பெரியாறு அணை அருகே புதிய அணை - அமைதி காக்கும் தமிழக அரசு

கூடலூர் : பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட கேரள அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், தமிழக அரசு எவ்வித எதிர் நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருப்பது விவசாயிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீர்மட்டத்தை உயர்த்துவது என்பது கேள்விக்குறியாகியுள்ள நிலையில் அணையில் இருந்து மேலும் கூடுதல் நீர் எடுக்க புதிய திட்டங்களை தீட்டி உடனடியாக செயல்படுத்த தமிழக அரசு முன் வர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.1895ல் கட்டப்பட்ட பெரியாறு அணை தமிழ்நாட்டில் உள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. 152 அடி உயரம் கொண்ட இந்த அணை 15.5 டி.எம்.சி., நீர் கொள்ளளவு கொண்டது. இதில் 104 அடிக்கு மேல் உள்ள நீரை மட்டுமே தமிழ்நாடு பயன்படுத்த முடியும். கிட்டத்தட்ட 9 டி.எம்.சி., நீரை பயன்படுத்துவதில்லை. பெரியாறு அணையில் 104 அடிக்கு மேல் உள்ள நீரை விவசாயம் தவிர மின் உற்பத்திக்கும் குடிநீருக்கும் பயன்படுத்தப்படுகிறது. பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியான 9 ஆயிரத்து 777 சதுர கி.மீ.,க்கும், நீர் தேங்கியுள்ள 8 ஆயிரம் ஏக்கருக்கும் குத்தகைத் தொகையாக ரூ.40 ஆயிரத்தை கேரள அரசிற்கு ஆண்டுதோறும் தமிழக அரசு செலுத்தி வந்தது. 1960க்குப் பின்பு குத்தகை தொகை உயர்த்தி ரூ.2 லட்சத்து 57 ஆயிரத்து 789 ஐ ஆண்டுதோறும் செலுத்தி வருகிறது.

பாசனப்பரப்பு: பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீர் லோயர்கேம்பில் பெரியாறு நீர் மின்நிலையத்தில் மின் உற்பத்தி செய்யப்பட்ட பின்னர் பெரியாறு வழியாக வைகை அணையை சென்றடையும். வைகை அணையில் இருந்து பேரணை வழியாக மேலூர், சோழவந்தான், நிலக் கோட்டை, செக்கானூரணி, திருமங்கலம், திருப்பத்தூர், கள்ளந்திரி, திருப்புவனம், சிவகங்கை, இடையமேலூர், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்கிறது. இதன் மொத்த பாசனப்பரப்பு 2 லட்சத்து 8 ஆயிரத்து 144 ஏக்கராகும். இந்த நீரின் மூலம் 65 லட்சம் மக்கள் நேரடியாகவும், ஒரு கோடி மக்கள் மறைமுகமாகவும் பயன்பெற்றனர்.


தமிழக அரசின் கவனக்குறைவு: பெரியாறு அணை நீர்மூலம் தமிழ்நாட்டின் தென்பகுதியில் இரு போக விவசாயம், குடிநீர், மின்சார உற்பத்தி என திருப்திகரமாக இருந்த நிலையில் 1979ல் பெரியாறு அணை பலமிழந்து விட்டதாக கேரள அரசு புகார் கூறத் துவங்கியது. இந்த புகாரைத் தொடர்ந்து ரூ.பல கோடி மதிப்பீட்டில் அணையை தமிழக அரசு பலப்படுத்தியது. பலப்படுத்தும் பணி முடிவடையும் வரை அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக நிலைநிறுத்துவது எனவும், பணி முடிவடைந்தவுடன் மீண்டும் 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என கூறப்பட்டது. பலப்படுத்தும் பணி முடிவடைந்தபின்பும் பல்வேறு புகார்களைக் கூறி நீர் மட்டம் உயர்த்துவதை கேரள அரசு தடுத்தது. இதனால் பெரியாறு அணை நீரை நம்பி இருந்த தென் தமிழகத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒரு போக சாகுபடியாகவும், தரிசு நிலங்களாகவும் மாறின. தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கிய பின்னரும் நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசு மேலும் பல புதிய புகார்களைக் கூறி தடுத்து வருகிறது. பெரியாறு அணை பலவீனம் அடைந்து விட்டது என கேரள அரசு முதன்முதலில் புகார் கூறத் துவங்கியதில் இருந்து தற்போது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையும் கேரள அரசு ஏற்றுக் கொள்ளாத நிலை வரை தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை எதுவும் இல்லாததால் நீர்மட்டத்தை உயர்த்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.

136க்கு மேல் உயர்த்த முடியுமா?: பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு என அனைத்து அம்சங்களும் தமிழ்நாட்டிற்கு சாதகமாக இருந்து வந்த நிலையில் கேரள அரசின் இடைஞ்சல்களால் நீர்மட்டத்தை உயர்த்த முடியாத நிலையில் தமிழக அரசு உள்ளது. இனிமேலும், நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்து விட முடியுமா என்பதில் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் 136 அடிக்கு மேல் நீர்மட்டம் உயராமல் இருக்கும் வகையில் தமிழகப்பகுதிக்கு மேலும் கூடுதல் நீர் எடுக்க புதிய திட்டத்தை வழிவகுக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

தமிழகப்பகுதிக்கு நீர் எடுக்கும் வழிகள்: பெரியாறு அணையில் இருந்து தமிழகப்பகுதிக்கு 4 ராட்சத பைப் மூலம் மின் நிலையம் வழியாகவும், இறைச்சல் பாலம் வழியாகவும் நீர் எடுக்க முடியும். ராட்சத பைப்புகளில் தலா 400 கன அடி வீதம் 4 பைப்புகளில் ஆயிரத்து 600 கன அடி நீர் எடுக்கலாம். இவ்வாறு முழு அளவில் நீர் எடுக்க வேண்டுமெனில் 4 ஜெனரேட்டர்களும் பழுது ஏற்படா வண்ணம் எப்போது மின் உற்பத்தி செய்யும் வகையில் இருக்க வேண்டும். ஜெனரேட்டர் பழுது ஏற்பட்டால் நீர் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டு விடும்.


பாலைவனவாக மாற உள்ள தென்தமிழகம்: பெரியாறு அணைப் பிரச்னையில் 136 அடிக்கு மேல் உயர்த்தக்கூடாது என்பது கேரளாவின் கோரிக்கை. 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியும் அதை செயல்படுத்த முடியாத நிலையில் உள்ள தமிழக அரசு. தமிழக கேரள அரசுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள இந்த பிரச்னையால் பெரியாறு அணை நீரை நம்பியுள்ள தென் தமிழகம் பாலைவனமாக மாறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. பல்வேறு கட்சியினரும், அமைப்புகளும், பொதுமக்களும் அவ்வப்போது போராட்டம் நடத்துவதோடு சரி. அதன்பின்பு அந்த விஷயத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படுவதில்லை. இதை அரசும் கருத்தில் கொள்வதில்லை. இதனால், பெரியாறு அணை நீரை எவ்வளவு அதிகமாக தமிழகப்பகுதிக்கு எடுக்க முடியுமோ அதற்கான புதிய திட்டத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்.

நீரை சேமிக்க அணைகள் இல்லை: பெரியாறு அணையில் இருந்து கூடுதல் நீர் எடுக்க நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். அதே வேளையில் தென் தமிழகத்தில் நீரை சேமிக்க போதிய அளவு அணைகள் இல்லாதது. வேதனையான விஷயம். 1958ல் தேனி மாவட்டத்தில் வைகை அணை கட்டப்பட்டது. நீரை சேமிப்பதற்காக கட்டப்பட்ட இந்த ஒரு அணையிலும் தற்போது 25 அடி வரை வண்டல் மண் தேங்கியுள்ளதால் கூடுதல் தேக்கப்படும் நீரின் கொள்ளளவும் குறைந்துள்ளது. பெரியாறு அணையில் இருந்து திறந்து விடும் நீரை சேமிக்கும் அளவிற்கு கடந்த 50 ஆண்டுகளில் வைகை அணையைத் தவிர எந்த அணையும் தென்தமிழகத்தில் கட்டப்படவில்லை. மதுரை அருகில் உள்ள விரகனூர் அணையும், பார்த்திபனூர் அணையும் வரும் நீரை தடுக்க மட்டுமே முடியும் வகையில் உள்ள தடுப்பணையாகத்தான் உள்ளதே தவிர வைகை அணை போல் நீரைத் தேக்கி வைக்கும் அளவுக்கு இல்லை. கர்நாடகா காவேரியில் இருந்து வரும் நீர் தேக்கி வைக்க கபிணி, ஹேலங்கி உட்பட 7 அணைகள் கட்டியுள்ளது. ஆனால், தமிழகத்தில் பிரச்னைக்குரிய பெரியாறுஅணை நீரை சேமிக்க எந்த அணையும் கட்ட தமிழக அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது. இந்த நிலை இப்படியே போனால் தென் தமிழகம் விரைவில் பாலைவனமாக மாற உள்ளதை தடுக்க முடியாது.

அரசியல்வாதிகள் என்ன செய்கிறார்கள்: பெரியாறு அணை நீரை நம்பியுள்ள பாசனப்பகுதிகளான கம்பம், தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, மதுரை கிழக்கு, மேற்கு, மத்திய தொகுதி, மேலூர், நத்தம், சோழவந்தான், திருமங்கலம், சமயநல்லூர், திருப்பரங்குன்றம், திருப்பத்தூர், சிவகங்கை, ராமநாதபுரம், நிலக்கோட்டை, மானாமதுரை, திண்டுக்கல், பரமக்குடி, சேடப்பட்டி ஆகிய சட்டசபை தொகுதியில் உள்ள 21 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். பெரியகுளம், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 லோக்சபா தொகுதி எம்.பி.,க்கள் உள்ளனர்.

இவர்களில் ஒரு சில எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் அவ்வப்போது போராட்டம் நடத்தி விட்டு கப்சிப் என இருந்து விடுகின்றனர். இவர்கள் தவிர எண்ணிலடங்கா அரசியல்பிரமுகர்கள் தொடர் நடவடிக்கை எதிலும் இறங்காமல் எனக்கென்ன என்று மவுனமாக இருக்கின்றனர். கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளைப் பொறுத்தவரை ஏலம், மிளகு, காப்பி, ரப்பர் ஆகிய விவசாயங்களை கேரளாவில் அதிக அளவில் செய்து வருகின்றனர். பெரியாறு அணைப் பிரச்னையை கையில் எடுத்து போராடினால் கேரளாவில் உள்ள தங்களது விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடும் என ஒதுங்கியே உள்ளனர்.பிரச்னைக்கு தீர்வு: ஒரு சில எம்.எல்.ஏ.,க்கள், ஒரு சில அரசியல்வாதிகள், ஒரு சில கட்சியினர், ஒரு சில விவசாயிகள் என போராட்டம் நடத்திக் கொண்டிருந்தால் இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படாது.

புதிய அணை கட்ட நடவடிக்கை: பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டியே தீருவோம் என கங்கணம் கட்டிக் கொண்டு கேரள அரசு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. கேரள சட்டசபையில் இதற்கான தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது. புதிய அணை கட்டுவதற்கு ரூ.260 கோடி ஒதுக்கீடு செய்து அதற்கான ஆய்வுப் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது. ஆனால் தமிழக அரசு சார்பில் எவ்வித சலனமும் இல்லாமல் அமைதியாகவே உள்ளது. தமிழக அரசின் இந்த அமைதி நடவடிக்கை தமிழக விவசாயிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 136 அடிக்கு மேல் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு காலதாமதம் ஆகும் பட்சத்தில் அணையில் இருந்து மேலும் கூடுதல் நீர் எடுக்க என்ன வழி உள்ளது என்பதை தமிழக அரசு ஆராய்ந்து அதற்கான உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


கேரள அரசு என்ன சொல்கிறது?: 1976ம் ஆண்டு கேரள அரசு இடுக்கி அணையைக் கட்டியது. 555 அடி உயரம் கொண்ட இடுக்கி அணை, பெரியாறு அணையை விட 4 மடங்கு பெரியது. இடுக்கி அணையில் 800 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட நீர்மின் நிலையத்தையும் கட்டியது. இடுக்கி அணை கட்டுவதற்கு முன்பு வரை பெரியாறு அணை பிரச்னையின்றி இருந்தது. இடுக்கி அணையில் மின் உற்பத்திக்கு நீர்பற்றாக்குறை ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த 1979ல் பெரியாறு அணை பலவீனம் அடைந்து விட்டது என கேரள அரசு புகார் கூறத் துவங்கியது. பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் உள்ள நீரை இடுக்கி அணைக்கு கொண்டு சென்று விடலாம் என்ற திட்டத்தில் புகார்களை கேரள அரசு அடுக்கிக் கொண்டே வருகிறது.பெரியாறு அணை பலவீனம் அடைந்து விட்டது என தொடர்ந்து புகார் கூறி வரும் கேரள அரசு, 136 அடிக்கு கீழ் உள்ள நீரை தமிழகம் எடுக்க எவ்வித கட்டுப்பாடும் விதிக்கவில்லை. எவ்வளவு நீர் வேண்டுமென்றாலும் தமிழகம் எடுத்துக் கொள்ளட்டும் என ஒவ்வொரு முறையும் பெரியாறு அணையைப் பார்வையிட வரும் கேரள அமைச்சர்கள், அதிகாரிகள் கூறிக் கொண்டுதான் உள்ளனர். பெரியாறு அணையில் இருந்து 136 அடிக்கு கீழ் உள்ள நீரை மேலும் ஒரு சுரங்கம் அமைத்து கூடுதல் நீரை எடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டால் இப்பிரச்னைக்கு முடிவு வந்து விடும் என இடுக்கி மாவட்ட ஐ.என்.டி.யு.சி., யின் தலைவராக இருந்த பி.ஏ.ஜோசப் சில ஆண்டுகளுக்கு முன்பு கேரள அமைச்சர்கள் மற்றும் கேரள அதிகாரிகளின் முன்னிலையில் பகிரங்கமாக கூறினார். அவரின் கருத்தை கேரள தரப்பில் இதுவரை எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. அதனால் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை ஒரு பக்கம் இருந்தாலும், தமிழகப்பகுதிக்கு மேலும் கூடுதல் நீர் எடுக்க என்ன செய்ய வேண்டும் என ஆராய்ந்து அதை மேற்கொள்ளவேண்டியது தமிழக அரசின் அவசியமாகும்.

தினமலர், 19-08-2007

0 மறுமொழிகள்: