மந்திரக் கோட்டும் மாயாவியும்

என்.ராமதுரை, தினமணி, தெரியுமா? 25-09-2006

பிரபல நடிகர் என்.டி.ராமா ராவ் நடித்த "பாதாள பைரவி' என்னும் படத்தில் அவர் மந்திரக் கோட்டு ஒன்றை அணிவார். உடனே அவர் யார் கண்ணிலும் படாதவராகிவிடுவார். வில்லனை வெல்ல இந்த மந்திரக் கோட்டு அவருக்கு உதவுகிறது. ஹாரி பாட்டர் கதையிலும் இப்படி மந்திரக் கோட்டு உண்டு. "இன்விசிபிள் மேன்' என்னும் ஆங்கிலப் படத்தில் கதாநாயகன் யார் கண்ணிலும் படாத மாயமனிதனாக நடமாடுவார். இதெல்லாம் வெறும் கதைதான்.

ஆனால் நிஜ உலகில் இப்படி - ஒரு மனிதனை இல்லாவிட்டாலும் - ஒரு சிறிய பொருளை யார் கண்ணிலும் படாதபடி ஆக்க வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இது பற்றி இப்போது மேலை நாடுகளில் தீவிர ஆராய்ச்சி நடந்து வருகிறது.

தெரு விளக்கு வெளிச்சம் கூட நுழையாதபடி எல்லாக் கதவுகளும் ஜன்னல்களும் மூடப்பட்ட ஒரு வீட்டுக்குள் நீங்கள் நள்ளிரவில் நுழைந்தால் எதிலும் மோதாமல் இருக்க இரு கைகளையும் துழாவிக் கொண்டு மெதுவாக நடக்க வேண்டியிருக்கும். இருட்டில் எதுவும் தெரியாது. டார்ச் லைட் அடித்தால் எதிரே உள்ள பொருட்கள் நன்கு தெரியும். எந்த ஒரு பொருளையும் நாம் காண்பதற்கு ஒளி தேவை. ஒரு பொருள் மீது ஒளிக் கற்றைகள் படும் போது தான் அப் பொருள் நம் கண்களுக்குப் புலனாகிறது.

பகலில் நல்ல வெளிச்சத்தில் பொருட்கள் தெளிவாகத் தெரிகின்றன. இவ்விதம் வெளிச்சத்தில் தெரிகின்ற பொருள் ஒன்றை கண்ணுக்கு தெரியாதபடி செய்வது எப்படி என்பது குறித்துத்தான் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே அமெரிக்காவிடம் புலப்படா விமானங்கள் (நற்ங்ஹப்ற்ட் ஆர்ம்க்ஷங்ழ்) உள்ளன. அதாவது இவை ராடார் கருவியின் திரையில் சிக்காதவை. விமானம் தொலைவில் இருக்கும் போதே அதைக் கண்டுபிடிக்க எல்லா நாடுகளிலும் ராடார் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. ராடார் கருவியிலிருந்து கிளம்பும் மைக்ரோ அலைகள் விமானத்தின் மீது பட்டு எதிரொலித்துத் திரும்பி வரும். அப்படி அவை திரும்ப வரும்போது ராடார் கருவியின் திரையில் அது நிழல் போன்று தெரியும். இதை வைத்து எதிரி விமானத்தை தாக்க ஏவுகணைகளைச் செலுத்த முடியும். அமெரிக்காவிடம் உள்ள புலப்படா விமானத்தின் வெளிப்புற பகுதிகள் மைக்ரோ அலைகளை "விழுங்கி' விடும் அல்லது அவற்றை வேறு திசையில் திருப்பி விடும். ஆகவே அவை எதிரொலித்து ராடார் கருவிக்குத் திரும்ப வந்து சேர முடியாமல் போய் விடும். ஆகவே அமெரிக்கா இந்த வகை விமானங்களைப் பயன்படுத்தி எதிரி நாடுகள் மீது எளிதில் தாக்குதல் நடத்த முடிகிறது.

இப்போது விஞ்ஞானிகள் ஒளிக்கற்றை விஷயத்தில் வேறு கோணத்திலிருந்து ஆராய்கின்றனர். இவர்கள் நடத்தும் ஆராய்ச்சியில் ஒரு பொருள் மீது மின்காந்த அலைகள் - ஒளிக் கற்றைகளும் ஒரு வகையான மின்காந்த அலைகளே - விழும்போது அவை செயலிழக்கின்றன. அல்லது அப் பொருள் மீது படாமல் பக்கவாட்டில் சுற்றிச் செல்கின்றன. ஒளிக்கற்றைகளை இவ்வாறு செயல்படுமாறு ஆக்குவதற்கு குறிப்பிட்ட பொருட்களால் ஆன கேடயத்தை உருவாக்குவது விஞ்ஞானிகளின் முயற்சியாகும். ஒரு பொருளுக்கு விசேஷப் பூச்சு அளிப்பதன் மூலமும் ஒளி அலைகள் அதன் மீது விழாதபடி செய்வது குறித்தும் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

அந்த அளவில் அவ்வகைப் பொருட்களைக் கொண்டு கதைகளில் வருகின்ற மந்திரக் கோட்டு போன்ற ஒன்றை உருவாக்குவது ஏட்டளவில் சாத்தியமே என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனாலும் இப்போதுள்ள அளவில் மிக நுண்ணிய பொருட்களை மைக்ரோ அலைகளைப் பொருத்தமட்டில் புலப்படாமல் ஆக்க இயலும் என்றே கூறப்படுகிறது. ஒளி அலைகள் விஷயத்திலும் இதை சாத்தியமாக்க இன்னும் நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது. இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றால் மந்திரக் கோட்டு தயாரிப்பது அவர்களது நோக்கமாக இராது. ராணுவத்துறையில் தான் முதலில் அது பயன்படுத்தப்படும்.

0 மறுமொழிகள்: