வண்டுகளின் ராஜ்ஜியம்

என். ராமதுரை, தினமணி, தெரியுமா? 18-09-2006

ஜனநாயகத்தில் அனைவருக்கும் வாக்குரிமை என்ற அடிப்படையில் உலகில் யானை, குதிரை, ஆடு, மாடு, பூனை முதல் சிறிய வண்டுகள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் வாக்குரிமை இருக்குமானால் உலகில் வண்டுகள் தான் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும். ஏனெனில் பூமியில் வண்டுகள் இனம் தான் அதிகம் உள்ளது.

உலகில் 400 வகையான நாய்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் வண்டுகளை எடுத்துக் கொண்டால் 3 லட்சம் வகையான வண்டுகள் உள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது. இன்னொரு தகவலோ 5 லட்சம் வகையான வண்டுகள் உள்ளதாகத் தெரிவிக்கிறது. இந்த வித்தியாசத்துக்குக் காரணம் எவ்வளவு வகையான வண்டுகள் உள்ளன என்று இன்னும் முழுக் கணக்கு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூற முடியாது என்பதே.

பூமியில் எவ்வளவோ வகையான விலங்குகள், பறவைகள், பிராணிகள், வண்டுகள், பூச்சிகள், புழுக்கள் உள்ளன. கடந்த 300 ஆண்டுகளாகத் தான் நிபுணர்கள் கணக்கெடுத்து வருகிறார்கள். இன்னும் இக் கணக்கு முடிவடைந்த மாதிரி தெரியவில்லை. அதே நேரத்தில் கடந்த காலத்தில் மனிதனின் செயல்களால் எவ்வளவோ உயிரினங்கள் அழிந்து போய்விட்டன. முன்பு இந்தியாவில் பிரிட்டிஷ் எஜமானர்கள் காடுகளில் பாதுகாப்பாகப் பரண்கள் மீது அல்லது யானை மீது அமர்ந்து புலிகளை சுட்டுத் தள்ளி தங்கள் "வீரத்தை' காட்டினர். போர்ச்சுகீசியர்கள் மொரிஷஸ் தீவில் வாழ்ந்த டோடோ பறவை இனத்தை சுட்டுத் தள்ளி அந்த இனத்தையே அழித்தனர். ஆப்பிரிக்காவில் தென் அமெரிக்காவிலும் ஐரோப்பியர்களின் துப்பாக்கிக்களுக்கு எண்ணற்ற உயிரினங்கள் அழிந்தன.

இக் காலகட்டத்தில் தான் ஸ்வீடனைச் சேர்ந்த நிபுணர் கரோலஸ் லின்னாயஸ் (1707-1778) வகைப்பாட்டியல் (Taxonomy) என்ற புதிய துறையை உண்டாக்கினார். இது பல்வேறான உயிரினங்களை விஞ்ஞான அடிப்படையில் வகைப்படுத்தி அவற்றுக்குப் பெயரிடுவது தொடர்பானது. லின்னாயஸ் தாவரவியலில் மிகுந்த ஆர்வம் செலுத்தினார். தமது மாணவர்கள் மூலம் உலகின் பல பகுதிகளிலிருந்து தாவரங்களை சேகரித்தார். விலங்குகள் பற்றிய தகவல்களைச் சேகரித்தார். இவற்றை முறைப்படி அவர் வகைப்படுத்தி ஒரு நூல் வெளியிட்டார். இன்றும் அவர் உருவாக்கிய முறை தேவையான மாறுதல்களுடன் பின்பற்றப்படுகிறது.

லின்னாயஸுக்குப் பிறகு அவரைப் போலவே சார்லஸ் டார்வின் (1802-1882) உயிரின ஆய்வில் ஈடுபட்டார். புவியியல், தாவரவியல், விலங்கியல் என பல துறைகளிலும் ஆர்வம் காட்டி அத்துறைகளில் தேர்ச்சி பெற்றார். ஆராய்ச்சிக் கப்பல் ஒன்றில் 5 ஆண்டுகள் பயணம் செய்து பல தகவல்களையும் சான்றுகளையும் திரட்டினார். இறுதியில் அவர் உயிரினங்களின் தோற்றம், வளர்ச்சி பற்றிய தமது பரிணாமக் கொள்கை அடங்கிய நூலை வெளியிட்டார்.

டார்வினின் நூலுக்குக் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. அவரது கொள்கை வேண்டுமென்றே கொச்சைப்படுத்தப்பட்டு “குரங்கிலிருந்து மனிதன் தோன்றியதாக டார்வின் கூறுகிறார்” என்று பிரசாரம் செய்யப்பட்டது. குரங்கிலிருந்து மனிதன் தோன்றியதாக டார்வின் ஒரு போதும் கூறவில்லை. பல்வேறு வகையான குரங்குகளுக்கும் மனிதனுக்கும் பொது மூதாதையாக இருந்த உயிரினத்திலிருந்து படிப்படியாகப் பரிணாம வளர்ச்சி மூலம் மனிதன் தோன்றினான் என்று தான் டார்வின் கூறினார். ஆனாலும் இன்னமும் குரங்கிலிருந்து தான் மனிதன் தோன்றியதாகப் பலரும் பேசுகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க, பல்வேறு வகையான உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும் என உலகெங்கிலும் இப்போது பரந்த அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. காடுகளை அழித்தால், பணத்துக்காக அரிய விலங்குகளை வேட்டையாடினால், அவற்றைக் கடத்தினால், அது பல உயிரினங்களை அழிப்பதற்குச் சமம். ஆனால் வேதனையான வகையில் உலகின் கடல்களில் திமிங்கிலங்களை நவீன கருவிகளைக் கொண்டு வேட்டையாடிக் கொல்வது இன்றும் நின்றபாடில்லை.

மான் தோல், புலித் தோல், புலி நகம் வாங்க மாட்டோம். உடும்புக் கறி, மான் கறி, காடைக் கறி உண்ண மாட்டோம் என நாம் சபதம் ஏற்றால், உயிரினங்களைக் காப்பதற்கு ஓரளவு பங்களித்தவர்களாக இருப்போம்.

0 மறுமொழிகள்: