வானமே எல்லை

என்.ராமதுரை, தினமணி, தெரியுமா? 17-09-2006

ஓயாது மழை பெய்தால் ""வானமே பொத்துக்கொண்டு விட்டது போல மழை பொழிவதாக'' கூறுவது உண்டு. ""வானமே எல்லை'' என்றும் பேச்சு வழக்கில் சொல்வது உண்டு. மிக உயரமான கோபுரம் என்றால் வானை முட்டும் கோபுரம் என்பார்கள். வானம் என்பது ஏதோ மிக உயரத்தில் அமைந்துள்ள கூரை போன்றது என்ற எண்ணத்தில் இவ்வாறு கூறப்படுகிறது.

வானம் என்பது "தட்டையான' பூமிக்கு மேலே அமைந்த வளைவான கூடாரத்தின் உட்புறக் கூரை போன்று நமக்குக் காட்சி அளிக்கிறது. வானத்துக்கும் நிறம் உள்ளது போலவும் ஒரு தோற்றம் உள்ளது. சில சமயங்களில் அது தெளிவான நீல நிறத்தில் உள்ளது. வேறு சமயங்களில் அது சாம்பல் நிறத்தில் உள்ளது. ஆனால் நிலவற்ற நாளில் இரவில் வானை நோக்கினால் அது கரிய நிறத்தில் இருக்கிறது. இதிலிருந்து வானத்துக்கென தனி நிறம் இல்லை என நம்மால் ஊகிக்க முடிகிறது.

வானம் என்பது தான் என்ன? ஒரு பெரிய மைதானத்தில் ஒரு கொசு பறக்கிறது. அக் கொசு அந்தரத்தில் நிலையாக ஓரிடத்தில் நிற்பதாக வைத்துக் கொள்வோம். அக் கொசுவைப் பொருத்தமட்டில் எல்லாத் திசைகளிலும் உள்ள இடம் காலியானதே. பூமிக்கும் அது பொருந்தும்.

பூமியிலிருந்து நீங்கள் கிளம்பி எந்த திசையில் சென்றாலும் நீங்கள் போய்க் கொண்டே இருக்கலாம். பல ஆயிரம், பல லட்சம், பல கோடி ஆண்டுகள் பயணம் செய்தாலும் எல்லை என எதுவுமே கிடையாது. இதையே வேறு விதமாகச் சொல்வதானால் வானத்துக்கு எல்லையே கிடையாது. பிரும்மாண்டமான காலியிடத்தில் பூமியானது அந்தரத்தில் நின்றபடி தனது அச்சில் சுழல்கிறது. இந்த பிரும்மாண்டமான காலியிடத்தையே நாம் விண்வெளி(Space) என்று கூறுகிறோம்.

ஒரு பெரிய வீட்டைச் சுற்றிலும் விஸ்தாரமான காலியிடம் இருக்கலாம். ஆனாலும் அந்த வீட்டின் முன்புறத்தை வாசல் என்றும் பின்புறத்தைப் புழற்கடை என்றெல்லாம் குறிப்பிடுகிறோம். அந்த மாதிரியில் பூமியைச் சுற்றியுள்ள விண்வெளியின் ஒரு பகுதியை நாம் வானம் என்று கூறுகிறோம்.

பூமியைச் சுற்றிலும் காற்று மண்டலம் உள்ளது. இதையும் நாம் வானம் என்றே குறிப்பிடுகிறோம். மேக மூட்டமாக இருந்து மழை பெய்யும் போலத் தோன்றினால் “வானம் மப்பு மந்தாரமாக” உள்ளது என்று கூறுகிறோம். அதே நேரத்தில் பக்கத்து ஊரில் நல்ல வெயில் அடிக்கலாம். ஆகவே அவர்கள் வானம் தெளிவாக இருக்கிறது என்று கூறுவார்கள். அதாவது அந்தந்த வட்டாரத்துக்கு மேலே உள்ள குறிப்பிட்ட வான் பகுதியும் வானம் என்றே குறிப்பிடப்படுகிறது. தவிர, தலைக்கு மேலே காகம் பறக்கிற இடமும் நமக்கு வானம் தான். தலைக்கு மேலே பல கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் சூரியன் இருக்கிற இடமும் நமக்கு வானம் தான்.

வானத்துக்கு நிறம் கிடையாது என்று குறிப்பிட்டோம். நீங்கள் சந்திரனில் இருப்பதாக வைத்துக் கொண்டால் வானம் எல்லா நேரங்களிலும் ஒரே கருப்பாக இருக்கும். பகலில் இந்தக் கரிய வானில் சூரியன் தெரியும். நட்சத்திரங்களும் தெரியும். பூமியில் காற்று மண்டலம் இருப்பதால், பகல் நேரத்தில் சூரியனின் ஒளிக் கதிர்கள் - குறிப்பாக சூரிய ஒளியில் அடங்கிய நீல நிற ஒளி அலைகள் நாலாபுறங்களிலும் சிதறடிக்கப்பட்டு வானம் என்பது நீல நிறத்தில் காட்சி அளிக்கிறது.

பகலில் தெரிகிற வானமும் இரவில் தெரிகிற வானமும் முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. இரவு வானமோ மிக மிக உயரத்தில் இருப்பது போன்று தோன்றுகிறது. மிக உயரமான கூடாரத்தின் உட்புறக் கூரையில் நுண்ணிய விளக்குகள் பதிக்கப்பட்டது போலவும் தோன்றுகிறது. பகல் வானம் நமக்கு அருகாமையில் உள்ளது போலக் காட்சி அளிக்கிறது. எல்லாம் வெறும் தோற்றமே. சுருங்கச் சொன்னால் வானம் என்று தனியாக எதுவும் இல்லை.

0 மறுமொழிகள்: