தங்கத்தை உண்டாக்கலாம்

என்.ராமதுரை, தினமணி, தெரியுமா? 15-09-2006

தங்கம் என்பது இயற்கையில் கிடைப்பது. ஆனால் நம்மால் மட்டும் ஏதோ ஓர் உலோகத்தைத் தங்கமாக மாற்ற முடியும் என்றால் மகள் திருமணத்துக்கு எளிதில் 200 அல்லது 300 பவுன் நகை போட முடியும். இப்படி ஏதாவது ஒரு வழியில் தங்கத்தை உண்டாக்க பல நூறு ஆண்டுகளாக மனிதன் முயன்று வந்திருக்கிறான். அந்த எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. அணுயுகம் பிறந்த பின்னரே இவ்விதம் தங்கத்தை உண்டாக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டது.

ஆரம்பகாலத்தில் தங்கத்தை உண்டாக்க முயன்றவர்கள் ரசவாதிகள் (Alchemists) என்று வருணிக்கப்பட்டனர். இந்தியாவில் மட்டுமன்றி, சீனாவிலும் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் ரசவாதிகள் இருந்திருக்கின்றனர்.

ஐரோப்பிய நாடுகளைப் பொருத்தவரையில் ஆஸ்தான ரசவாதிகள் இருந்தனர். தங்களால் மட்ட உலோகத்தை தங்கமாக மாற்றிக் காட்ட முடியும் என்று கூறி மன்னர்களிடமிருந்து ஏராளமான பணத்தைக் கறந்து, பின்னர் மாயமாய் மறைந்தவர்கள் உண்டு. சில நாடுகளில் இவ்வித முயற்சியில் தோற்றுப்போன ரசவாதிகளை மன்னர்கள் தூக்கிலிட்டனர். உலகெங்கிலும் ரசவாதிகளின் முயற்சி தோல்வியில் தான் முடிந்தது. ஆனால் ரசவாதிகள் இம் முயற்சிகளின் போது புதுப்புது கருவிகளை உண்டாக்கினர். பல புதிய செய்முறைகளை அறிமுகப்படுத்தினர். இவற்றின் பலனாக வேதியியல் (Chemistry) என்று புதிய நவீனத் துறை தோன்றுவதற்கு ரசவாதிகள் தங்களையும் அறியாமல் வித்திட்டவர்களாகினர்.

அவர்களின் முயற்சி தோற்றதற்குக் காரணம் உண்டு. தங்க அணு ஒன்றை எடுத்து அதைப் புட்டுப் பார்க்க முடிவதாக வைத்துக் கொண்டால் தங்க அணு ஒவ்வொன்றிலும் தனியே அணுக்கருக்கள் இருக்கும். அந்த அணுக்கரு ஒவ்வொன்றிலும் 79 புரோட்டான்களும் 118 நியூட்ரான்களும் இருக்கும். அணுக் கருவைச் சுற்றி 79 எலக்ட்ரான்கள் இருக்கும். தங்கம் தங்கமாக இருப்பதற்கு அணுக்கருவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கையே காரணம். ஆகவே அணுக்கருவில் இந்த எண்ணிக்கையில் புரோட்டான்கள் இருக்கும்படி செய்து அதன் மூலம் தங்கத்தை உண்டாக்கலாம்.
தங்கத்தை உண்டாக்க பிளாட்டினத்தைப் பயன்படுத்தலாம். அதுவும் உலோகமே. அதன் அணுக்கள் ஒவ்வொன்றிலும் 78 புரோட்டான்கள் உள்ளன. அணுவைத் தாக்கும் கருவியைப் பயன்படுத்தி பிளாட்டினம் அணுக்கருக்களில் கூடுதலாக ஒரு புரோட்டானைச் சேர்த்தால் அவை தங்க அணுக்களாக மாறிவிடும். 1936-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பிரபல விஞ்ஞானி லாரன்ஸ், பிளாட்டினம் அணுக்களை தங்க அணுக்களாக மாற்றிக் காட்டினார். அவரை நவீன ரசவாதி எனலாம்.

பாதரச அணுக்களில் 80 புரோட்டான்கள் உள்ளன. அணுக்களைத் தாக்குவதற்கான கருவியில் பாதரச அணுக்களை வைத்து அவற்றை நோக்கி நியூட்ரான்களைச் செலுத்தினால் பாதரச அணுக்கள் தங்க அணுக்களாக மாறிவிடும். அதாவது பாதரசம் தங்கமாக மாறிவிடும். 1941 ஆம் ஆண்டில் ஆர். ஷேர், பெயின்பிரிட்ஜ், எச்.எச். ஆண்டர்சன் ஆகியோர் இவ்விதம் பாதரசத்தை தங்கமாக மாற்றிக் காட்டினர்.

ஆனால் இந்த விஞ்ஞானிகள் இப்படிச் செய்தது தங்கத்தை உண்டாக்கிப் பணம் பண்ணுவதற்காக அல்ல. ரசவாதிகளால் அன்று செய்ய முடியாததை நவீன முறைகளில் சாத்தித்துக் காட்ட முடியும் என்ற நோக்கில் தான் அவர்கள் இச் சாதனை புரிந்தனர். அவர்கள் இந்த வழியில் ஏதோ சில பாதரச அணுக்களை, அல்லது சில பிளாட்டின அணுக்களை இவ்விதம் தங்கமாக மாற்றிக் காட்டினர்.

ஆனால் அணுவைத் தாக்குகிற கருவியைப் பயன்படுத்தி பெரிய அளவில் நிறையத் தங்கம் உண்டாக்க முடியாது. அப்படி செய்ய முடியும் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் ஆராய்ச்சிக் கூடத்தில் இவ்விதமாக ஒரு கிராம் தங்கத்தை உண்டாக்க பல ஆயிரம் ரூபாய் செலவாகலாம். இப்படி பல ஆயிரம் ரூபாய் செலவிட்டு ஒரு கிராம் தங்கத்தை உண்டாக்குவதற்குப் பதில் நகைக் கடைக்குச் சென்று ரூ.900 கொடுத்து ஒரு கிராம் தங்கத்தை வாங்குவதே புத்திசாலித்தனமாக இருக்கும்.

வேறுவிதமாகச் சொல்வதானால் குறைந்த செலவில் தங்கத்தை உண்டாக்க இன்றளவும் வழி ஏதும் இல்லை.

0 மறுமொழிகள்: