நடுப்பகல் எப்போது?

என்.ராமதுரை, தினமணி, தெரியுமா? 24-09-2006

இந்தியாவின் கிழக்குக் கோடியில் அருணாசலப் பிரதேசத்தில் டோங் எனப்படும் இடத்தில் ஒருவர் தமது கைகடிகாரத்தைப் பார்க்கிறார். மணி 12 காட்டுகிறது. ஆனால் சூரியனைப் பார்த்தால் அது உச்சியைத் தாண்டி ஒரு மணி நேரமாகிவிட்டதாகத் தெரிகிறது. இந்தியாவின் மேற்குக் கோடியில் மாண்ட்வி நகரில் அதே போல ஒருவர் கைகடிகாரத்தை நோக்குகிறார். மணி 12 காட்டுகிறது. ஆனால் வானைப் பார்த்தால் சூரியன் உச்சிக்கு வர மேலும் ஒரு மணி நேரம் ஆகும் போலத் தெரிகிறது. ஆனால் அலாகாபாத் அருகே மிர்சாபூரில் இருப்பவர் கடிகாரத்தைப் பார்க்கும் போது மணி 12. சூரியன் தலைக்கு மேலே உச்சியில் இருக்கிறது. இதற்குக் காரணம் உண்டு.

பூமி உருண்டை என்பதால் சூரிய உதயம் ஊருக்கு ஊர் வித்தியாசப்படும். ஆகவே சூரியன் தலைக்கு மேலே உச்சிக்கு வருகிற நேரமும் வித்தியாசப்படும். இந்த நிலையில் தங்கள் ஊரில் சூரியன் உச்சிக்கு வருவதை வைத்து ஒவ்வொருவரும் கடிகாரத்தில் மணி 12 என்று வைத்துக் கொள்ள முயன்றால் அது சரிப்பட்டு வராது. குழப்பம் தான் ஏற்படும்.

மிர்சாபூர் நாட்டின் மத்தியில் உள்ளது. 82.5 டிகிரி கிழக்கு தீர்க்கரேகை அந்த ஊர் மீது அமைந்துள்ளது. சூரியன் அந்த ஊரில் நேர் உச்சியில் இருக்கும் போது இந்தியா முழுவதற்கும் நடுப்பகல் 12 மணி என்று நாம் நிர்ணயித்துக் கொண்டுள்ளோம். அதுவே இந்தியாவுக்கான பொது நேரம் ஆகும். இது இந்தியாவின் நிர்ணய நேரம் (Indian Standard Time) அதாவது சுருக்கமாக IST என்று குறிப்பிடப்படுகிறது. நாட்டில் ஒவ்வொருவரின் வீட்டில் இருக்கிற கடிகாரங்களும் அவரவர் அணிந்துள்ள கைகடிகாரங்களும் இந்த ஏற்பாட்டின்படியான நேரத்தைத்தான் காட்டுகின்றன.

இந்த ஏற்பாட்டில் ஒரு வசதி உள்ளது. உலக அளவில் பின்பற்றப்படுகிற மபஇ நேரத்துக்கும் (பழைய GMT) இந்தியாவின் IST-க்கும் இடையில் சரியாக 5 மணி 30 நிமிஷ நேர வித்தியாசம் உள்ளது.

நாம் பின்பற்றுகிற IST ஏற்பாட்டில் பிரச்சினை இல்லாமல் இல்லை. அருணாசலப் பிரதேசத்தில் சூரியனை வைத்துக் கணக்கிடுகிற நேரத்துக்கும் நாம் பின்பற்றுகிற நேரத்துக்கும் இடையே ஒரு மணி நேர வித்தியாசம் உள்ளது. மேற்குக் கோடியில் குஜராத்தில் உள்ளவர்களுக்கும் இதே பிரச்சினை உள்ளது. சென்னையைப் பொருத்தவரை அது 80 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையில் அமைந்துள்ளதால் பெரிய வித்தியாசம் கிடையாது. ஆகவே சென்னைக்கும் சரி, தமிழக நகரங்களுக்கும் சரி பெரிய பிரச்சினை இல்லை. முன்னர் பிரிட்டிஷ் கம்பெனி ஆட்சி நடந்த போது சென்னை நகரின் நேரம் தான் பிரிட்டிஷ் இந்தியாவுக்கான பொது நேரமாக இருந்தது.

இந்தியாவின் மேற்குக் கோடியிலிருந்து கிழக்குக் கோடி வரையிலான தூரம் சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர். ஆகவே வடகிழக்கு மாநிலங்களில் உள்ளவர்கள் தங்களுக்கென தனி நேர மண்டலம் ஏற்படுத்தக் கோரினர். மேற்குக் கோடியில் இருப்பவர்களுக்கும் பிரச்சினை உள்ளதால் இந்தியாவில் மூன்று நேர மண்டலங்களைப் பின்பற்றலாம் என்று 1980 களில் யோசனை கூறப்பட்டது. இந்த யோசனையை 2001-ல் ஒரு கமிட்டி ஆராய்ந்து கடைசியில் அதை நிராகரித்துவிட்டது.

அமெரிக்காவைப் பொருத்தவரையில் அந்த நாடு முழுவதுக்கும் பொருந்துகிற தனி ஒரு நேர ஏற்பாடு கிடையாது. காரணம் நியூயார்க் நகருக்கும் மேற்குக் கோடியில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகருக்கும் இடையே உள்ள நேர வித்தியாசம் மூன்று மணி நேரம் ஆகும். ஆகவே அமெரிக்காவில் 4 நேர மண்டலங்கள் உள்ளன. இவற்றைத் தவிர அலாஸ்காவும், ஹவாயும் தனித்தனி நேர மண்டலங்களைப் பெற்றுள்ளன. ஆகவே ஒருவர் ஒரு நேர மண்டலத்திலிருந்து அடுத்த நேர மண்டலத்துக்குச் செல்லும் போது கைகடிகாரத்தில் நேரத்தை அங்குள்ள நேர மண்டலத்துக்கு ஏற்ப திருத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.

அவ்வளவாகப் படிப்பறிவில்லாத மக்களைக் கொண்ட இந்தியாவில் இப்படி மூன்று நேர மண்டலங்கள் இருக்குமானால் விவரமறியாத மக்கள் மிகவும் சிரமப்படுவார்கள். கமிட்டி எடுத்த முடிவு சரியானதே என்று சொல்லலாம்.

0 மறுமொழிகள்: