புதன் பெயர்ச்சி இல்லாதது ஏன்?

என்.ராமதுரை, தினமணி, தெரியுமா? 19-09-2006

சனிப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி என்றால் பத்திரிகைகளில் ஒவ்வொரு ராசிக்கும் விரிவாகப் பலன்கள் வெளியிடப்படும். சிறு புத்தகங்களும் வெளியிடப்படும். ஆனால் புதன் பெயர்ச்சியை யாரும் சீந்துவதில்லை. புதன் கிரகம் சூரியனுக்கு மிக அருகாமையில் உள்ளது என்பதே அதற்குக் காரணம்.

சிறுவர்கள் தெருவில் ஓடிப் பிடித்து விளையாடுவர். பிடிக்க வரும் சிறுவன் துரத்தும் போது துரத்தப்படுகிற சிறுவன் பிடிபடாமல் தப்பிக்க வேகமாக ஓடுவான். அதே நேரத்தில் மற்ற சிறுவர்கள் மிகத் தள்ளி இருக்க நேரிடும்போது அவர்கள் மெதுவாக ஓடுவர். அது போல புதன் கிரகம் சூரியனுக்கு மிக அருகாமையில் இருப்பதால் சூரியனின் ஈர்ப்பு சக்தியால் "பிடிபடாமல் இருக்க' சூரியனை அதி வேகத்தில் சுற்றி வர வேண்டியிருக்கிறது.

கிரகங்களின் இயக்கம் பற்றி ஆராய்ந்த விஞ்ஞானி கெப்ளர் கூறிய விதிகளின்படி ஒரு கிரகம் எந்த அளவுக்கு சூரியனிலிருந்து தொலைவில் உள்ளதோ அந்த அளவுக்கு அது தனது சுற்றுப்பாதையில் மெதுவாகச் செல்லும். சூரியனிலிருந்து வியாழன் 77 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அது தனது சுற்றுப்பாதையில் செல்லும் வேகம் மணிக்கு 46,000 கிலோ மீட்டர். 142 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சனி கிரகத்தின் வேகம் 34,000 கிலோ மீட்டர். இத்துடன் ஒப்பிட்டால் சூரியனிலிருந்து சுமார் 5 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதன் கிரகம் சூரியனை தனது சுற்றுப்பாதையில் மணிக்கு ஒரு லட்சத்து 72 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது. இது தலைதெறிக்கிற வேகமே. புதன் கிரகத்துடன் ஒப்பிட்டால் வியாழனும், சனியும் மெதுவாகச் செல்வதில் வியப்பில்லை.

பூமிக்கு மேலே உள்ள வான் பிரதேசம் 12 ராசி மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வியாழன் கிரகம் சூரியனை ஒரு தடவை சுற்றி முடிக்க கற்பனையான இந்த 12 ராசிகளையும் கடந்து சென்றாக வேண்டும். சூரியனை வியாழன் ஒரு தடவை சுற்றி முடிக்க சுமார் 12 ஆண்டுகள் ஆகின்றன. அதாவது வியாழன் ஒவ்வொரு ராசியிலும் ஓராண்டு இருக்கிறது. சனி கிரகம் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் இருக்கிறது. புதன் கிரகம் ஒவ்வொரு ராசியிலும் இருப்பது ஏழு நாட்களே. ஆகவே புதன் பெயர்ச்சிப் பலன்கள் பற்றித் தெரிவிப்பதானால் ஏழு நாட்களுக்கு ஒரு முறை புத்தகம் போட்டாக வேண்டும். புதன் பெயர்ச்சியை யாரும் சீந்தாததற்கு இதுவே காரணம்.

புதன் கிரகத்தில் ஒரு விசித்திரம் உள்ளது. நீங்கள் புதன் கிரகத்தில் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட சமயத்தில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் கிழக்கு வானை கவனித்தால் சூரியன் மிக மெதுவாக அடிவானில் எழும். பிறகு மெதுவாக கீழே அடிவானத்தை நோக்கி கிழக்கு திசையில் அஸ்தமிக்கும். பிறகு மெதுவாக மறுபடி உதிக்கும். அதாவது புதன் வானில் ஒரே நாளில் இரு சூரிய உதயங்களைக் காண இயலும். புதன் தனது அச்சில் மெதுவாகச் சுழல, அது தனது சுற்றுப் பாதையில் மிக வேகமாகச் செல்வதன் ஒரு விளைவாக இவ்விதம் நிகழ்கிறது. புதன் கிரகத்தில் ஒரு நாள் என்பது பூமிக் கணக்குப்படி 58 நாட்கள். ஆகவே புதன் கிரகத்தில் ஓயாத இரவும் ஓயாத பகலும் மாறி மாறி வருகின்றன.

இக் காரணத்தாலும் அத்துடன் சூரியனுக்கு மிக அருகில் இருப்பதாலும் புதன் கிரகத்தில் வெப்பம் - பகலில் 350 டிகிரி செல்சியஸ் - மிகக் கடுமையாக உள்ளது.

புதன் கிரகத்துக்கு மனிதன் சென்றது கிடையாது. ஆனாலும் ஆளற்ற விண்கலங்கள் அக் கிரகத்தை விரிவாக ஆராய்ந்துள்ளன. புதன் கிரகத்தில் எல்லா இடங்களுக்கும் நிபுணர்கள் பெயரிட்டுள்ளனர். அங்குள்ள வட்ட வடிவப் பள்ளங்கள் சிலவற்றுக்கு தியாகராஜா, காளிதாசா, அசுவகோஷா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 90 கிலோ மீட்டர் குறுக்களவு கொண்ட ஒரு பள்ளத்தின் பெயர் ஆண்டாள்.

0 மறுமொழிகள்: