங்காக இருக்கும்.

வேலைவாய்ப்பு என்கிற ரீதியில் பார்த்தாலும்கூட, இந்த ஆலை பெரும்பாலும் இயந்திரங்கள் மூலம்தான் இயக்கப்படும். ஏனெனில் மனித உழைப்பு என்பது குறைவுதான். எனவே வேலைவாய்ப்பு என்பதும் வெறும் கண்துடைப்பு நாடகம்தான். கடற்கரைப் பகுதிகளில் கடல் அரிப்பு மற்றும் கடல் நீர் நிலத்தடி நீரோடு கலப்பது போன்ற பிரச்னைகளும் ஏற்படும்.

நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தைச் சுட்டிக்காட்டி, டைட்டானியம் ஆலைக்கு ஆதரவாகப் பேசுபவர்கள், டைட்டானியம் டை ஆக்ஸைடு தயாரிப்பில் கதிர்வீச்சு அபாயம் உள்ளதை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, ஐரோப்பிய கமிஷனின் அறிக்கையின்படி முகத்தில் பூசும் லோஷன்கள் வாயிலாக டைட்டானியம் டை ஆக்ஸைடு உடலுக்குள் ஊடுருவுகிறது என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது. இந்த "டைட்டானியம் டை ஆக்ஸைடில்' உள்ள நுண்பொருள் புற்றுநோயை உருவாக்கக்கூடியது என்றும் ஐரோப்பிய கமிஷன் அறிக்கை கூறுகிறது.

இதனையெல்லாம் நாங்கள் கருத்தில்கொண்டுதான் ஆலையை அமைக்கிறோம் என்று டாடா நிர்வாகம் சொல்லுமானால், டாடா நிர்வாகத்தின் செயல்பாடுகளைக் கண்காணிப்பது யார்? ஏனெனில் ஒரு மணல் குவாரியைக் கூட அரசால் ஒழுங்குபடுத்த முடியவில்லை. ஒதுக்கப்பட்ட பகுதிகளில் 3 அடி ஆழத்திற்கும் மேல் மணலை எடுக்கக்கூடாது என்ற விதிமுறை இருந்தாலும்கூட அது நடைமுறையில் உள்ளதா என்றால் இல்லை. பல இடங்களில் மணல் அள்ளுபவர்கள் ஒதுக்கப்பட்ட பகுதியையும் தாண்டி, அதுவும் பல மீட்டர் ஆழம் வரை மணலைச் சுரண்டி வருகிறார்கள். இதனால் பல ஆறுகளின் படுகைகள் வறண்டுள்ளன. இதனால் நிலத்தடி நீர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் ரூ. 2 ஆயிரத்து 500 கோடி செலவில் டாடா நிறுவனம் அமைக்கும் ஆலையில் எந்த அளவுக்கு மணல் அள்ளுகிறார்கள், எந்த அளவு இயற்கை வளம் சுரண்டப்படுகிறது என்பதைக் கண்காணிப்பது யார், அவ்வாறு முறைகேடுகள் நடந்தாலும்கூட அதனைத் தட்டிக்கேட்பது யார்? என்ற கேள்வி எழுகிறது.

நீண்டகாலத்திற்கு அப்பகுதி நிலங்களில் ஏற்படப்போகும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சுகாதார ரீதியான பாதிப்புகளைப் பற்றி கணக்கிடாமல் டைட்டானியம் ஆலை அமைக்கப்படுமானால், அது தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மக்களுக்கு வரம் அல்ல; சாபமாகத்தான் அமையப்போகிறது!


டி .எம். விஸ்வநாத்

(தினமணி – கட்டுரை, 17-08-2007)

0 மறுமொழிகள்: